பாஞ்சாலி புகழ் காக்க

மகாபாரதம் என்ற இதிகாசத்தின் அறிமுகம்  ராஜாஜி எழுதிய வியாசர் விருந்து வழியாகத்தான் கிடைத்தது. பின்னர் டிவியில் பி ஆர் சோப்ரா மெகா தொடரும், சோ எழுதிய விளக்கங்களும்தான் துணை. நிறைய கதாபாத்திரங்கள், பல துணை / கிளை கதைகள், அவ்வப்போது கதைக்குள் கதை என்ற பிரமிக்க வைக்கும் layers, அபாரமான திரைக்கதை அமைப்பு – சலிப்பதேயில்லை.

சில மாதங்களுக்கு முன்  Chitra Banerjee Divakaruni எழுதிய Palace of illusions என்ற புத்தகம் படித்தேன். மகாபாரதக்கதையை திரௌபதியின் பார்வையில் சொல்லும் வித்தியாசமான முயற்சி என்ற அளவில் கொஞ்சம் சுவாரஸ்யம்.

குர்சரண் தாஸ் எழுதிய The Difficulty of being Good மகாபாரதத்து மாந்தர்களை அலசும் விதம் அருமை. M T வாசுதேவன் நாயர் எழுதிய ரண்டமூழம் பீமனின் பார்வையில் மகாபாரதம் சொல்கிறது என்று கேள்வி.   இந்திய விடுதலைப் போராட்டத்தையே பாரதப் போராகவும், பாஞ்சாலியை பாரத தேவியாகவும் உருவகப்படுத்தி மகாகவி படைத்ததுதான் பாஞ்சாலி சபதம் என்று படித்திருக்கிறேன்.

தெரிந்த கதை, களம், ஆனால் பாத்திரங்களை / சம்பவங்களை வேறு கோணத்தில் காட்டும் historical fiction . இதனால் நம் மனதில் இருக்கும் நிறைய பிம்பங்கள் கலையும் அபாயம் உண்டு.

சரி நாமும் இது போல் ஏதாவது முயற்சி செய்யலாமா?  பாஞ்சாலியின் கூந்தலினைக் கையினால் பற்றி இழுத்துக் கொண்டு போய்க்கேடுற்ற மன்னனின் தர்மம் கெட்ட சபையில் சேர்த்தான் துச்சாதனன். .திரௌபதி சபதம் போடாமல் கண்ணீர் விட்டு அழும் ஒரு சராசரியான பெண்ணாக இருந்தால் என்ன சொல்லியிருப்பாள்? இந்தக் காட்சியில் ஒரு திரைப்படப்பாடலை ஒலிக்க  விட்டால்?

ராமன் எத்தனை ராமனடி என்ற படத்தில் கண்ணதாசன் எழுதிய நிலவு வந்து பாடுமோ என்ற பாடல் (இசை எம் எஸ் விசுவநாதன் பாடியவர் பி சுசீலா) http://www.raaga.com/player4/?id=27068&mode=100&rand=0.446934545179829

 நிலவு வந்து பாடுமோ சிலை எழுந்து ஆடுமோ

பலர் நிறைந்த சபையினிலே பண்பு கூட மாறினால்…

நிலவு வந்து பாடுமோ சிலை எழுந்து ஆடுமோ

தலை குனிந்த பெண்களும் தலை நிமிர்ந்த ஆண்களும்

நிலை குலைந்து போன பின் நீதி எங்கு வாழுமோ

அனுபவிக்கும் அவசரம் ஆடை மாற்றும் அதிசயம்

முடிவில்லாத போதையில் முகம் மறந்து போகுமோ

பாரதியின் பாஞ்சாலி கோபம் கொப்பளிக்க கேட்டதை இந்த நாயகி வருத்தமாகக் கேட்கிறாள். இந்த திரைப்பட நாயகி சபதம் போடும் வகையில்லை. விடியும்போது விடியட்டும் என்று விரக்தியில் பாடுகிறாள். பலர் நிறைந்த சபை, பண்பு கூட மாறினால், நீதி எங்கு வாழுமோ, ஆடை மற்றும் அதிசயம் என்று கௌரவர் சபை பற்றி நிறைய hints கொடுக்கிறார் கவிஞர்.

 இதே காட்சிக்கு இன்னொரு பாடலையும் பொருத்தலாம் என்று தோன்றுகிறது. ஆயிரத்தில் ஒருவன் படத்தில் வாலி எழுதிய ஆடாமல் ஆடுகிறேன் என்ற பாடல் (இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடியவர் பி சுசீலா)  http://www.raaga.com/player4/?id=46631&mode=100&rand=0.26648150896653533

ஆடாமல் ஆடுகிறேன் பாடாமல் பாடுகிறேன்

ஆண்டவனைத் தேடுகிறேன் வா வா வா

விதியே உன் கை நீட்டி வலை வீசலாம்

ஊரார்கள் என்னை பார்த்து விலை பேசலாம்

அழகென்ற பொருள் வாங்க பலர் கூடலாம்

அன்பென்ற மனம் வாங்க யார் கூடுவார்

குயிலே உன் சிறகொடித்து இசை கேட்கிறார்

மயிலே உன் காலொடித்து நடம் பார்க்கிறார்

இளம்பெண்ணின் கண்ணீரை யார் மாற்றுவார்

எறிகின்ற நெஞ்சைத்தை யார் தேற்றுவார்

இதுவும் வஞ்சகர் கூடி நிற்கும் இடம். என்ன செய்வதென்று தெரியாமல் நிற்கும் நாயகி. அடிமையாக நடத்தப்படுகிறாள். வாலி பாஞ்சாலியின் நிலையை சொல்வது போலவே எழுதுகிறார். பாஞ்சாலி கண்ணனை கூப்பிட்டாள். இவள் ஆண்டவனைத் தேடுகிறாள்.

சரியாக இருக்கிறதா? நீங்கள் சொல்லுங்கள்

மோகனகிருஷ்ணன்

202/365