ஆறு நூறாகும்

 • படம்: மக்களைப் பெற்ற மகராசி
 • பாடல்: மணப்பாறை மாடு கட்டி
 • எழுதியவர்: மருதகாசி
 • இசை: கே. வி. மகாதேவன்
 • பாடியவர்: டி. எம். சௌந்தர்ராஜன்
 • Link: http://www.youtube.com/watch?v=WQQwUqxBaFg

ஆத்தூரு கிச்சடிச் சம்பா பாத்து வாங்கி வெத வெதச்சு

நாத்தப் பறிச்சு நட்டுப்போடு சின்னக்கண்ணு, தண்ணிய

ஏத்தம் பிடிச்சு எறச்சுப் போடு செல்லக்கண்ணு!

கருத நல்லா விளையவெச்சு, மருத ஜில்லா ஆள வெச்சு அறுத்துப் போடு!

சமீபத்தில் சீனாவில் அரிசி விளைச்சல் எப்படி நடக்கிறது என்பதுபற்றி ஒரு காமிக்ஸ் புத்தகம் பார்த்தேன். அந்த ஊர் விவசாயத்தின் ஒவ்வொரு படியையும் கதைபோல, அழகான ஓவியங்களுடன் எளிய ஆங்கிலத்தில் குழந்தைகளுக்குப் புரியும்படி விளக்கியிருந்தார்கள்.

அந்தப் புத்தகத்தைப் படித்த என் மகள், ‘அப்பா, நாம இப்போ சாப்பிடற அரிசியெல்லாம் சீனாவிலேர்ந்துதான் வருதா?’ என்று கேட்டாள்.

‘இல்லை கண்ணு, இதெல்லாம் நம்ம ஊர்ல விளையறதுதான்’ என்றேன்.

‘அப்போ நம்ம ஊர்ல விவசாயம் எப்படி நடக்குதுன்னு தெரிஞ்சுக்கணுமே, ஏதாவது புக் இருக்கா?’

’தேடிப் பார்க்கறேன்’ என்று அவளிடம் சொன்னேனேதவிர, அப்படி எதுவும் புத்தகம் தமிழில் எழுதப்பட்டிருக்குமா என்பது சந்தேகமே. நாம்தான் விவசாயம், ராணுவம் போன்ற அத்தியாவசியமான பணிகளையெல்லாம் ‘taken for granted’ ஆகக் கண்டுகொள்ளாமல் விடுவதில் கைதேர்ந்தவர்களாயிற்றே!

நேற்றைக்கு, நண்பர் வினோத் அனுப்பிய ஓர் இணைப்பில் இந்த ‘மணப்பாறை மாடு கட்டி’ பாடலைக் கேட்டுக்கொண்டிருந்தபோது, அந்த ஆதங்கம் தீர்ந்தது. நம் ஊர் விவசாயத்தின் அத்துணை அம்சங்களையும் எளிமையாக ஒரு பாட்டுக்குள் சொல்லிவிட்டார் மருதகாசி:

 • (ஏரில்) மாட்டைக் கட்டுதல்
 • வயலை உழுதல்
 • (உரமாகப்) பசும் தழையைப் போடுதல்
 • நல்ல விதை நெல்லைத் தேர்ந்தெடுத்து வாங்குதல்
 • விதைத்தல்
 • நாற்றைப் பறித்து வேறு இடத்தில் நடுதல்
 • ஏற்றம் பிடித்துத் தண்ணீர் பாய்ச்சுதல்
 • நெற்கதிர்கள் நன்கு விளைந்தவுடன், அவற்றை அறுவடை செய்தல்
 • அறுத்த நெற்கதிர்களை களத்துமேட்டில்அடித்துத் தூற்றுதல்
 • நெல்மணிகளை அளந்து மூட்டைகளாகக் கட்டுதல்
 • மூட்டைகளை வண்டியில் ஏற்றுதல்
 • சந்தைக்குக் கொண்டுசெல்லுதல்
 • நெல் தேவைப்படும் வியாபாரிகளிடம் விற்பனை செய்தல்
 • நிறைவாக, விற்பனைப் பணத்தை எண்ணுதல்

மருதகாசி அதோடு நிறுத்துவதில்லை, அந்தப் பணத்தை எப்படிச் செலவு செய்யவேண்டும் என்றும் சொல்லிவிடுகிறார், ‘விவசாயம் செய்யத் தெரிந்த உனக்கு, அதைச் சிக்கனமாகச் செலவழிக்கத் தெரியாது, உங்க அம்மா கையில் கொடுத்துவிடு, அவர்கள் ஆறை நூறாகப் பெருக்குவார்கள்’ என்று நிறைவு செய்கிறார்.

கேட்பதற்கு எளிமையாகத் தோன்றும் இந்தப் பாடல், எழுதுவதற்கு மிகவும் சிரமமானது. விஷயத்தையும் நிறைவாகச் சொல்லவேண்டும், எதுகை, மோனை, இயைபுக்கும் குறைச்சல் இருக்கக்கூடாது.

மருதகாசி இந்தப் பாடலை எழுதியபிறகு மெட்டு அமைத்தார்களா, அல்லது ஏற்கெனவே அமைக்கப்பட்ட மெட்டு ஒன்றில் இந்த அம்சங்கள் அனைத்தையும் அவர் கச்சிதமாகப் பொருத்தினாரா என்பது தெரியவில்லை. எதுவானாலும், நிச்சயம் பெரிய சாதனைதான்!

***

என். சொக்கன் …

20 06 2013

201/365