’தூள்’தர்ஷன்

இன்றைக்கு எத்தனை தமிழ் தொலைக்காட்சிகள் இருக்கின்றன என்று கேட்டால் விடை சொல்வது மிகக்கடினம். அத்தனை தொலைக்காட்சிகள். பட்டியல் போட்டால் எப்படியும் சிலவற்றை சொல்லாமல் விட்டுவிடுவோம்.

ஆனால் இன்றைக்கு இருபத்துமூன்று ஆண்டுகளுக்கு முன்னால் (1990) ஒரேயொரு தமிழ் தொலைக்காட்சிதான் இருந்தது என்பது இன்றைய தலைமுறைக்கு வியப்பாக இருக்கும். அதற்கும் பத்து ஆண்டுகளுக்கு முன்(1980) தமிழ்நாட்டில் சென்னையில் மட்டுமே தொலைக்காட்சி இருந்தது என்பது இன்னும் அதிர்ச்சி கலந்த வியப்பான செய்தியாக இருக்கும்.

சென்னை தொலைக்காட்சி மட்டும் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில் அதில் வரும் நிகழ்ச்சிகள் அனைவருக்கும் நன்றாக நினைவில் இருந்தன. இத்தனைக்கும் மாலை ஐந்து மணி முதல் இரவு ஒன்பது மணி வரைக்கும்தான் தமிழ் நிகழ்ச்சிகள். அதற்குப் பிறகு தேசிய நீரோட்டத்தில் இந்தி நிகழ்ச்சிகள் தொடரும்.

வயலும் வாழ்வும் என்றொரு நிகழ்ச்சி இருந்தது. உழவு பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சி அது. அந்த நிகழ்ச்சி தொடங்கும் போது வரும் “தாய் நிலம் தந்த வரம் தாவரம், அது தழைக்கத் தழைக்க மகிழ்வார்கள் யாவரும்” என்ற பாடல் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதனால் இசையமைத்து பாடப்பட்டது.

இன்னும் எத்தனையோ நிகழ்ச்சிகள். இவைகளையெல்லாம் வைத்து ஒரு திரைப்படப் பாடல் வந்தது. பாடல் என்னவோ காதல் பாடல்தான். ஆனால் அந்தக் காதலைப் பாடும் போது புதுமையாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் சேர்த்துப் பொருத்தமாகப் பாடுவார்கள்.

என்ன பாடல் என்று கேட்கிறீர்களா? சொல்கிறேன். கல்யாண அகதிகள் என்றொரு படம் பாலச்சந்தர் இயக்கத்தில் வந்ததே.. அதுவேதான்.

படத்துக்கு இசை வி.எஸ்.நரசிம்மன். அவருடைய இசையில் இசையரசி பி.சுசீலாவும் ராஜ் சீத்தாராமனும் இணைந்து பாடிய பாடல்தான் நான் சொல்லும் பாடல். அதைவிட முக்கியமானவர் பாடலை எழுதிய வைரமுத்து அவர்கள்.

பாடலைக் கண்டுபிடித்து விட்டீர்களா?

மனசுக்குள் உட்கார்ந்து மணியடித்தாய்
என் மௌனத்தை இசையாக்கி மொழிபெயர்த்தாய்
இளகாத என் நெஞ்சில் இடம் பிடித்தாய்
இன்று என் காதல் தேருக்கு வடம் பிடித்தாய்

அதே பாட்டுதான். நல்ல இனிய பாடல். சரி. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வரும் சரணத்துக்கு நேராகப் போகலாம்.

கண்களில் காதலின் முன்னோட்டம் பார்த்த பின்
இதயம் முழுதும் எதிரொலி கேட்டேன்
மாலையில் சோலையில் இளம் தென்றல் வேளையில்
காண்போம் கற்போம் என்றுனைக் கேட்டேன்
கண்மணிப் பூங்காவில் காத்திருந்தேன்
கண்ணில் தடங்கலுக்கு வருத்தம் சொன்னேன்
விழியில் ஒலியும் ஒளியும் கண்டேன்

இந்தச் சரணத்தில் வருகின்ற நிகழ்ச்சிகளுக்கு ஒரு சிறு அறிமுகம் தருகிறேன்.

முன்னோட்டம் – இந்த நிகழ்ச்சியில் வரும் வாரம் வரப்போகும் நிகழ்ச்சிகளை நாள் வாரியாகச் சொல்வார்கள். ஞாயிற்றுக் கிழமை மாலையில் என்ன படம் போடுவார்கள் என்பதை அறிந்து கொள்ள எல்லாரும் ஆவலாகக் காத்திருப்பார்கள். ஆனால் “தமிழ்த் திரைப்படம்” என்று மட்டும் சொல்லி கடுப்படிப்பார்கள். என்றைக்காவது ஒரு முறை தப்பித் தவறி படத்தின் பெயரைச் சொல்லி மக்களை இன்பக் கடலில் மூழ்கடிப்பார்கள்.

எதிரொலி – இந்த நிகழ்ச்சியில் வாசகர் அனுப்பும் விமர்சனக் கடிதங்கள் படிக்கப்படும். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு விளக்கங்களும் கொடுக்கப்படும். ஆனாலும் மக்கள் விளம்பர இடைவேளையே இல்லாத இந்த முப்பது நிமிட நிகழ்ச்சியையும் ரசிக்கத்தான் செய்தார்கள். அந்த முப்பது நிமிடங்களும் கேமராவின் கோணம் மாறவே மாறாது என்பது சிறப்பு. முன்னோட்டத்தில் ஞாயிறு திரைப்படத்தின் பெயர் சொல்லப்படுவதில்லை என்று சில குறும்பர்கள் எதிரொலிக்குக் கடிதம் எழுதிக் கேட்டு ஏமாந்த கதைகளும் உண்டு.

இளந்தென்றல் – இது இளைஞர்களுக்கான நிகழ்ச்சி. இளைஞர்களுக்கு உண்மையிலேயே பயனுள்ள நிகழ்ச்சியாக இது இருந்தது என்னவோ உண்மைதான்.

காண்போம் கற்போம் – இது கல்வி நிகழ்ச்சி. அறிவியல் கணக்கு உயிரியல் என்று பலப்பல பாடங்கள் நடத்தப்படும். +2 மாணவர்களுக்காக தேர்வுக்கு முன்னர் முக்கிய கேள்விகளைப் பாடமாக நடத்தினார்கள்.

கண்மணிப்பூங்கா – இது குழந்தைகளுக்கான நிகழ்ச்சி. ஒவ்வொருநாளும் மாலை வேளையில் வரும்.

தடங்கலுக்கு வருந்துகிறேன் – இது நிகழ்ச்சியல்ல. நிகழ்ச்சியில் தடங்கல் உண்டானால் காட்டப்படும் அட்டை. இதையே விதவிதமாக எழுதிவைத்துக் கொண்டு காட்டுவார்கள். தடங்கலுக்கு வருந்தும் போதும் தொலைக்காட்சியையே பார்த்துக் கொண்டிருக்கும் மக்கள் கூட்டம். திடீரென அங்கும் இங்கும் திரும்பும் போது நிகழ்ச்சி தொடக்கி விட்டால்?

ஒலியும் ஒளியும் – இது திரைப்படப் பாடல் நிகழ்ச்சி. ஒவ்வொரு வெள்ளி இரவும் ஒட்டு மொத்தத் தமிழகமும் உட்கார்ந்து பார்த்த நிகழ்ச்சி. அப்போதெல்லாம் தொலைக்காட்சி இல்லாதவர்கள் தொலைக்காட்சி இருக்கும் பக்கத்து வீடுகளுக்குச் சென்று விடுவார்கள். பெரிய கூட்டமே உட்கார்ந்து நிகழ்ச்சியை பார்க்கும்.

இன்னும் சித்ரஹார், சித்ரமாலா என்று எத்தனையெத்தனையோ நிகழ்ச்சிகள். எல்லாம் சொல்லச் சொல்ல இனிக்குதடா வகைதான்.

இன்று எத்தனையெத்தனையொ தொலைக்காட்சிகள் இருக்கின்றன. அனைத்திலும் பெரும்பாலும் திரைப்பட நிகழ்ச்சிகள்தான்.

ஆனால் வாரம் ஒரு திரைப்பாடல் நிகழ்ச்சி, ஒரு திரைப்படம், எப்போதாவது மலரும் நினைவுகள் என்று திரைப்படம் சார்ந்த நிகழ்ச்சிகளைக் குறைவாகக் கொடுத்த சென்னை தொலைக்காட்சி உண்மையிலேயே மனதுக்கு நிறைவானது.

பாடல் – மனசுக்குள் உட்கார்ந்து மணியடித்தாய்
வரிகள் – கவிப்பேரரசு வைரமுத்து
பாடியவர்கள் – இசையரசி பி.சுசீலா, ராஜ் சீத்தாராமன்
இசை – வி.எஸ்.நரசிம்மன்
படம் – கல்யாண அகதிகள்
பாடலின் சுட்டி – http://youtu.be/wEjZJ7G8uL0

அன்புடன்,
ஜிரா

197/365