நல்ல சகுனம் நோக்கிச் செல்லடி!

இன்னிக்கு யார் முகத்திலே முழிச்சேனோ தெரியலை எதுவும் சரியா நடக்கலே என்ற புலம்பல்களை நாம் கேட்டிருப்போம். அதே போல் வெளியே கிளம்பும்போது எங்கே போறீங்க என்று யாராவது கேட்டுவிட்டால் அவ்வளவுதான். நாம் நினைத்த காரியம் தடைபடுமோ என்று மனம் சஞ்சலப்படும். பூனை குறுக்கே போவது , காகம் கத்தினால் உறவினர் வருவார்கள் , 13ம் நம்பர் ராசியில்லை, மணியோசை கேட்டால் நல்லது –  இப்படி ஏராளமான நம்பிக்கைகள்.

வரப்போவதை ஏதோ ஒரு வகையில் அடையாளம் காட்டும் நிகழ்வுகளுக்கு  பொதுப் பெயர் நிமித்தங்கள். Omen என்று பொதுவாகச் சொல்வது நிமித்தம்தான். சகுனம் என்று நாம் உபயோகிக்கும் வார்த்தை இதன் subset தான்.  பறவைகளால் அறியப்படும் நிமித்தங்கள் சகுனம் ஆகும் .One for sorrow, Two for joy,என்ற ஆங்கில நர்சரி ரைம் சொல்வதும் இதுதானோ?

தசரதன்  மிதிலையில் சில நாட்கள் தங்கி பின்னர் அயோத்திக்குப் புறப்பட்டுச் சென்றான். அப்போது சில தீய நிமித்தங்கள் தோன்றின

ஏகும் அளவையின் வந்தன.

     வலமும் மயில். இடமும்

காகம் முதலிய. முந்திய

      தடை செய்வன; கண்டான்;

நாகம் அனன். ‘இடை இங்கு உளது

      இடையூறு’ என நடவான்;

மாகம் மணி அணி தேரொடு

       நின்றான். நெறி வந்தான்.

மயில்கள் இடமிருந்து வலமாகச் சென்றன. முதலில் இது நல்ல நிமித்தம். அடுத்து காகங்கள் வலமிருந்து இடமாகச் சென்றன. இது தீய சகுனமாக இருந்ததால் தசரதன் தயங்கி நின்றான் இதன் பலன் கேட்டு அதன்பின்தான் பயணம் தொடர்கிறான் என்று குறிப்பிடுகிறார் கம்பர்.

கீதையின் ஆரம்பத்தில் யுத்தம் ஆரம்பிக்குமுன் அர்ஜுனன் பகவானிடம் சொல்கிறான். ‘கெட்ட சகுனங்களைப் பார்க்கிறேன்’ என்று நாம் சொல்வதைத்தான், ‘விபரீதமான நிமித்தங்களைப் பார்க்கிறேன்’என்கிறான்.

குமரி கோட்டம் என்ற படத்தில் வாலி எழுதிய பாடல் (இசை எம் எஸ் விஸ்வநாதன் பாடியவர்கள் டி எம் எஸ், எல் ஆர் ஈஸ்வரி) http://www.youtube.com/watch?v=cHRX3Lhruzg பெண்ணுக்கு இடது கண் துடித்தால் நல்ல சகுனம் என்பதை சொல்கிறார்.

நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போம்

என காதல் தேவதை சொன்னாள்

என் இடது கண்ணும் துடித்தது

உனைக் கண்டேன் இந்நாள் பொன்னாள்

வைரமுத்து முதல்வன் படத்தில் உளுந்து வெதைக்கயிலே என்ற பாடலில் (இசை ஏ ஆர் ரஹ்மான் பாடியவர்கள் ஸ்வர்ணலதா ஸ்ரீநிவாஸ்) நல்ல சகுனங்களை பட்டியல் போடுகிறார்

https://www.youtube.com/watch?v=5410bc0lD2w

உளுந்து வெதைக்கயிலே சுத்தி ஊதக்காத்து அடிக்கயிலே

நான் அப்பனுக்குக் கஞ்சி கொண்டு ஆத்துமேடு தாண்டிப் போனேன்

கண்ட நல்ல நல்ல சகுனத்தில் நெஞ்சுக்குழி பூத்துப் போனேன்

என்னென்ன நல்ல சகுனங்கள் சொல்கிறார் பாருங்கள்

வெக்கப்படப்பில் கவுளி கத்த வலது பக்கம் கருடன் சுத்த

தெருவோரம் நெறகுடம் பார்க்கவும் மணிச்சத்தம் கேட்கவும் ஆனதே

ஒரு பூக்காரி எதுக்க வர பசும் பால்மாடு கடக்கிறதே

இப்படி எல்லா நல்ல சகுனங்களும் சேர்ந்து வந்தால் என்னாகும்? தெய்வம் நாம் வீடு தேடி வந்து வரம் தரும் என்கிறார்.

இனி என்னாகுமோ ஏதாகுமோ

இந்த சிறுக்கி வழியில் தெய்வம் புகுந்து வரம் தருமோ

இந்த சகுனமோ நிமித்தமோ அதுவே பலனை உண்டாக்குவதில்லை. முன்பே நிர்ணயிக்கப்பட்ட நிகழ்வுகளுக்கு indicator  ஆக மட்டுமே இருக்கிறது .சத்ருக்களை வதம் செய்தால் பாவம் வருமே!”என்று அழுத அர்ஜுனனிடம், “இந்த யுத்தத்தில் இவர்களை வதைப்பதாக நான் ஏற்கெனவே தீர்மானம் செய்துவிட்டேன் அதனால் இவர்களைக் கொல்பவன் நான் தான். நீ வெறும் கருவியாக மட்டும்  இரு என்று கண்ணன் சொல்வதும் அதுவே,

இதையெல்லாம் கிண்டல் செய்பவர்களும் உண்டு. ஆனால் அவர்களும் தங்கள் வாகனங்களின் கூட்டு எண் 8 ஆக இல்லாமல் பார்த்துக்கொள்கிறார்கள் – Resale பண்ணமுடியாது சார் அதுனாலதான் என்ற ஏதாவது ஒரு காரணம் சொல்லி.  Faith begins where logic ends!

மோகனகிருஷ்ணன்

196/365