முதிய நரி

  • படம்: நாயகன்
  • பாடல்: நிலா அது வானத்து மேலே
  • எழுதியவர்: இளையராஜா
  • இசை: இளையராஜா
  • பாடியவர்: இளையராஜா
  • Link: http://www.youtube.com/watch?v=MkHgF_uGjyU

ஓடுற நரியில ஒரு நரி கிழ நரிதான், இங்கு

ஆடுற நரியில பல நரி குள்ள நரிதான்!

சில தினங்களுக்குமுன்னால் இந்தப் பாட்டைக் கேட்டுக்கொண்டிருந்தபோது, இந்த வரியைக் கிண்டலடித்து எழுதியிருந்தேன், இப்படி: ‘ஓடுகின்ற நதிகளிலே ஒன்றுமட்டும் முதிய நரி’.

அதற்கு நண்பர் கருணாகரன் பதிலடியாக, ‘நீங்க சொல்ற பாட்டு எனக்குத் தெரியும்’ என்றார், ‘வெண்ணிலவு வானத்திலே, பெண்ணிலவு ஓடத்திலே, அதானே?’

இந்தப் பாடல் இளையராஜாவே எழுதி, இசையமைத்துப் பாடியது என்பதால், ரெக்கார்டிங்கின்போது காமாசோமாவென்று என்னவெல்லாம் வார்த்தைகள் அவருக்குத் தோன்றியதோ அவற்றை அப்படியே பாடிவிட்டார் என்று நினைக்க வாய்ப்புண்டு. உண்மை அதுவல்ல.

கிராமங்களில் குழந்தைகளுக்கு ர, ற, ன, ண, ந போன்ற உச்சரிப்புகள் சரியாக வரவேண்டும் என்பதற்காகச் சில வேடிக்கை வாசகங்களைத் திரும்பத் திரும்பச் சொல்லச் செய்வார்கள், அதன்மூலம் அவர்களுடைய நாக்கும் உதடுகளும் சரியான இடத்தில் சரியானபடி மடங்கும், உச்சரிப்புப் பிழைகள் இராது.

அப்படி ஒரு வாக்கியம்: ’ஓடுகிற நரியிலே ஒரு நரி சிறு நரி, சிறு நரி முதுகிலே ஒரு பிடி நரை மயிர்’.

கூச்சப்படாமல் வாய்விட்டுச் சொல்லிப்பாருங்கள், குழந்தைகளுக்கும் சொல்லிக்கொடுங்கள், ரகரமும் றகரமும் சரியாகக் கலந்து வரும்போது வரும் அழகான ஒலி உங்களைக் கிறங்கடிக்கும்!

***

என். சொக்கன் …

14 06 2013

195/365