அல்லும் மல்லும்

காதலில் விழுவது எளிது. ஆனால் காதலைக் கையாள்வது? அது மிகமிகக் கடினம். அப்படிக் காதல் கொண்ட இதயம் ஒன்று காதலனை ஒரு நாள் காணாவிட்டாலும் தவிக்கும். விழிக்கும். என்ன செய்வதென்று துடிக்கும். உயிரை உலுக்கும் அந்தத் துன்பத்தை அந்திமந்தாரை திரைப்படத்துக்காக வைர வரிகளில் கொண்டு வந்துள்ளார் வைரமுத்து.

ஒரு நாள் ஒரு பொழுது உம் மூஞ்சி காங்காம உசுரே அல்லாடுதே
மறுநாள் வரும் வரைக்கும் பசி தூக்கம் கொள்ளாம மனசு மல்லாடுதே

உசுரு அல்லாடுதாம். அப்படியென்றால்?

அல்லாடுகிறான் என்று தெற்கத்திப் பக்கம் சொல்லும் வழக்கம் உண்டு. அதாவது ஒரு நிலையில் இல்லாமல் அங்குமிங்கும் ஓடித் திண்டாடுவதைத்தான் அல்லாடுவது என்பார்கள்.

இதை வேராக வைத்து வந்ததுதான் அலை. கடலின் மேற்பரப்பில் ஒரு நிலையாக இல்லாமல் நீர் முன்னும் பின்னும் திண்டாடுவதால்தான் அதற்கு அலை என்று பெயர்.

அதே போல ஒரே இடத்தில் இல்லாமல் பல இடங்களைச் சுற்றினால் அதற்கும் அலைவது என்றுதான் பெயர். இப்படி ஓயாமல் அலைந்தால் என்னவாகும்? ”அலு”ப்பாகும்.

அல்-அலை-அலு-அலைக்கழி…

என்ன சொற்களுக்கு இடையே உள்ள தொடர்பை விளக்கினால் தலை சுற்றுகிறதா? வாழ்வியலோடு கலந்து வந்த சொற்கள் அல்லவா. இந்த அல்-லை வைத்தே இன்னும் நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்.

சரி. அல்லாடுதலை விட்டு விடுவோம். அடுத்த வரியில் இருக்கும் மல்லாடு என்ற சொல்லையும் சற்று பார்க்கலாம்.

மல் என்றால் சட்டென்று புரியாது. மல்லுக்கட்டு என்று சொன்னால் உடனே புரிந்து விடும்.

மல்+கட்டுதல் = மற்கட்டுதல்
மல்+போர் = மற்போர்

இப்போது விளக்காமலேயே மல் என்றால் என்னவென்று புரிந்திருக்கும். மல்லாடுதல் என்றால் இன்றைய எளிய தமிழில் சண்டை போடுதல் என்று பொருள்.

இந்த மல்லாடு என்ற சொல்லை பழைய இலக்கியத்திலும் பார்க்கலாம். அதுவும் திருநாவுக்கரசரே இந்தச் சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார்.

ஆறாம் திருமுறையாகத் தொகுக்கப் பட்ட திருக்காளத்தி திருத்தாண்டகத்தில் ஒரு பாடலில் மல்லாடு என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார் அப்பரடிகள்.

இல்லாடிச் சில்பலிசென் றேற்கின் றான்காண்
இமையவர்கள் தொழுதிறைஞ்ச இருக்கின்றான்காண்
வில்லாடி வேடனா யோடி னான்காண்
வெண்ணூலுஞ் சேர்ந்த அகலத் தான்காண்
மல்லாடு திரள்தோள்மேல் மழுவா ளன்காண்
மலைமகள்தன் மணாளன்காண் மகிழ்ந்து முன்னாள்
கல்லாலின் கீழிருந்த காபா லிகாண்
காளத்தி யானவனென் கண்ணு ளானே

காளத்தியப்பரை உள்ளத்தில் நினைக்கிறார் நாவுக்கரசர் பெருமான். மனதில் ஈசன் உயர்வான காட்சி தருகிறான். அப்போது திருநாவுக்கரசர் தான் கண்டதையெல்லாம் சொல்கிறார்.

வீடு வீடாகச் சென்று மக்கள் கொடுக்கின்ற சிறு உணவை ஏற்கின்றவனைப் பார்
இமைக்காத அமரர்கள் தொழுது இறைஞ்சி வணங்கும் இறைவனைப் பார்
வில்லை ஏந்திச் சென்று காட்டில் பன்றியை வேட்டையாடினானைப் பார்
வெண்ணூல் குறுக்காக ஓடும் அகலமான மார்பினை உடையானைப் பார்
மல்லாடுவதற்கு ஏற்ற திரண்ட தோள்களின் மேல் மழுவைப் பார்
மலைகளின் அன்பு மணாளனாக என்றும் மகிழ்ந்திருந்து – முன்பொருமுறை
ஆலமரத்தின் கீழ் அமர்ந்து அறிவுருத்திய தெற்கத்திக் கடவுளைப் பார்
காபாலம் ஏந்தி கூத்தாடுகின்றவனாய் திருக்காளத்தி(காளஹஸ்தி) எழுந்தருளியிருக்கும் ஈசனைப் பார்

இப்போது அல்லாடு மல்லாடு என்ற சொற்களுக்குப் பொருள் விளங்கியிருக்கும் என்று நினைக்கிறேன். மறுபடியும் வைரமுத்து எழுதிய வரிகளைப் படியுங்கள். இப்போது அந்த வரியில் அந்தப் பெயர் தெரியாத காதலி புலம்பும் வலி தெளிவாகப் புரியும்.

ஒரு நாள் ஒரு பொழுது உம் மூஞ்சி காங்காம உசுரே அல்லாடுதே
மறுநாள் வரும் வரைக்கும் பசி தூக்கம் கொள்ளாம மனசே மல்லாடுதே

படம் – அந்திமந்தாரை
வரிகள் – வைரமுத்து
பாடியவர் – சுவர்ணலதா
இசை – ஏ.ஆர்.ரகுமான்
பாடலின் சுட்டி – http://youtu.be/DlN92ODfcAM

அன்புடன்,
ஜிரா

194/365