உன் குத்தமா என் குத்தமா

கதவு அல்லது நிலைப்படி இடித்தது, முள் குத்தியது என்று நாம் அடிக்கடி சொல்லும் / கேட்கும் இந்த வார்த்தைகளில் ஒரு உளவியல் ஆராய்ச்சி செய்யலாம். ‘இது என் தவறல்ல, வேறு யாரோ அல்லது வேறு எதுவோ தான் காரணம்’ என்று தீர்க்கமாக நம்பும் மனம் இப்படித்தான் யோசிக்கும். சாதாரணமாகவே இப்படியென்றால் காதலில் எப்படியிருக்கும்?

தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்

பைதல் உழப்ப தெவன்

என்ற திருக்குறளில் காதலி கண்களைத்தான் குற்றம் சொல்கிறாள். கண்கள் செய்த குற்றத்தால்தானே காதல் நோய் ஏற்பட்டது. காதல் வரப்போவதை உணராமல் அன்று பார்த்துவிட்டு, இன்று அழுதால் எப்படி (புதிய உரை : சுஜாதா) என்று கடிந்துகொள்கிறாள்.

இன்னொரு பாடல் முத்தொள்ளாயிரத்தில் பாண்டியன் காதலி தன் கண்ணே தனக்கு எதிராக செயல்பட்டால் என்ன செய்வது என்று புலம்புகிறாள்.

கனவை நனவுஎன்று எதிர்விழிக்கும்; காணும்,

நனவில் எதிர்விழிக்க நாணும் – புனையிழாய்

என்கண் இவையானால் எவ்வாறோ மாமாறன்

தண்கண் அருள்பெறுமா தான்.

http://www.tamiloviam.com/unicode/printpage.asp?fname=02240508&week=feb2405

திரைப்பாடல்களில் கண்ணதாசன் இதை பலமுறை எழுதியிருக்கிறார். வாழ்க்கை படகு என்ற படத்தில் வரும் கண்களே கண்களே என்ற பாடலில் (இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடியவர் P B ஸ்ரீநிவாஸ்) http://www.youtube.com/watch?v=RggMJODLIac

கண்களே கண்களே காதல் செய்வதை விட்டு விடுங்கள்

பெண்களே பெண்களே வாலிபரை கொஞ்சம் வாழ விடுங்கள்

நெஞ்சமே நெஞ்சமே நினைப்பதை இனிமேல் நிறுத்தி விடு

மஞ்சமே மஞ்சமே மயக்கத்தை இனிமேல் மறந்து விடு

என்று இன்னும் விரிவாக்கி கண்களையும் நெஞ்சையும் குற்றம் சொல்கிறார்.

யாருக்கும் வெட்கமில்லை படத்தில் வரும் பாடலில் (இசை ஜி கே வெங்கடேஷ் பாடியவர் எஸ் ஜானகி) கவிஞரின் Charge Sheet இன்னும் பெரிது

என் கண்கள் அன்று செய்த பாவம் பார்த்தது

என் கனியிதழ்கள் செய்த பாவம் சிரித்தது

என் இதயம் அன்று செய்த பாவம் நினைத்தது

அந்த இறைவன் அங்கு செய்த பாவம் இணைத்தது

கண்கள், இதழ்கள், இதயம், இறைவன் எல்லாம் சேர்ந்து செய்த பாவம் என்ற பாவனை.

வைரமுத்து ரிதம் படத்தில் ‘யாரைக் கேட்டது இதயம் உன்னை தொடர்ந்து போக’ என்று காதலியின் சிணுங்கலையும் பூவெல்லாம் உன் வாசம் படத்தில்

நெஞ்சே நெஞ்சே செல்வாயோ அவனோடு

சென்றால் வரமாட்டாய் அதுதானே பெரும்பாடு’

என்ற செல்லக் கோபத்தையும் சொல்கிறார்.

ஆனந்த ஜோதி படத்தில் கண்ணதாசன் ‘நினைக்க தெரிந்த மனமே’ என்ற எவர் கிரீன் பாடல் (இசை எம் எஸ் விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடியவர் பி சுசீலா) முழுவதும் குற்றப்பத்திரிகை வாசிக்கிறார்.

http://www.youtube.com/watch?v=L20DiHoF518

நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா

பழக தெரிந்த உயிரே உனக்கு விலக தெரியாதா…

மயங்க தெரிந்த கண்ணே உனக்கு உறங்க தெரியாதா

மலர தெரிந்த அன்பே உனக்கு மறையதெரியாதா

எடுக்க தெரிந்த கரமே உனக்கு கொடுக்க தெரியாதா

படிக்க தெரிந்த இதழே உனக்கு முடிக்க தெரியாதா

இதில் மனம், உயிர், கண், அன்பு, கைகள் இதழ்கள் என்று சாடிவிட்டு அதோடு திருப்தியடையாமல்

கொதிக்க தெரிந்த நிலவே உனக்கு குளிர தெரியாதா

குளிரும் தென்றல் காற்றே உனக்கு பிரிக்க தெரியாதா

பிரிக்க தெரிந்த இறைவா உனக்கு இணைக்க தெரியாதா

இணைய தெரிந்த தலைவா உனக்கு என்னை புரியாதா…

என்று ஒரு அந்தாதி டைப் chargesheet தருகிறார்.

மேற்கத்திய நாடுகளில் இந்த தினம் அந்த தினம் என்று நிறைய உண்டு. அதில் Blame Some One Else day என்ற ஜாலியான தினம் பற்றிய விவரங்கள் படித்தேன்

http://www.ehow.com/how_2330857_celebrate-blame-someone-else-day.html. இந்தியாவில் நமக்கு தனியாக ஒரு நாள் தேவையில்லை – எல்லா நாளும் செய்வதுதானே!

மோகனகிருஷ்ணன்

193/365