எது அழகு?

அழகைக் கண்களால் உணரலாம் என்று திரைப்படக் கவிஞர்கள் எத்தனையோ பாட்டெழுதிவிட்டார்கள்.

கண்ணுக்கு மையழகு
கவிதைக்குப் பொய்யழகு
அவரைக்குப் பூவழகு
அவருக்கு நானழகு – என்று புதியமுகம் படத்துக்காகவும்

நீ நடந்தால் நடையழகு
நீ சிரித்தால் சிரிப்பழகு
நீ பேசும் தமிழழகு
நீயொருவன் தான் அழகு – என்று பாட்சா படத்துக்காகவும் வைரமுத்து அவர்கள் எழுதியிருக்கிறார்கள்.

இவையெல்லாம் காதலில் விழுந்தவர்கள் வழக்கமாகச் சொல்வதுதானே.

கண்ணால் காண முடியாத அழகுகள் இருக்கின்றவா? இருந்தால் எவையெவை? அவைகளை எப்படி உணர்ந்து கொள்வது?

அதிவீரராமபாண்டியன் என்ற மன்னன் வெற்றிவேற்கை என்னும் நீதி நூலில் பலவித அழகுகளைப் பட்டியலிட்டுள்ளார். இவர் கொற்கையை ஆண்டு வந்த பாண்டிய மன்னன்.

முத்துக்குளிப்பதனால் கொற்கை பாண்டியர்களுக்கு இரண்டாம் தலைநகரமாக இருந்தது. பாண்டிய மன்னனின் தம்பியோ மகனோ அங்கிருந்து ஆட்சி செய்வதும் உண்டு.

வெற்றிவேற்கைக்கு நறுந்தொகை என்றும் ஒரு பெயருண்டு. இந்த நூலில் பலவித அழகுகளைக் கூறியிருந்தாலும் சில அழகுகள் இந்தக் காலத்துக்கு ஏற்பில்லாதவை என்று நான் கருதுகிறேன். அவர் பட்டியலிட்டவைகளை படிப்பதற்கு எளிதாக நான் சீர் பிரித்தே கொடுத்திருக்கிறேன்.

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்
கல்விக்கு அழகு கசடற மொழிதல்
செல்வர்க்கு அழகு செழுங்கிளை தாங்குதல்
வேதியர்க்கு அழகு வேதமும் ஒழுக்கமும்
மன்னவர்க்கு அழகு செங்கோன் முறைமை
வைசியர்க்கு அழகு வளர் பொருள் ஈட்டல்
உழவர்க்கு அழகு இங்கு உழுது ஊண் விரும்பல்
மந்திரிக்கு அழகு வரும் பொருள் உரைத்தல்
தந்திரிக்கு அழகு தறுகண் ஆண்மை
உண்டிக்கு அழகு விருந்தோடு உண்டல்
பெண்டிர்க்கு அழகு எதிர் பேசாதிருத்தல்
குலமகட்கு அழகு கொழுநனைப் பேணுதல்
விலைமட்கு அழகு தன்மேனி மினுக்குதல்
அறிஞர்க்கு அழகு கற்றுணர்ந்து அடங்கல்
வறிஞர்க்கு அழகு வறுமையில் செம்மை

மந்திரிக்கு அழகு வரும் பொருள் உரைத்தல் என்பது அன்றைய நிலை. வரும் பொருள் மறைத்தல் என்பது நிலை.

உழவர்க்கு அழகு உழுது ஊண் விரும்பல். ஆனால் இன்றைக்கு வேளாண்மை கீழாண்மையாகிப் போன தமிழகத்தில் உழுதுதான் உண்ண வேண்டுமென்றால் பட்டினிதான் எல்லாருக்கும்.

பெண்டிர்க்கு அழகு எதிர் பேசாதிருத்தல். இதைத் சொன்ன அதிவீரராமபாண்டியன் மட்டும் இன்றைக்கு தொலைக்காட்சி நாடகங்களைப் பார்த்தால் பெண்டிர்க்கழகு பேசாமல் இருத்தல் என்று மாற்றி எழுதினாலும் எழுதி விடுவார்.

மன்னவர்க்கு அழகு செங்கோன் முறைமை என்று அதிவீரராம பாண்டியர் நேர்மையாக எழுதி விட்டார். அவர் அந்தக் காலத்து மனிதர். அப்படிச் செங்கோன் முறை கெடாமல் ஆட்சி நடக்க முடியாமல் போனதாலோ என்னவோ இன்று மன்னராட்சி மறைந்து மந்திரியாட்சி நடக்கிறது. அவர்களுக்கு செங்கோன் முறைமை என்று யாரும் சொல்லவில்லையே!

அறிஞர்க்கு அழகு கற்று உணர்ந்து அடங்கல். கற்றால் மட்டும் போதாது. அதை உணர்ந்து கொள்ள வேண்டும். அப்படி உணர்ந்தால்தான் அடக்கம் வரும். அந்த அடக்கம் அமரருள் உய்க்கும். ஆனால் இன்றைய இலக்கியச் சூழலில் அறிஞர்க்கு அழகு கற்றவரை மடக்கல். ஒரே சண்டைக்காடாக இருக்கிறது இலக்கியச் சூழல்.

வறிஞர்க்கு அழகு வறுமையில் செம்மை. கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. ஈன்றாள் பசி காண்பாள் ஆயினும் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை என்று வள்ளுவர் கூறுவதும் இதுதான். ஆனாலும் பெற்றவர்களோ பிள்ளைகளோ பட்டினியால் தவிக்க செம்மையாக இருப்பது என்பது இயலாது என்பது என் கருத்து.

சரி. இந்த அழகுகளைப் பற்றி நான் கருத்துகளை அள்ளி விடுவது இருக்கட்டும். நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?

பதிவில் இடம் பெற்ற பாடல்கள்
பாடல் – கண்ணுக்கு மையழகு
வரிகள் – வைரமுத்து
பாடியவர் – பி.சுசீலா
இசை – ஏ.ஆர்.ரகுமான்
படம் – புதியமுகம்
பாடலின் சுட்டி – http://youtu.be/gA6edwZpXXU

பாடல் – நீ நடந்தால் நடையழகு
வரிகள் – வைரமுத்து
பாடியவர் – சித்ரா
இசை – தேவா
படம் – பாட்சா
பாடலின் சுட்டி – http://youtu.be/Ah9vOUzrffg

அன்புடன்,
ஜிரா

191/365