காற்றில் வரும் கீதமே

அந்தி மஞ்சள் மாலை அல்லது இரவு நேரம். தனிமையில் ஒரு பெண். தூரத்திலிருந்து கேட்கும் புல்லாங்குழல் இசை. இதுதான் காட்சி. ஒரு பெண்ணின் மனதில் காற்றில் மிதந்து வரும் இந்த இசை என்னென்ன  பாதிப்புகளை ஏற்படுத்தும்?

முதலில் பிரிவின் சோகத்தில் இருக்கும் ஒரு பெண். அவள் எதையும் ரசிக்கும் மன நிலையில் இல்லை. அவளுக்கு இந்த இசை இன்பத்தைக் கொடுக்கவில்லை. ஆனால் அவனைப் பிரிந்து வாழ்கின்ற அவளை  அந்தக் குழல் ஓசை மிகவும் துன்புறுத்துகிறது.

சிறு குழல் ஓசை, செறிதோடி! வேல் கொண்டு

எறிவது போலும் எனக்கு

அந்த இசை இனிமையானதுதான். ஆனால் அவனைப் பிரிந்து வாழ்கின்ற என்னை அந்தக் குழல் ஓசை மிகவும் துன்புறுத்துகிறது. யாரோ வேலால் என்னைத் தாக்குவதுபோல் துயரம் தருகிறது என்று அவள் வருந்துகிறாள். (நூல்: ஐந்திணை ஐம்பது பாடியவர்: மாறன் பொறையனார் http://365paa.wordpress.com/2012/02/08/217/)

இன்னொரு பெண் காதலனை நினைத்து அந்த குழலிசையில் மயங்கிய நிலையில் இருக்கிறாள். ஸ்ரீ கிருஷ்ணகானம் ஊத்துக்காடு ஸ்ரீ வெங்கடசுப்பையர் எழுதிய அலைபாயுதே கண்ணா என்ற பாடலில்  http://www.youtube.com/watch?v=2OTM3yXVvk8 அவள் அலைபாயும்  நிலை சொல்லுகிறார்

அலைபாயுதே கண்ணா என் மனம் மிக அலைபாயுதே

உன் ஆனந்த மோகன வேணு கானம் அதில் அலைபாயுதே

இவளும் மாலை என்னை வாட்டுது என்பதை தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரியுதே என்று பாடுகிறாள். அவன் இல்லாவிட்டாலும் இந்த இசை அவளுக்கு ஒருவித மயக்கம் கொடுக்கிறது. இது நியாயமா என்று உரிமையுடன் கேட்கிறாள்

கனிந்த உன் வேணு கானம் காற்றில் வருகுதே

கண்கள் சொருகி ஒரு விதமாய் மருகுதே

அடுத்து பெண். மிகுந்த சோகத்தில் இருக்கிறாள். பிரிவின் கொடுமை தாளாமல் அவள் இருக்கும்போது கேட்கும் குழலிசைப்பற்றி அவள் என்ன சொல்கிறாள்? இந்த இசைதான் என் சோகத்துக்கு மருந்து என்கிறாள். அலைபாயுதே படத்தில் வைரமுத்து எழுதிய எவனோ ஒருவன் வாசிக்கிறான் என்ற பாடலில் (இசை ஏ ஆர் ரஹ்மான் பாடியவர் ஸ்வர்ணலதா). https://www.youtube.com/watch?v=yzIenDQdtVc

எவனோ ஒருவன் வாசிக்கிறான்…

இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்

தவம் போல் இருந்து யோசிக்கிறேன்

அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்

ஸ்ரீ வெங்கடக கவி  கண்கள் சொருகி ஒரு விதமாய் மருகுதே என்றால் வைரமுத்து கேட்டுக் கேட்டு நான் கிறங்குகிறேன் என்கிறார். அவர் நிலவு சுடுகிறது என்றால் இவர் இரக்கம் இல்லாத இரவு  உறக்கம் இல்லாத இரவைப்பற்றி சொல்கிறார்.

உறக்கம் இல்லா முன்னிரவில்

என் உள் மனதில் ஒரு மாறுதலா

இரக்கம் இல்லா இரவுகளில்

இது எவனோ அனுப்பும் ஆறுதலா

குழல் என்றாலே கண்ணன்தான். கண்ணதாசன் கற்பனை என்ன? அவர்கள் படத்தில் இப்படியோர் தாலாட்டு பாடவா (இசை எம் எஸ் விஸ்வநாதன் பாடியவர் எஸ் ஜானகி ) என்ற பாடலில்https://www.youtube.com/watch?v=-5vHqIKMCpg  அவர் சொல்வதைப்பாருங்கள். அவள் கண்ணனை நினைத்தாள் ஏதோ தலையெழுத்து மன்னனை மணந்தாள். ஆனால் கண்ணன் நினைவு அந்த குழலோசையாக அவளை தொடர்கிறது. கடைசி வரியில் சட்டென்று அவளின் யதார்த்த நிலை – அந்த குழலோசையை தன குழந்தைக்கு தாலாட்டாக்குகிறாள்

கண்ணனவன் கையினிலே குழலிருந்தது அந்தக்

கானம்தானே மீராவை கவர்ந்து வந்தது

இன்றுவரை அந்த குழல் பாடுகின்றது அந்த

இன்னிசையில் என் குழந்தை தூங்குகின்றது

 ஸ்ரீ வெங்கடக கவி இன்னொரு பாடலில் குழலூதி மனமெல்லாம் கொள்ளைகொண்ட பின்னும் குறை ஏதும் எனக்கேதடி சகியே என்றும் சொல்கிறார் http://mp3take.com/download/24266acbf25b7e07/06-kuzhaloothi-manamellam-www-punchapaadam-com-mp3/

அதே குழல் இசை. பெண்ணின் context ஐ பொருத்து என்னென்ன பாதிப்புகள் ? ஒரு பெண் வேலால் தாக்குவது போல் இருக்கிறது என்கிறாள். இன்னொரு பெண் கண்கள் சொருகி மயங்குகிறாள். வேறொரு பெண் இதுவே எனக்கு / என் சோகத்துக்கு மருந்து என்கிறாள். ஒரு பெண் தன்  குழந்தையை தாலாட்டுகிறாள். இன்னொரு பெண் இந்த இசை இருந்தால் போதும் எனக்கு குறை ஒன்றும் இல்லை என்கிறாள். வெவ்வேறு பார்வைகள்.

மோகனகிருஷ்ணன்

190/365