உவமைகள் பலவிதம்

  • படம்: தங்க மகன்
  • பாடல்: ராத்திரியில் பூத்திருக்கும்
  • எழுதியவர்: புலமைப்பித்தன்
  • இசை: இளையராஜா
  • பாடியவர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி
  • Link: http://www.youtube.com/watch?v=8U2HVjtb9n4

ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ!

ராஜ சுகம் தேடி வர தூது விடும் கண்ணோ!

சேலைச் சோலையே! பருவ சுகம் தேடும் மாலையே!

பகலும் உறங்கிடும் ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ!

பெண்ணைத் தாமரைக்கு ஒப்பிடுவது பரவாயில்லை, அதென்ன ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை?

இயற்கையாக, தாமரை பகலில்தான் மலரும். இரவில் கூம்பிவிடும். இதைதான் எல்லா இலக்கியங்களிலும் திரும்பத் திரும்பப் பலமுறை படித்திருக்கிறோம்.

ஆனால் இங்கே, ‘ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை’ என்று குறிப்பிட்டுச் சொல்லி அதைப் பெண்ணுக்கு உவமையாக்குகிறார் புலமைப்பித்தன். உலகத்தில் எங்கும் இல்லாத ஒரு பொருளை உவமையாகச் சொல்வதால், தமிழ் இலக்கணப்படி இதற்கு ‘இல் பொருள் உவமை (அல்லது உருவக) அணி’ என்று பெயர்.

கிட்டத்தட்ட இதேமாதிரி இன்னொரு விஷயம், ‘உயர்வு நவிற்சி அணி’. பல நேரங்களில் இதையும் ‘இல்பொருள் உவமை அணி’யையும் சேர்த்துக் குழப்பிக்கொள்வோம்.

‘நவில்தல்’ என்றால் சொல்லுதல், ‘உயர்வு நவிற்சி அணி’ என்றால், இயல்பான ஒரு விஷயத்தை உயர்வாக, மிகைப்படுத்திச் சொல்லுதல்.

இதேபோல், ‘இயல்பு நவிற்சி அணி’யும் உண்டு. இயல்பான ஒரு விஷயத்தை அப்படியே இயல்பாகச் சொல்லுதல்.

உதாரணமாக, ஒரு பெண்ணைப் பார்த்து, ’உன்னுடைய குரல் ரொம்ப இனிமை’ என்றால் அது இயல்பு நவிற்சி அணி, ஆனால், ‘உன்னுடைய குரலைக் கேட்டுக் குயில்கள்கூடத் தோற்றுவிட்டன’ என்று சொன்னால், அது உயர்வு நவிற்சி அணி. அவளுடைய குரல் இனிமையானதுதான், ஆனால் ’குயில்களோடு போட்டி போட்டு ஜெயித்த குரல்’ என்று அதை மிகைப்படுத்துகிறார் கவிஞர்.

கொஞ்சம் லோக்கலாக ஓர் உதாரணம் வேண்டுமென்றால், வீட்டில் பத்தாயிரம் ரூபாய்க்கு ஒரு சோஃபா வாங்குகிறோம், வருகிற விருந்தினர் அதைப் பார்த்து வியக்க, ‘ஆமாங்க, பத்தாயிரம் ரூபாய் விலை’ என்று நான் சொன்னால் இயல்பு நவிற்சி, ‘சும்மாவா? முப்பதாயிரத்துக்கு வாங்கியிருக்கோம்ல’ என்றால், அது உயர்வு நவிற்சி. ‘இதென்ன பெரிய விஷயம்? எங்க சொந்த ஊர்ல இதைவிட மெத்மெத்துன்னு ஒரு சோஃபா இருக்கு’ என்று கதையளந்தால், அது இல்பொருள் 🙂

மழை பெய்கிறது, அதைப்பற்றி நண்பருக்கு ஃபோனில் சொல்லும்போது, ‘தெருவெல்லாம் வெள்ளம்’ என்றால் இயல்பு நவிற்சி, ’வெள்ளத்துல நாலஞ்சு திமிங்கிலமே தட்டுப்பட்டதுன்னா பார்த்துக்கோயேன்’ என்றால், அது உயர்வு நவிற்சி அணி, ‘வெள்ளத் தண்ணியில ரெண்டு அன்னம் நீந்தி வருதுய்யா’ என்றால், இல்பொருள்.

இந்த விஷயத்தில் இதுவா அதுவா என்று மயக்கம் ஏற்படுவது இயல்பு. உதாரணமாக, ஒரு கம்பன் பாட்டு. ஜாம்பவான் அனுமனைப் புகழ்ந்து சொல்வது: ‘மாரி துளிக்கும் தாரை இடுக்கும் வர வல்லீர்.’

மாரி என்றால் மழை, அந்த மழையினால் துளிகள் ஏற்பட்டு, அவை தாரையாகத் தரையை நோக்கிப் பொழிகின்றன, அனுமார் விரும்பினால், மிகச் சிறிய உருவம் எடுத்து, அந்த மழைத் தாரைகளுக்கு நடுவே புகுந்து வந்துவிடுவார்!

இப்போது சொல்லுங்கள், இது இயல்பு நவிற்சியா? உயர்வு நவிற்சியா? இல்பொருளா? 🙂

சினிமாப் பாடல்களில் உங்களுக்குத் தெரிந்த ‘இல்பொருள் உவமை அணி’களைப் பின்னூட்டத்தில் சொல்லுங்கள், சிறந்த ஒன்றுக்குப் புத்தகப் பரிசு (அவர்கள் விரும்பும் இந்திய முகவரிக்கு) அனுப்பிவைக்கப்படும்!

***

என். சொக்கன் …

08 06 2013

189/365