ஆராரோ ஆராரிரோ!

தாலாட்டு பிள்ளை ஒன்று தாலாட்டு” என்று தொலைக்காட்சியில் பி.சுசீலா உருகி உருகித் தாலாட்டிக் கொண்டிருந்தார். அதென்னவோ… தமிழ்த் திரையிசையில் எத்தனையெத்தனையோ தாலாட்டுப் பாடல்கள். அவைகளில் சிறந்த பாடல்களை எல்லாம் பார்த்தால் பெரும்பாலும் பி.சுசீலா பாடியதாகத்தான் இருக்கும்.

தாலாட்டு… இந்தச் சொல்லை உச்சரிப்பதே சுகமாக இருக்கிறது. அந்த அளவுக்கு தாலாட்டு நம்முடைய பண்பாட்டில் கலந்திருக்கிறது.

தாலாட்டு என்ற பெயருக்கு உண்டான பொருளே மிக அழகானது. தால் என்றால் நாக்கு. நாக்கை ஆட்டிப் பாடுவதால் அதற்குத் தாலாட்டு என்று பெயர்.

அப்படியானால் மற்ற பாடல்களைப் பாடும் போது நா ஆடாதா? ஆடும். கண்டிப்பாக ஆடும்.

அப்படியானால் இந்த ஒரு பாட்டுக்கு மட்டும் தாலாட்டு என்று பெயர் ஏன்?

காதலையோ பக்தியையோ வேறு எதையுமோ பாட்டில் வைக்க வேண்டுமானால் சொற்கள் தேவை. அந்தச் சொற்களில் நல்ல பொருள் அமைந்திருக்க வேண்டும். அப்படியெல்லாம் இருந்தால்தான் பாட்டு. இல்லையேல் நிப்பாட்டு.

ஆனால் தாலாட்டு அப்படியில்லை. ராரிராரிராரியிலேயே பாட்டு முழுவதையும் பாடிவிடும் நாட்டுப்புறத்துத் தாய்மார்களை நான் பார்த்திருக்கிறேன். இன்னொரு பெண்மணி மெல்லின விரும்பி போலும். லுலுலுலுலூ என்றே பாட்டின் பல்லவி அனுபல்லவி சரணத்தை நிரப்பி விட்டார். ஆனாலும் குழந்தைகள் அந்தத் தாலாட்டைக் கேட்டு தூங்கத்தான் செய்தன.

சொல் இல்லை. பொருள் இல்லை. ஆனால் வெறும் ஒலியை உண்டாக்கி அதன் மூலம் குழந்தையின் மனதை அமைதிபடுத்தி உறங்க வைப்பது எவ்வளவு பெரிய வேலை. இந்த வேலையைச் சிறப்பாகச் செய்வதால்தான் தாலாட்டு என்ற சிறப்பு பெயர் தாலாட்டுக்கு அமைந்தது.

அதுவுமில்லாமல் ஒரு குழந்தை முதன்முதலில் கேட்கும் பாடலே தாலாட்டுதான். வேறு எந்தப் பாட்டையும் விட அந்த முதற்பாட்டுக்காக ஒரு தாயின் நா அசைவதுதான் சிறப்பு. அதைத்தான் தாலாட்டு என்ற பெயர் சிறப்பிக்கிறது.

தாலாட்டு என்பது நாட்டுப்புற வடிவம். அதன் சிறப்பையும் ஏற்றத்தையும் கண்டு செவ்வியல் இசை வடிவங்கள் தாலாட்டை உள்வாங்கிக் கொண்டன. பக்தி இலக்கியங்களும் பிள்ளைத்தமிழ் நூல்களும் தாலாட்டை எழுதியிருந்தாலும்… நாட்டுப்புற வடிவத்தில் அமைந்த தாலாட்டே சிறப்பானது.

ஆராரோ ஆரிரரோ
ஆராடிச்சா என் கண்ணே
அடிச்சாரைச் சொல்லி அழு
அவராதம் போட்டிருவோம்
மாமன் அடிச்சாரோ மல்லிகப்பூச் செண்டாலே
அத்தை அடிச்சாரோ அரளிப்பூச் செண்டாலே

இப்படி எளிமையான வரிகளில் இலக்கியமாகிவிடுகிறது தாலாட்டு. தாலாட்டுப் பாடல்களில் ஒரு சிறப்பு உண்டு. தாலாட்டு என்பது தாய் பாடும் பாட்டுதான். ஆனால் தாய்மாமன் நிறைய வருவான். ஒரு குழந்தைக்கு தாய்க்கு அடுத்து தாய்மாமன் முக்கியமானவன்.

குழந்தையின் ஒவ்வொரு பருவத்திலும் தாய்மாமன் செய்யும் சீரும் சிறப்பும்தான் பெருமை. மொட்டையடித்து காது குத்துவதில் தொடங்கி கல்யாணத்துக்கு மெட்டி மாட்டுவது வரையிலும்… அதையும் தாண்டியும் தாய்மாமன் உறவு தொடரும்.

ஆயிரம் வைரம் அப்பன் தந்தாலும் தாய்மாமன் தரும் காற்காசு மோதிரத்தைதான் தாய் பெரிதாகப் பேசுவாள். அதனால்தான் தாலாட்டுப் பாடல்களின் தாய்மாமன் பெருமை இருக்கும். அதுவும் இயல்புக்கும் மீறி பெருங்கற்பனையாகவே இருக்கும்.

தங்க கடிகாரம் வைர மணியாரம்
தந்து மணம் பேசுவார் பொருள்
தந்து மணம் பேசுவார்
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார்
உலகை விலை பேசுவார்

என்ன பாட்டு என்று தெரிகிறதா? ஆம். “மலர்ந்தும் மலராத பாதிமலர் போல” என்ற கவியரசரின் காவியப் பாடல்தான்.

மாணிக்கம் கட்டி வயிரம் இடைகட்டி
ஆணிப்பொன்னால் செய்த வண்ணச் சிறுத்தொட்டில்
பேணி உனக்குப் பிரமன் விடுதந்தான்
மாணிக் குறளனே தாலேலோ
வையம் அளந்தானே தாலேலோ

இதுவும் தாலாட்டுதான். பக்தி இலக்கியத் தாலாட்டு. சொல்வளமும் பொருள்வளமும் நிறைந்திருந்தாலும் இந்தப் பாடலில்நாட்டுப்புறத் தாலாட்டின் எளிமை இல்லாமல் இருப்பதை உணரலாம்.

ஆனாலும் இதுவும் இனிய பாடல்தான். ஆழ்வார்கள் அத்தனை பேர்களில் இவருக்கு மட்டும் பெரியாழ்வார் என்று பெயர். எல்லாரும் நாராயணனைப் பாடினார்கள். இவர் மட்டும் தாலாட்டினார். குழந்தைக்குத் தாய்தான் பெரியவள். அந்த வகையில் நாராயணனையே தாலாட்டிய இவர் பெரியவராகி பெரியாழ்வார் ஆகிறார்.

பதிவில் இடம் பெற்ற பாடல்கள்
பாடல் ஒன்று – தாலாட்டு பிள்ளை ஒன்றை தாலாட்டு
பாடியவர் – இசையரசி பி.சுசீலா
பாடல் வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
இசை – இசைஞானி இளையராஜா
பாடலின் சுட்டி – http://youtu.be/iDk5vZ224hs

பாடல் இரண்டு – மலர்ந்தும் மலராத பாதிமலர் போல
பாடியவர்கள் – பி.சுசீலா, டி.எம்.சௌந்தரராஜன்
பாடல் வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
இசை – மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விசுவநாதன் – டி.கே.இராமமூர்த்தி
பாடலின் சுட்டி – http://youtu.be/R9zT_GGGL7M

அன்புடன்,
ஜிரா

188/365