மௌனத்தில் விளையாடும்

‘இப்படி மனசாட்சியே இல்லாம பேசலாமா’ என்ற கேள்வியை நாம் யாரிடமாவது வீசியிருப்போம்.. அல்லது நம்மைப் பார்த்து யாராவது கேட்டிருக்கலாம். இந்த மனசாட்சி என்பது என்ன?  இதற்கு ஒரு உருவம் உண்டா?

திரைப்படங்களில் மனசாட்சி என்று காட்டப்பட்ட imagery என்ன ? திடீரென்று கதாபாத்திரம் இரண்டாக பிரிந்து விவாதம் நடக்கும்  அல்லது சக்கப்போடு போடு ராஜா என்று பாடும். அல்லது ‘அழக்கூடாது நீ டான்’ என்று விவேக் காமெடி போல் பேசும். அவ்வளவுதானா?

கண்ணதாசன் நூல்வேலி என்ற படத்தில் எழுதிய மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே என்ற பாடலில் மனசாட்சிக்கு ஒரு அருமையான வடிவம் கொடுக்கிறார். (இசை எம் எஸ் விஸ்வநாதன் பாடியவர் : பாலமுரளி கிருஷ்ணா)  https://www.youtube.com/watch?v=RPBTtUwNeWA

ஆயிரம் நினைவாகி ஆனந்தக்கனவாகி

காரியம் தவறானால் கண்களில் நீராகி

மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே

எல்லா நினைவுகளுமாய் ஆனந்த கனவுகளாக செயல் தவறானால் கண்ணீராக என்று பல வடிவம் எடுக்கும் உள்ளுணர்வு பற்றி சொல்லுகிறார்.

ஒருகணம் தவறாகி பலயுகம் துடிப்பாயே

ஊமையின் பரிபாஷை கண்களில் வடிப்பாயே

ஆசையில் கல்லாகி அச்சத்தில் மெழுகாகி

யார் முகம் பார்த்தாலும் ஐயத்தில் தவிப்பாய் நீ

தனிமனிதனின்  தார்மீக மதிப்புகளுக்கு எதிரான அவனது  செயல்கள் ஏற்படுத்தும் குற்றவுணர்ச்சியும் self -pity யும் மனிதனை நேர்வழிப்படுத்தும் என்பது உளவியல் மருத்துவக் கருத்து. தவறு செய்தவனின் தவிப்பும் பதட்டமும் என்று இதை எவ்வளவு அழகாக சொல்கிறார்!

மூன்று முடிச்சு படத்தில் கே பாலச்சந்தர் ரஜினி கதாபாத்திரத்தின்  மனசாட்சிக்கு   பைத்தியக்காரன் போன்ற ஒரு தோற்றத்தை கொடுத்திருப்பார். ஒவ்வொரு முறை தப்பு செய்த பிறகும் வந்து கேள்விகேட்கும் மனசாட்சி  தப்பு செய்வதற்கு முன்பு வந்து எச்சரிக்காதா என்ற கேள்விக்கு படத்தின் கடைசியில்

விதைக்கின்ற வேளையிலே விளங்காத மனசாட்சி…

விளைவுக்குப் பின்னாலே விரைந்துவரும் மனசாட்சி….

தனக்காகத் தன்னுடனே போராடும் மனசாட்சி….

தவறுபவன் கண்களுக்குப் பைத்தியந்தான் மனசாட்சி.

என்று பதில் சொல்வார்.

ஒருவரின் சரி, தவறு இரண்டையும் அவரிடம் சொல்லும் என்பதே மனசாட்சியைப் பற்றிய பொதுவான கருத்து. இது சரியா? செயல்களுக்கு சாட்சியாக நிற்பவனே தீர்ப்பும் சொல்லமுடியுமா? நம் செயல்களுக்கு மனம் சாட்சியா நீதிபதியா?

மோகனகிருஷ்ணன்

187/365