கண்ணால கனவுகள்

  • படம்: எங்க சின்ன ராசா
  • பாடல்: கொண்டச் சேவல் கூவும் நேரம்
  • எழுதியவர்: வாலி
  • இசை: சங்கர் கணேஷ்
  • பாடியவர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி
  • Link: http://www.youtube.com/watch?v=xXXUzmo_Az8

அன்னாடம் வெளக்குவெச்சா, அத நெனச்சே எளச்சேனே!

கண்ணாலம் முடியட்டுமே, அதுக்குதான் இருக்கேனே!

நாள் கெழம ஒண்ணு பார்க்கணுமா?

ஆக்கிவெச்சா தின்னு தீர்க்கணுமா?

கல்யாணக் கனவுகளில் இருக்கும் ஒரு ஜோடி பாடுவதாக வரும் பாடல் இது. ’தினமும் மாலை வந்ததும் உன்னை நினைத்து என் உடல் இளைக்கிறது!’ என்கிறான் அவன், ‘என்ன அவசரம்? கல்யாணம் முடியட்டுமே!’ என்கிறாள் அவள்.

ம்ஹூம், ‘கண்ணாலம் முடியட்டுமே’ என்கிறாள்.

கிராமத்து ஜோடி, ‘கல்யாண’த்தைக் ‘கண்ணாலம்’ என்றுதான் சொல்வார்கள். இது ஒரு பெரிய விஷயமா?

அவ்வளவு ஏன்? கல்யாணக் கனவுகளுக்காகவே புகழ் பெற்ற ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள்கூட ஒரு பாடலில் ‘கண்ணாலம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறாள்:

கண்ணாலம் கோடித்துக் கன்னி தன்னைக் கைப்பிடிப்பான்,

திண் ஆர்ந்து இருந்த சிசுபாலன் தேசு அழிந்து

அண்ணாந்து இருக்கவே ஆங்கு அவளைக் கைப்பிடித்த

பெண்ணாளன் பேணும் ஊர், பேரும் அரங்கமே!

நமக்கெல்லாம் தெரிந்த சினிமாக் கதைதான், கண்ணனைக் காதலித்தாள் ருக்மிணி. ஆனால், அவளுடைய தந்தை பீஷ்மகன் அவளைச் சிசுபாலனுக்குத் திருமணம் செய்துகொள்ளத் தீர்மானித்தான்.

‘என்னை மீறி யார் ருக்மிணிமீது கை வைக்கமுடியும்?’ என்று அந்தச் சிசுபாலன் தன் வலிமைமீது கர்வம் கொண்டிருந்த நேரம், அவன் அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கையில் ருக்மிணியைக் கொத்திக்கொண்டு போய்விட்டான் கண்ணன். அவன் எழுந்தருளிக் காக்கும் ஊர், ஸ்ரீரங்கம்!

(பின்குறிப்பு: தலைப்பில் ‘க்’ விடுபட்டிருப்பது சந்திப் பிழையல்ல, சிலேடைக்காகச் செய்யப்பட்ட வம்புப் பிழை ;))

***

என். சொக்கன் …

05 06 2013

186/365