ஆயிரத்தில் ஓர் இரவு

முதலிரவு. அந்த ஒரு இரவை வாழ்நாள் முழுவதும் மறக்கவே முடியாது என்பதால்தான் அதற்கு முதலிரவு என்று பெயர். அந்த முதலிரவிலே வருவது முதல் உறவு. இதைக் கற்பகம் படத்தில் வாலி இப்படிச் சொன்னார்.

ஆயிரம் இரவுகள் வருவதுண்டு
ஆனால் இதுதான் முதலிரவு
ஆயிரம் உறவுகள் வருவதுண்டு
ஆனால் இதுதான் முதல் உறவு

பாடல் – வாலிபக் கவிஞர் வாலி

எத்தனையோ கற்பனைகளோடும் ஆசைகளோடும் வாழ்க்கைப் பயணத்தில் அடியெடுத்து வைக்கும் அந்த ஒரு இரவில் மணமக்கள் ஒவ்வொருவரின் உள்ளமும் உணர்ச்சியும் ஒன்றோடு ஒன்று போட்டி போட்டுக் கொண்டு துள்ளும். அந்தத் துள்ளலில் பேச்சு வருமா? வாழ்க்கைத்துணையிடம் முதலிரவில் முதன்முதலில் என்ன பேசுவது? என்ன பேசுவார்கள்? யார் முதலில் பேசியிருப்பார்கள்? என்ன சொல்லியிருப்பார்கள்? அப்படி எதையும் சொல்லும் போது எவ்வளவு தயக்கம் இருந்திருக்கும்? சிந்தித்துப் பார்க்கவும் இனிதான விஷயம் அது. சரி. இவற்றையெல்லாம் திரைப்படங்களில் பாடலாசிரியர்கள் எப்படிக் கையாண்டார்கள் என்று ஆராய்ச்சி செய்வோம்.

அவர்களுக்குச் சிறுவயது முதலே பழக்கம். அவன் கால்சட்டை போட்ட காலத்தில் பார்த்த சிறுமி இன்று பெருகிப் பொங்கி மனைவியாக வந்திருக்கிறாள். அவளைப் பார்த்ததும் அவனுக்கு வியப்பு. அதனால் பழைய நட்பினால் உரிமை எடுத்துக் கொண்டு குறும்பாகக் கேட்கிறான்.

பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
இன்று பூவாடை வீசிவர பூத்த பருவமா

பாடல் – கவியரசர் கண்ணதாசன்

அவன் உழைத்து முன்னுக்கு வந்தவன். ஒவ்வொரு காசும் வேர்வை சொட்டச் சொட்ட உழைத்துச் சேர்த்தது. செல்வத்தின் அருமை பெருமை தெரிந்தவன். இத்தனை பொருட்செல்வங்களைத் தேடினாலும் அதற்கிடையில் வாழ்க்கைத் துணைவியையும் தேட அவன் மறக்கவில்லை. அப்படித் தேடிய மனைவியை முதலிரவில் எப்படி அழைப்பான் அவன்?

அன்பாலே தேடிய என் அறிவுச் செல்வம் தங்கம்
ஏகாந்தவேளை வெட்கம் ஏனோ வா இந்தப் பக்கம்

பாடல் – தஞ்சை இராமையாதாஸ்

கையும் காலும் நன்றாக இருப்பவர்களுக்கே நல்ல வாழ்க்கை அமைவது கடினம். ஊனமுற்று அதனால் வாழ்க்கையில் பிறரால் ஏளனமுற்று இருப்பவர்களின் நிலை? அவர்கள் மனத்துன்பத்தையெல்லாம் கேட்கக் கூட ஆளிருக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட ஒருவனுக்குத் திருமணம் நடந்தது. தெய்வம் போன்றொரு பெண் வந்தாள். அவளிடம் மனதைத் திறந்து கொட்டி அழுதான். அப்போது அவள் என்ன சொல்லியிருப்பாள்?

தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ
உங்கள் அங்கத்திலே ஒரு குறைவிருந்தாலும் அன்பு குறைவதுண்டோ
கால்கள் இல்லாமல் வெண்மதி வானில் தவழ்ந்து வரவில்லை
இரு கைகள் இல்லாமல் மலர்களை அணைத்து காதல் தரவில்லையா

பாடல் – கவியரசர் கண்ணதாசன்

இன்னொரு முதலிரவு. ஒரு சாதாரண ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொண்ட முதலிரவு. திருமணத்துக்கு முன்னால் அவர்களுக்குள் பழக்கமோ நெருக்கமோ இருந்ததில்லை. இருவருக்கும் அது முதல் மயக்கம். அதனால் ஒரு தயக்கம். தயக்கம் போக வேண்டுமென்றால் விளக்கம் வேண்டும். அதையும் ஆண் பேசினால்தான் சரியாக இருக்கும் என்று பாடலாசிரியர் நினைத்திருக்கிறார் போலும்.

இதுதான் முதல் ராத்திரி
அன்புக் காதலி என்னை ஆதரி

இன்னொருவன் குறும்பன். விளையாட்டுப்பிள்ளை. துரத்தித் துரத்திக் காதலித்தவளையே திருமணமும் செய்து கொள்கிறான். அவனுக்கு ஆர்வங்கள் நிறைய. சாதிக்கும் வெறியும் நிறைய. புதுமைகளைப் புரிந்து கொள்ள விரும்பும் படிப்பாளி. அவன் மட்டுமா? அவளும் அப்படித்தான். அப்படிப்பட்ட முதலிரவு எப்படியிருக்கும்?

பள்ளிக்கூடம் போகலாமா
அதுக்கு புத்தகத்த வாங்கலாமா

பாடல் – கங்கையமரன்

அவனொரு குழந்தை. வளர்ந்த குழந்தை. உடல் வளர்ந்து விட்ட அளவு உணர்வுகள் வளரவில்லை. வளராத செடிக்குத்தானே உரமும் கவனிப்பும் தேவை. அந்தச் செடிக்கு உரமாக வருகிறாள் ஒருத்தி. அவள் சுரங்களைச் சொல்லச் சொல்ல அவன் கற்றுக் கொள்கிறாள். கற்ற வித்தையை பாட்டாய்ப் பாடுகிறான். அவள் சொல்லிக் கொடுத்ததை அவன் படித்து மேதையாவதை பாட்டில் எப்படிச் சொல்வது?

மனசு மயங்கும்…மனசு மயங்கும்
மௌனகீதம்….மௌனகீதம்…பாடு
மன்மதக்கடலில்…மன்மதக்கடலில்
சிப்பிக்குள்முத்து…சிப்பிக்குள்முத்து…தேடு

பாடல் – கவிஞர் வைரமுத்து

அவள் காத்திருந்தாள். எதிர்பார்த்திருந்தாள். அடைந்தால் அவனைத்தான் அடைவது என்று தவமிருந்தாள். உள்ளத்தில் இருந்தது உண்மையான அன்பாக இருந்ததால் அது நடந்தது. திருப்பரங்குன்றத்திலே பரமசிவன் பார்வதி தலைமையில் அவர்கள் மகனான முருகனையே திருமணம் செய்தாள். அப்படிப்பட்டவளுக்கும் ஒரு முதலிரவு. அந்த இரவிலே அவள் என்னவெல்லாம் சொல்லியிருப்பாள்?

மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு
நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு

பாடல் – பூவை செங்குட்டுவன்

இப்படி ஒவ்வொரு முதலிரவும் ஒவ்வொரு வகை. ஒவ்வொரு வகையிலும் ஒவ்வொரு கலை. ஒவ்வொரு கலையிலும் ஒவ்வொரு சுவை.

பதிவில் இடம் பெற்ற பாடல்கள்

ஆயிரம் இரவுகள் வருவதுண்டு
படம் – கற்பகம்
பாடியவர் – இசையரசி பி.சுசீலா
பாடல் – வாலிபக் கவிஞர் வாலி
இசை – மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விசுவநாதன் – இராமமூர்த்தி
பாடலின் சுட்டி – http://youtu.be/IAJbRzdCaDc

பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
பாடல் – கவியரசர் கண்ணதாசன்
பாடியவர் – டி.எம்.சௌந்தரராஜன்
இசை – மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விசுவநாதன் – இராமமூர்த்தி
படம் – நிச்சய தாம்பூலம்
படத்தின் சுட்டி – http://youtu.be/wi-G7fvgZ7g

அன்பாலே தேடிய என் அறிவுச் செல்வம் தங்கம்
பாடல் – தஞ்சை இராமையாதாஸ்
பாடியவர் – சிதம்பரம் சி.எஸ்.ஜெயராமன், எஸ்.ஜானகி
இசை – கே.வி.மகாதேவன்
படம் – தெய்வப்பிறவி
பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=rO0uDgO2gz0

தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ
பாடல் – கவியரசர் கண்ணதாசன்
பாடியவர் – இசையரசி பி.சுசீலா
இசை – மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விசுவநாதன் – இராமமூர்த்தி
படம் – பாகப்பிரிவினை
பாடலின் சுட்டி – http://youtu.be/ZCwKgD9E7Qo

இதுதான் முதல் ராத்திரி
பாடல் – கவிஞர் வாலி
பாடியவர்கள் – கே.ஜே.ஏசுதாஸ், வாணி ஜெயராம்
இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
படம் – ஊருக்கு உழைப்பவன்
பாடலின் சுட்டி – http://youtu.be/WgCneO_FIss

பள்ளிக்கூடம் போகலாமா
பாடல் – கங்கையமரன்
பாடியவர்கள் – எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி
இசை – இசைஞானி இளையராஜா
படம் – கோயில்காளை
பாடலின் சுட்டி – http://youtu.be/kU9WyvDttkc

மனசு மயங்கும்…மனசு மயங்கும்
பாடல் – கவிஞர் வைரமுத்து
பாடியவர்கள் – எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை – இசைஞானி இளையராஜா
படம் – சிப்பிக்குள் முத்து
பாடலின் சுட்டி – http://youtu.be/yn2XVHqiUPg

மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு
பாடல் – பூவை செங்குட்டுவன்
பாடியவர் – இசையரசி பி.சுசீலா
இசை – கே.வி.மகாதேவன்
படம் – கந்தன் கருணை
பாடலின் சுட்டி – http://youtu.be/aGJhE1CwjWY

அன்புடன்,
ஜிரா

185/365