வல்லவன்

  • படம்: அன்பே வா
  • பாடல்: ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்
  • எழுதியவர்: வாலி
  • இசை: எம். எஸ். விஸ்வநாதன்
  • பாடியவர்கள்: டி. எம். சௌந்தர்ராஜன், பி. சுசீலா
  • Link: http://www.youtube.com/watch?v=UMgp2hO5l_8

பாவலன் மறந்த பாடலில் ஒன்று,

பாவையின் வடிவில் பார்த்ததும் இன்று!

தலைவனை அழைத்தேன், தனிமையைச் சொன்னேன்,

தழுவிடக் குளிர்ந்தேன்!

ஒரு கலையைச் சிறப்பாக நிகழ்த்துகிற ஒருவனை ‘வல்லவன்’ என்கிறோம், அதாவது, அதைச் செய்ய வல்லவன். பின்னர் இது இன்னும் நீண்டு, பலகலை வல்லவன், சகலகலா வல்லவன் என்று பாராட்டாகும்.

‘வல்லவன்’ என்ற வார்த்தை, சில நேரங்களில் ‘வல்லன்’ என்று சுருங்கும். உதாரணமாக, ‘சொலல்வல்லன், சோர்விலன், அஞ்சான், அவனை இகல்வெல்லல் யார்க்கும் அரிது’ என்கிற திருக்குறள்.

’வல்லன்’ என்ற வார்த்தை, மீண்டும் சுருங்கி ‘வலன்’ என்றும் மாறலாம். உதாரணமாக, இன்றைய பாடலில் வரும் ‘பாவலன்’ என்ற சொல்லை வைத்துக் கொஞ்சம் விளையாட்டாக யோசிப்போம்.

’பாவலன்’ என்றால் ‘பா வலன்’, அதாவது பாடல் எழுத வல்லவன், மரியாதையாகச் சொல்வதென்றால், பாவலர்!

அப்படியானால் ‘காவலன்’ என்ற வார்த்தையும் இதேமாதிரிதான், ‘கா வலன்’, அதாவது, காக்க வல்லவன்.

அப்போ, கண்ணகி புருஷன் பெயர் ‘கோவலன்’ என்று உள்ளதே, அதற்கு என்ன அர்த்தம்?

அது தெரியவில்லை, நம்மாழ்வார் பாடல் ஒன்றில் கண்ணனைக் ‘கோவலன்’ என்று அழைக்கிறார். அதற்கு ஒரு சுவாரஸ்யமான விளக்கம் சொல்கிறார்கள்.

வடமொழியில் ‘கோபாலன்’ என்ற சொல்தான் தமிழில் ‘கோவலன்’ என்று திரிந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. கோ பாலன் என்றால், பசுக்களைப் பராமரிக்கிறவன் / பரிபாலிக்கிறவன், மாடு மேய்க்கும் கண்ணன்.

‘கோ வலன்’க்கும் அதேபோல் கொஞ்சம் நீட்டிப் பிடித்து விளக்கம் சொல்லலாம், பசுக்களை மேய்க்க வல்லவன்.

இன்னும் பெட்டர், தமிழில் கோ என்றால் அரசன் என்று அர்த்தம், அரசர்களுக்கெல்லாம் அரசனான, அவர்களையெல்லாம் கட்டி மேய்க்கும் கண்ணனைக் ‘கோ வலன்’ என்பது பொருத்தம்தானே?

***

என். சொக்கன் …

02 06 2013

183/365