எங்கே எந்தன் காதலி

ஆண்கள் காதல் வந்ததும் (அல்லது அதற்கு முன்பே) காதலியைப்  பற்றி  ‘இவ  என்  ஆளு’ என்று நண்பர்களிடம் சொல்வதுண்டு. நேரடியாகவோ அல்லது வர்ணித்தோ இந்த அறிமுகம் நடக்கும். அல்லது தனிமையில் காதலியை நினைத்து  உருகுவதும் உண்டு. இப்படி நிறைய பாடல்கள் திரைப்படங்களிலும் உண்டு. வித்தியாசமான காதலியை அறிமுகம் செய்யும் சில வரிகளைப்  பார்க்கலாம்

வாலி எழுதிய உன்னிடம் மயங்குகிறேன் என்ற பாடலில் (படம்: தேன் சிந்துதே வானம் இசை: வி.குமார் பாடியவர்:  கே.ஜே.ஜேசுதாஸ்)

https://www.youtube.com/watch?v=PYhF-ipC2Jw

உன்னிடம் மயங்குகிறேன்

உள்ளத்தால் நெருங்குகிறேன்

எந்தன் உயிர் காதலியே

இன்னிசை தேவதையே

ஒரு பெண் பற்றிய வர்ணனை போல்தான் இருக்கிறது. காதலியைப்பற்றி சொல்ல ஆரம்பித்து ‘இன்னிசை தேவதையே’ என்கிறார். தொடர்ந்து ‘வஞ்சி உன் வார்த்தையெல்லாம் சங்கீதம்’ என்று இன்னொரு clue கொடுக்கிறார். கவிஞருக்கு இசைமீதுதான் முதல் காதல்.. இதே கருத்தை மீண்டும் இன்னொரு  பாடலிலும் சொல்கிறார். தங்கத்திலே வைரம் படத்தில் (இசை சங்கர் கணேஷ் பாடியவர்கள் கே.ஜே.ஜேசுதாஸ், SPB)

https://www.youtube.com/watch?v=nmvOZg0usCQ

என் காதலி யார் சொல்லவா

இசையென்னும் பெண்ணல்லவா

ராக தாளங்களில் நல்ல பாவங்களில்

நான் கொண்டாடும் கண்ணல்லவா

யார் தன்  காதலி என்று வெளிப்படையாக சொல்கிறார். இசை மேல் அவருக்கு இருக்கும் அளவுகடந்த காதல் இதோடு திருப்தி அடையவில்லை. இன்னும் இன்னும் எழுதலாம் என்று நினைத்து முத்தான முத்தல்லவோ படத்தில் ஒரு பாடல் (இசை எம் எஸ் விஸ்வநாதன், பாடியவர்கள் எம் எஸ் விஸ்வநாதன், SPB)

https://www.youtube.com/watch?v=n6D8REKB2ec

எனக்கொரு காதலி இருக்கின்றாள் அவள்

ஏழு சுரங்களில் சிரிக்கின்றாள்

கீதம் அவளது வளையோசை

நாதம் அவளது தமிழோசை

இசைக்காதலி  கவிதைக் காதலனை எப்படி அணைத்து அன்பு காட்டுவாள்?  இங்கே வாலி விளக்குகிறார். எழுத்து வடிவில் உள்ள கவிதை இசை வடிவம் பெறும்போது அங்கே பஞ்சமம், தைவதம் எல்லாம் கொஞ்சும் இல்லையா?

பஞ்சமம் பேசும் பார்வை இரண்டும்

பஞ்சணை போடும் எனக்காக

தைவதம் என்னும் திருமகள் மேனி

கைகளை அணைக்கும் இனிதாக

இசையை விரும்பும் காதலிக்கும் அனைவருக்கும் பொருந்தும் வரிகள். இன்னும் சொல்கிறார்

என்னுடன் வாழும் இன்னொரு ஜீவன்

மெல்லிசையாகும் என்னாளும்

காதலியை ‘என்னை மயக்கிய மெல்லிசையே’ என்று சொல்வது ஒருவகை. இசையே என் காதலி என்று சொல்வது கொஞ்சம் வித்தியாசம்தான்

மோகனகிருஷ்ணன்

181/365