சோடி

  • படம்: படிக்காதவன்
  • பாடல்: சோடிக்கிளி எங்கே சொல்லு சொல்லு
  • எழுதியவர்: வைரமுத்து
  • இசை: இளையராஜா
  • பாடியவர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி
  • Link: http://www.youtube.com/watch?v=lFkHedDXIFs

சோடிக்கிளி எங்கே, சொல்லு, சொல்லு,

சொந்தக் கிளியே நீ, வந்து நில்லு!

கன்னிக் கிளிதான் காத்துக் கெடக்கு, கண்ணுறங்காம,

பட்டுக் கிளி இதைக் கட்டிக்கொள்ளு, தொட்டுக் கலந்தொரு மெட்டுச் சொல்லு!

கிளிகள் நிறைந்த பல்லவி இது. நாம் கிளிகளைச் சுதந்தரமாகப் பறக்கவிட்டு, அந்த முதல் சொல்லைக் கவனிப்போம்: சோடி… இதற்கு என்ன அர்த்தம்?

ஹிந்தியில் ‘ஜோட்’ என்றால் பிணைப்பு என்று அர்த்தம், ஜோடி என்றால், பிணைக்கப்பட்டவர்கள், அந்தச் சொல்தான் தமிழில் கிரந்தம் தவிர்க்கப்பட்டு ‘சோடி’ என்று மாறிவிட்டதாக நினைத்திருந்தேன்.

ஆனால் உண்மையில், ‘சோடி’ என்பது தூய்மையான தமிழ் வார்த்தைதான் என்று தமிழண்ணல் எழுதிய ஒரு கட்டுரைமூலம் தெரிந்துகொண்டேன்.

தமிழில் சுவள், சுவடு, சோடு என்ற சொற்களுக்கு இணை (Pair) என்ற பொருள் உள்ளதாம், ‘அவங்க ரெண்டு பேரும் சுவடியாப் போறாங்க’ என்று கிராமத்து வழக்கில் சாதாரணமாகச் சொல்வார்களாம். மொழிஞாயிறு பாவாணரும் இந்தக் கருத்தை உறுதிப்படுத்துகிறார்.

இந்த ‘சுவடியா’ என்பதுதான் ‘சோடியா’ என்று மாறி, ‘சோடி’ என்ற சொல்லாக உருப்பெற்றிருக்கிறது, ‘சோடிக் கிளி’, ‘சோடிக் குயில்’ என்று பல திரைப்படப் பாடல்களிலும் இடம்பெற்றிருக்கிறது!

***

என். சொக்கன் …

30 05 2013

180/365