என்ன விலை அழகே
திரைப்பாடல்களில் இலக்கணம் இலக்கியம் மட்டும்தான் உண்டா வணிகவியல் இல்லையா என்று எனக்குள் இருந்த பட்டயக் கணக்காளன் (பயப்படாதீர்கள் எளிய தமிழில் Chartered Accountant தான்) கேள்வி கேட்க சரி தேடலாம் என்று ஆரம்பித்தால் நிறைய ஆச்சரியங்கள். வாழ்வின் பல நிலைகளில் வரவு செலவு கணக்கும் விலை பேரங்களும் என்று பல பாடல்கள்
முதலில் பிறப்பு. கண்ணதாசன் இது சத்தியம் படத்தில் எழுதிய ஒரு பாடல் (இசை எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி பாடியவர் பி சுசீலா) http://www.youtube.com/watch?v=52ZJTp3M7_I
காதலிலே பற்று வைத்தாள் அன்னையடா அன்னை
கண்மணியே வரவு வைத்தாள் உன்னையடா உன்னை
ஒரு தாயின் பார்வையில் பற்று வரவு என்று Debit /Credit சொல்லும் வரிகள். வாலி இதை பஞ்சவர்ணக் கிளி படத்தில் கண்ணன் வருவான் என்ற பாடலில் (இசை எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி பாடியவர் பி சுசீலா) அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகிறார்.http://www.youtube.com/watch?v=YPM1tb4J33k
உனக்கென்றும் எனக்கென்றும் உறவு வைத்தான்
இருவரின் கணக்கிலும் வரவு வைத்தான்
இருவரின் கணக்கிலும் வரவு வைத்தான் என்ற win-win சொல்லும் creative accounting அழகு. இந்த இரண்டு பாடலிலும் கொஞ்சப்படுவது ஆண்குழந்தை. பெண் குழந்தையின் வரவில் இவ்வளவு பெருமிதம் உண்டா ? இந்த அற்புதமான தாலாட்டைப் பாருங்கள் கண்ணதாசன் எழுதிய மலர்ந்தும் மலராத பாதி மலர் போல என்ற பாடலில் (படம் பாசமலர் (இசை எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி பாடியவர்கள் பி சுசீலா டி எம் எஸ் ) http://www.youtube.com/watch?v=R9zT_GGGL7M
தங்கக் கடியாரம் வைர மணியாரம்
தந்து மணம் பேசுவார் – மாமன்
தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார்
அடுத்த நிலை மாணவர்கள். கண்ணதாசன் எழுதிய பசுமை நிறைந்த நினைவுகளே (படம்: ரத்தத் திலகம் இசை: கே.வி. மஹாதேவன் பாடியவர்கள் : டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா) கவலையின்றி இருக்கும் காலம் பற்றி ஒரு பாடல். http://www.youtube.com/watch?v=gbjt59-KZDo
வரவில்லாமல் செலவுகள் செய்து மகிழ்ந்திருந்தோமே
வாழ்க்கைத் துன்பம் அறிந்திடாமல் வாழ்ந்து வந்தோமே
அப்புறம் காதல். இந்த நிலையில் ‘ஆனந்தம் வரவாக ஆசை மனம் செலவாக’ எல்லா கணக்கு வழக்கையும் அவர்களே பார்த்துக்கொள்கிறார்கள் தெய்வத்தாய் படத்தில் வாலி எழுதிய பாடல் (இசை: விஸ்வநாதன் – ராமமுர்த்தி பாடியவர்கள் டி.எம்.சௌந்தராஜன் – பி.சுசிலா) http://www.youtube.com/watch?v=NrGG18vwMzw
ஆண்: இந்த புன்னகை என்ன விலை
பெண்: என் இதயம் சொன்ன விலை
ஆண்: இவள் கன்னங்கள் என்ன விலை
பெண்: இந்த கைகள் தந்த விலை
என்ன அழகான டீலிங்! காதலில் சில விஷயங்கள் மாறுவதில்லை என்று நிரூபிக்க இதே வரிகளை மீண்டும் இன்னொரு பாடலில் எழுதுகிறார் வாலி (படம் காதலர் தினம் இசை ஏ ஆர் ரஹ்மான் பாடியவர் உன்னி மேனன்)http://www.youtube.com/watch?v=c4PDAPTcwC0
என்ன விலை அழகே
சொன்ன விலைக்கு வாங்க வருவேன்
புன்னகைக்கும் கன்னங்களுக்கும் அடுத்தது உள்ளம் என்ற இல்லம் தானே ? எங்க வீட்டுப் பிள்ளை படத்தில் வாலி எழுதிய பாடல் (இசை எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி பாடியவர்கள் பி சுசீலா டி எம் எஸ் ). ஒரு வரிவிளம்பரம் போட்டு பதிலும் வாங்கும் சாமர்த்தியம்.
http://www.youtube.com/watch?v=kbRLl0a24Zc
குமரிப்பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும்
குடியிருக்க நான் வருவதென்றால் வாடகை என்ன தரவேண்டும்
குமரி பெண்ணின் கைகளிலே காதல் நெஞ்சை தரவேண்டும்
காதல் நெஞ்சை தந்து விட்டு குடியிருக்க நீ வரவேண்டும்
‘நீ நின்ற இடமென்றால் விலையேறிப் போகாதோ’ என்ற மிகை வார்த்தைகளில் மயங்கும் பெண் என்ன செய்வாள்? காதல் முற்றி நெஞ்சில் சாரைப்பாம்பு சத்தம் கேட்கிறதாம் வைரமுத்து வாகை சூட வா படத்தில் எழுதிய சர சர சாரக்காத்து (இசை எம் ஜிப்ரான் பாடியவர் சின்மயி) http://www.youtube.com/watch?v=xxjvz-WGhaE பாடலில்
இத்து இத்து இத்து போன நெஞ்சு தைக்க
ஒத்த பார்வை பாத்து செல்ல
மொத்த சொத்த எழுதி தாரேன் மூச்சு உட்பட…
என்று மயங்கிய பெண் காதலிலே பற்று வைத்து … மறுபடியும் ஒரு புதிய ஆரம்பம்.
தொடரும் இந்த சுழல் தான் வாழ்வின் Bottomline !
மோகனகிருஷ்ணன்
178/365
amas32 11:03 am on May 28, 2013 Permalink |
காதலன் படத்தில் காதலிக்கும் பெண்ணின் கைகள்… பாடலில்,
குண்டு மல்லி ரெண்டு ரூபாய், உன் கூந்தல் ஏறி உதிரும் பூ கோடி ரூபாய்.
பஞ்சு மிட்டாய் அஞ்சு ரூபாய், நீ பாதி தின்று தந்ததால் லட்ச ருபாய்
என்ற வரிகள் வரும் :-)) அதுவும் ஒரு புதுவித அக்கௌண்டிங் தான் 🙂 காதலி கை பட்டு விலை goodwill ஏறுகிறது!
நல்ல பதிவு 🙂
amas32
Saba-Thambi 11:57 am on May 28, 2013 Permalink |
நல்ல concept
இன்னுமொரு பாடல் : http://www.youtube.com/watch?v=vAoUr0p094g
mokrish 6:20 pm on May 28, 2013 Permalink |
நினைவில் இருந்தது. ஆனால் விலைமதிப்பே சொல்ல முடியாத தருணங்களை மட்டும் சொல்லலாம் என்று இந்த பாடலை விட்டு விட்டேன்
kamala chandramani 1:14 pm on May 28, 2013 Permalink |
”வரவு எட்டணா, செலவு பத்தணா” – பாமாவிஜயம் பாட்டை விட்டுட்டீங்களே?
mokrish 6:28 pm on May 28, 2013 Permalink |
அந்த பாடலும் ‘கணக்கு பார்த்து காதல் வந்தது’ என்ற பாடலும் சேர்க்கலாம் என்று யோசித்தேன். வெறும் கணக்கு மட்டும் சொல்லாமல் விலை மதிக்க முடியாத தருணங்களை மட்டும் சொல்ல ஆசை. அதனால் விட்டுவிட்டேன்
elavasam 6:25 pm on May 28, 2013 Permalink |
வரவு எட்டணா செலவு பத்தணா அதிகம் ரெண்டணா தலையில் துண்டணா….
இந்த முக்கியமான பாடல் இல்லாத இந்தப் பதிவை நான் புறக்கணிக்கிறேன்!
mokrish 6:44 pm on May 28, 2013 Permalink |
நினைவில் இருந்தது. அந்த பாடலும் ‘கணக்கு பார்த்து காதல் வந்தது’ என்ற பாடலும் சேர்க்கலாம் என்று யோசித்தேன். வெறும் கணக்கு மட்டும் சொல்லாமல் விலை மதிக்க முடியாத தருணங்களை மட்டும் சொல்ல ஆசை.
mokrish 7:40 pm on May 28, 2013 Permalink |
‘கடைசியில் துந்தனா’ தானே?
rajnirams 10:30 pm on May 28, 2013 Permalink |
அருமை,ஆளுக்கொரு ஆசையின் கணக்கு பார்த்து காதல் வந்தது பாடலை நினைத்தேன்,அதை நீங்களே பின்னால் சேர்த்து விட்டீர்கள்:-)) வாலியின் “விலை மீது விலை வைத்து கேட்டாலும் கொடுத்தாலும் கடைதன்னில் தாயன்பு கிடைக்காதம்மா”என்ற அற்புத வரிகள் நினைவு வருகிறது.நெஞ்சிருக்கும் வரையில் வாலியின் வரிகள்-இருந்தால் தானே செலவு செய்ய…