குருவிக் கூடு
- படம்: வானம்பாடி
- பாடல்: தூக்கணாங்குருவிக் கூடு
- எழுதியவர்: கண்ணதாசன்
- இசை: கே. வி. மகாதேவன்
- பாடியவர்: பி. சுசீலா
- Link: http://www.youtube.com/watch?v=fF_P01DOlbI
தூக்கணாங்குருவிக் கூடு,
தூங்கக் கண்டார் மரத்திலே,
சும்மாப் போன மச்சானுக்கு, என்ன நினைப்பு மனசிலே!
’தூக்கணாங்குருவி’ என்ற பெயர் மிகப் பிரபலமானது. பேச்சுவழக்கிலும் பல நாட்டுப்புறப் பாடல்கள், சினிமாப் பாடல்களிலும்கூட இடம்பெற்றிருக்கிறது.
இந்தக் குருவியைவிட, மரத்திலிருந்து தொங்கும்விதமாக அது கட்டும் வித்தியாசமான கூட்டை எல்லாரும் அறிவர்.
சின்ன வயதில் இதை வைத்து ஒரு கதைகூடப் படித்திருப்போம், பெருமழையில் நனையும் குரங்கு : அதைக் கேலி செய்யும் தூக்கணாங்குருவி : ஓவர் அறிவுரை, கிண்டல், கேலியால் கடுப்பான குரங்கு, மரத்தின் மேலே ஏறி அந்தக் குருவியின் கூட்டைப் பிய்த்துப்போட்டுவிடும்!
இந்தக் கதை ‘விவேக சிந்தாமணி’யில் வருகிறது. இப்படி:
வானரம் மழைதனில் நனைய, தூக்கணம்
தான் ஒரு நெறி சொல, தாண்டிப் பிய்த்திடும்,
ஞானமும் கல்வியும் நவின்ற நூல்களும்
ஈனர்க்கு உரைத்திடில் இடர் அது ஆகுமே!
அந்தக் குருவி, மழையில் நனைந்த குரங்குக்கு நல்ல அறிவுரை சொல்லி என்ன பிரயோஜனம்? அதன் கூட்டை இழந்து அதுவும் மழையில் நனையவேண்டியதாகிவிட்டது.
அதுபோல, பாத்திரம் அறிந்து பிச்சையிடவேண்டும், ஞானமும் கல்வியும் நூல்களும் ஈனர்களுக்குப் போய் உரைத்தால், அப்புறம் நமக்குதான் பிரச்னை வரும்.
பாட்டு நன்றாகதான் இருக்கிறது. ஆனால், ஏதோ இடிக்கிறது!
நாம் இதுவரை ‘தூக்கணாங்குருவி’ என்றுதானே கேள்விப்பட்டிருக்கிறோம்? இந்தப் பாட்டில் ‘தூக்கணம்’ என்று வருகிறதே, தட்டச்சுப் பிழையா?
ம்ஹூம், இல்லை, ‘தூக்கணாங்குருவி’ என்று நாம் சொல்லிவருவதுதான் தவறு, அந்தக் குருவியின் நிஜப் பெயர், ‘தூக்கணம்’தான். இலக்கியங்களில் தூக்கணப் புள், தூக்கணக் குருவி என்றெல்லாம் குறிப்பிடப்படும்.
’தூக்கணம்’ என்ற பெயர், அந்தக் குருவி கட்டும் கூட்டின் காரணமாக அமைந்திருக்கலாம். ஏனெனில், இந்தக் குருவியின் கூடுபோன்ற வடிவத்தில் பெண்கள் காதில் அணியும் தொங்கல் / ஜிமிக்கி வகைக்கும் ‘தூக்கணம்’ என்ற பெயர் உள்ளது!
***
என். சொக்கன் …
27 05 2013
177/365
ptcv 10:38 am on May 27, 2013 Permalink |
தூக்கணம் +. Rope that holds a diver while he is under water; ஆழமான நீருள் முக்குளிப்பவனை முக்குளிக்குங்காலத்துக் கட்டியிருக்குங் கயிறு
தூக்கணம் tūkkaṇam
, n. < தூக்கு-. 1. Pendant, anything suspended; தொங்கல். (W.) 2. Suspended net-work of rope for supporting a pot; உறி. (சங். அக.)
காதணி மட்டுமல்ல, தொங்கும் அணி/பொருட்களுக்கு தூக்கணம் என்று சொல்லுவாங்க போல..
amas32 9:56 pm on May 30, 2013 Permalink |
பாடல் வரிகளை எப்படி நுட்பமாக ஆராய்வது என்று உங்கள் பதிவுகளை இங்கே படித்தாலே அறிந்து கொள்ள முடியும். இன்றும் ஒரு புதிய சொல் அறிமுகம் கிடைத்தது, நன்றி 🙂
amas32