’வேலன்’டைன்ஸ்’ ஸ்பெஷல்

வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன் தான்
புள்ளி வைத்து புள்ளி போட்டான் புதுக் கோலம்தான்
சொல்லித் தரச் சொல்லிக் கேட்டு – தினமும்
சொல்லித் தந்த சிந்து பாடினான்
வள்ளி இன்ப வல்லி என்று முல்லைச்சரம் கொண்டு சூடினான்
பாடியவர்கள் – இசைஞானி இளையராஜா, எஸ்.ஜானகி
பாடல் – கவிஞர் வாலி
இசை – இசைஞானி இளையராஜா
படம் – தெய்வவாக்கு
பாடலின் சுட்டி – http://youtu.be/10PSPLEH1D0

முதலில் நான் கவிஞர் வாலிக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். ஏன் தெரியுமா? இலக்கியத்திலும் வாழ்வியலிலும் மறைந்து போன ஒரு பழந்தமிழ் வழக்கத்தை மீண்டும் வெளிக் கொண்டு வந்தமைக்கு.

திரைப்படப் பாடல்களில் காதல் பாடல்களில் கண்ணனை உயர்வு செய்து எழுதி பலபாடல்கள் நிறைய உள்ளன. அவை கால மாற்றத்தையும் மக்களின் நம்பிக்கையில் உண்டான மாற்றங்களையும் காட்டுகின்றன. மாற்றங்கள் என்றால் அவை குறைகள் என்று பொருள் அல்ல. ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு மாறின என்று செய்தியாகச் சொல்வது போலத்தான்.

சரி. எதிலிருந்து மாறியது? சங்க நூல்களை எடுத்துப் பார்த்தால் காதல் என்று வந்தாலே முருகனும் வள்ளியும் தான். அகத்திணை நூல்கள் அத்தனையையும் எடுத்துப் புரட்டிப் பார்த்தால் அந்த உண்மை விளங்கும்.

குறுந்தொகை, நற்றிணை என்று பெரிதாகப் பட்டியல் போடலாம். அதனால்தான் சங்க இலக்கியங்கள் என்று பொதுவாகவே குறிப்பிட்டேன். சங்க இலக்கியங்கள் என்ன…. சங்கம் மருவிய காலத்து சிலப்பதிகாரத்திலும் அப்படித்தான்.

கோவலனுக்கும் கண்ணகிக்கும் திருமணம் நடக்கிறது. அதற்காக கோவலனை ஊர்வலமாக அழைத்து வருகிறார்கள். அப்போது புகார் நகரத்துக் கன்னிப் பெண்களெல்லாம் கோவலனைப் பார்க்கிறார்கள். அவன் அழகை ரசிக்கிறார்கள். “அட… பாத்தியா.. என்ன அழகா இருக்கான். அப்படியே முருகன் போல முறுக்கிக்கிட்டு இருக்கானே… காதலிச்சா இப்பிடி ஒருத்தனைக் காதலிக்கணும்.” என்று புகழ்கிறார்கள்.

கண்டு ஏத்தும் செவ்வேள்” என்று இசை போக்கி காதலால்
கொண்டு ஏத்தும் கிழமையான் கோவலன் என்பான் மன்னோ
நூல் – சிலப்பதிகாரம்
காண்டம் – புகார்க்காண்டம் (மங்கல வாழ்த்துப் பாடல்)
இயற்றியவர் – இளங்கோவடிகள்

பொண்ணு பாத்தா மகாலட்சுமி மாதிரி இருக்கா” என்று சொல்வது போல பையனைச் சொல்லும் போது முருகனை ஒப்பிட்டுச் சொல்லும் வழக்கம் தமிழரின் பழைய வழக்கம். அதுதான் சங்கத்தமிழ் முழுக்க விரவிக்கிடக்கிறது. எல்லா எடுத்துக் காட்டுகளையும் நான் குறித்து வைத்திருந்தாலும் ஒன்றேயொன்றை மட்டும் இங்கு பார்க்கலாம். கிட்டத்தட்ட இன்றைய திரைப்படங்களில் வருகின்ற காட்சியைப் போலத்தான் அந்த நற்றிணைக்காட்சி.

காதலில் தவிக்கிறாள் காதலி. காதலனோ சிறுகுடியன். அவனும் காதலில் குதித்துவிட்டு தப்பிக்க முடியாமல் தவிப்பவன். நேரம் பார்த்து இடம் பார்த்து கூடிக் கழிக்கும் இன்பம் அவர்களுக்கு வாய்த்தது. அப்போது அவன் அவளிடம் கேட்கிறான். “பெண்ணே.. மூங்கில் போன்ற தோள் அழகே… கொடியழகி வள்ளியம்மை முருகப் பெருமானோடு கிளம்பிச் சென்றது போல என்னோடு வந்து என்னுடைய சிறுகுடியில் வாழ்வாயா?

என்ன திரைப்பட வசனம் போலத்தானே இருக்கிறது? சரி.. அந்தப் பாடல் வரிகளைப் பார்ப்போம்.

வேய்வனப்பு உற்ற தோளை நீயே
என்னுள் வருதியோ நல்நடைக் கொடிச்சி
முருகுபுணர்ந்து இயன்ற வள்ளி போல
செய்யுள் – நோயும் நெகிழ்ச்சியும் என்று தொடங்கும் பாடல்
பாடல் எண் – 82
பாடியவர் – அம்மூவனார்
திணை – குறிஞ்சி

இப்போது புரிந்திருக்கும் நான் ஏன் கவிஞர் வாலிக்கு நன்றி சொன்னேன் என்று. இந்த ஒரு பாட்டில் மட்டுமல்ல இன்னும் சில பாடல்களிலும் வாலி முருகன் – வள்ளி காதலை எழுதியிருக்கிறார்.

செல்லப்பிள்ளை சரவணன் திருச்செந்தூர் வாழும் சுந்தரன்
வள்ளியை இன்ப வல்லியை குன்றம் ஏறிக் கொண்டவன்
படம் – பெண் ஜென்மம்
இசை – இளையராஜா
பாடியவர்கள் – பி.சுசீலா, ஏசுதாஸ்
பாடலின் சுட்டி – http://youtu.be/BGevMUI6t0A

அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அவன் ஆலயத்தில் அன்புமலர் பூசை வைத்தேன்
………….
பன்னிரண்டு கண்ணழகை பார்த்து நின்ற பெண்ணழகை
ஐயன் தான் ஆள வந்தான் பெண்மையை வாழ வைத்தான்
படம் – பஞ்சவர்ணக்கிளி
இசை – மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விசுவநாதன் – டி.கே.இராமமூர்த்தி
பாடியவர் – இசையரசி பி.சுசீலா
பாடலின் சுட்டி – http://youtu.be/9a0rNJBS594

சரி. இது போல முருகனை முன்னிறுத்திய காதல் பாடல்கள் உங்களுக்கு ஏதேனும் தெரியுமா? தெரிந்தால் சொல்லுங்களேன்.

அன்புடன்,
ஜிரா

175/365