ஒரு கணம் ஒரு யுகமாக

கடற்கரையில் உட்கார்ந்திருந்தபோது கவனித்த இன்னொரு விஷயம் – காத்திருத்தல். நிறைய பேர் தனியாக உட்கார்ந்து அலைகளைப்பார்க்காமல் சாலையில் வரும் வாகனங்கள் மேல் விழி வைத்து யார் வருகையையோ எதிர்நோக்கியிருக்கிறார்கள்.  பாலகுமாரன் எழுதிய வரிகள் நினைவுக்கு வந்தது

உனக்கென்ன

சாமி பூதம் கோவில் குளம் ஆயிரமாயிரம்

ஜாலியாய் பொழுது போகும்

வலப்பக்கக் கடல் மணலை

இடப்பக்கம் இறைத்திறைத்து

நகக்கணுக்கள் வலிக்கின்றன

அடியே –

நாளையேனும் மறக்காமல்

வா.

காத்திருத்தல் பற்றி நிறைய திரைப்பாடல்கள் உண்டு. உதாரணமாக, “16 வயதினிலே” படத்தில் கண்ணதாசன் எழுதிய இந்தப் பாடல் (இசையமைத்து பாடியவர்  இளையராஜா ) http://www.youtube.com/watch?v=Zr9LuHXaUN4

சோளம் வெதக்கையிலே சொல்லிப்புட்டு  போன புள்ளே ….,

சோளம் வெளைஞ்சு காத்து கிடக்கு சோடி கிளி இங்கே இருக்கு,

சொன்ன சொல்லு என்ன ஆச்சு தங்கமே கட்டழகி,

எனக்கு நல்லதொரு பதில சொல்லு குங்கும பொட்டழகி

என்ன சொல்கிறார்? இதோ வரேன் என்று போனவள்  திரும்பி வர சுமார் மூன்று மாதங்கள் ஆகிறதா? அடப்பாவமே!. நினைத்தாலே இனிக்கும் படத்தில் கண்மணி சுப்புவும் (இசை எம் எஸ் விஸ்வநாதன், பாடியவர் SPB ) இதையே சொல்கிறார் http://www.youtube.com/watch?v=XdooX-uKfKM

காத்திருந்தேன் காத்திருந்தேன்

காதல் மனம் நோகும் வரை..

பாத்திருந்தாய் பாத்திருந்தாய்

பச்சைக்கிளி சாட்சி சொல்லு…

நாத்து வைச்சு காத்திருந்தால்

நெல்லு கூட விளைஞ்சிருக்கும்…

இதுவும் ஒரு நீண்ட காத்திருப்பு போல் இருக்கிறது. ஏன் இப்படி? வள்ளுவன் தரும் விளக்கம் இதோ

ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்

வருநாள்வைத் தேங்கு பவர்க்கு

நெடுந்தொலைவு சென்ற காதலர் திரும்பி வரும் நாளை எதிர்பார்த்து ஏங்குபவர்க்கு ஒவ்வொரு நாளும் ஏழு நாள் போல்  தோன்றும் என்று ரிலேடிவிட்டி தியரி சொல்கிறார் வள்ளுவர். அதை கவிஞர்கள் சோளம் / நெல் விளையும் காலம் போல் என்று  காத்திருப்பின் வலியை அடிக்கோடிட்டு காட்ட கொஞ்சம் மிகைப்படுத்தி சொல்கிறார்கள்.

சரி இவன் இங்கு காத்திருக்க அவள் ஏன் திரும்பி வரவில்லை? மறந்து விட்டாளா அல்லது பாரதி சொன்னது போல் வார்த்தை தவறிவிட்டாளா ? (வறுமையின் நிறம் சிவப்பு இசை எம் எஸ் விஸ்வநாதன், பாடியவர் SPB ) http://www.youtube.com/watch?v=V43cycEi3Gw

தீர்த்தக்கரையினிலே தெற்கு மூலையில்

செண்பகத் தோட்டத்திலே

பார்த்திருந்தால் வருவேன் வெண்ணிலாவிலே

பாங்கியோடென்று சொன்னாய்…

வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா

பாலகுமாரன் கவிதையில் சொல்லும் நாளையேனும் மறக்காமல் வா என்ற வேண்டுகோள், திரைப்பாடல் வரிகள் சொல்லும் சோளம் / நெல் விதைத்து காத்திருக்கும் சலிப்பு, பாரதி சொல்லும் ஏமாற்றம் – கடற்கரையில் ஒவ்வொரு  மாலைபொழுதிலும் இவை எல்லாமே  அரங்கேறுகிறது.

மோகனகிருஷ்ணன்

174 / 365