தையல்
அக்கடான்னு நாங்க உடை போட்டா
துக்கடான்னு நீங்க எடை போட்டா
தடா… உமக்குத் தடா…
பாடலின் சுட்டி – http://youtu.be/u6zywS5ptm4
இந்தியன் படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வாலி எழுதிய பாடல் இது. பாடல் முழுக்கவே பெண் விடுதலை வரிகளாக வரும். சுவர்ணலதாவின் குரலில் கேட்க அட்டகாசமான கைமுறுக்குப் பாடல்.
மேடை ஏறிடும் பெண் தானே.. நாட்டின் சென்சேஷன்
ஜாடை பேசிடும் கண் தானே… யார்க்கும் டெம்ப்ட்டேஷன்
ஓரங்கட்டு ஓரங்கட்டுவோம்… ஹோய் ஹோய் ஓல்டையெல்லாம் ஓரங்கட்டும்
தய்யதக்க தய்யதக்க தோம்… ஹோய் ஹோய் தையலுக்கு கையத்தட்டுவோம்
ஆங்கிலமும் தமிழும் கலந்து எழுதப்பட்ட இந்தப் பாடலில் “தையலுக்கு கையத் தட்டுவோம்” என்றும் ஒரு வரி எழுதியிருக்கிறார் வாலி.
தையல் என்ற சொல் பெண்ணையும் குறிக்கும் என்று நம்மில் பலருக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும்.
”தையல் தளிர்க்கரங்கள்” என்று தமயந்தியின் கைகளைப் பற்றிச் சொல்லியிருக்கிறாரே புகழேந்திப் புலவர்.
தையலைப் பற்றி தையல் ஒருத்தி சொன்ன கருத்து இன்றும் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. மையல் கொண்ட பையல் எவனாயினும் இப்படிச் சொல்லியிருந்தால் அவனைப் பிய்த்து எடுத்திருப்பார்கள். அப்படிப் பட்ட ஒரு கருத்தைச் சொன்னார் ஔவையார்.
தையல் சொல் கேளேல்
நூல் – ஆத்திச்சூடி
எழுதியவர் – ஔவையார்
இப்படி ஔவை சொன்னதை ஆண் கவி ஒருவர் ஒத்துக் கொள்ளவில்லை. இவர் சற்றுப் பின்னால் வந்த கவியானாலும் தவறு என்று தனக்குப் பட்டதைத் தவறு என்றே சொன்னவர். பெண்களின் உயர்வுதான் உண்மையிலேயே நாட்டை உயர்த்தும் என்று நம்பியவர். அதனால் அவர் ”தையல் சொல் கேளேல்” என்பதை ஏற்காமல் மாற்றிச் சொல்கிறார்.
தையலை உயர்வு செய்
நூல் – புதிய ஆத்திச்சூடி
எழுதியவர் – பாரதியார்
பெண்களைப் பற்றிய கருத்து மாறிக் கொண்டே வருவதை இது போன்ற பலதரப்பட்ட காலகட்டங்களில் வந்த நூல்களிலிருந்து நாம் தெள்ளத் தெளிவாக புரிந்து கொள்ளலாம்.
ஒரு குடும்பத்தில் புதிதாக ஒரு பிரச்சனை வந்து அதற்கு தீர்வே புரியவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்? அந்தக் குடும்பத்திலேயே மிகமிக மூத்த பெண்ணாகப் பார்த்து வழி கேட்க வேண்டும். அந்தப் பெண் அனுபவத்தில் சொல்லும் வழி சரியாகவே இருக்கும் என்பதும் ஒரு கருத்து.
அந்தக் காலத்தில் போர்களின் காரணமாக ஆண்களை விட பெண்களின் வாழ்நாள் நீடித்திருந்ததால் பெண்கள் உலக நடப்புகளை அதிகமாக புரிந்து வைத்திருந்தார்கள். தெரிந்து வைத்திருந்தார்கள். நல்லதையும் கெட்டதையும் அனுபவித்துப் பக்குவமாகியிருந்தார்கள். ஆகையால் அவர்கள் சொல்லும் வழி சரியாகவே இருந்திருக்கும்.
ஆனால் இன்று தொலைக்காட்சித் தொடர்களில் சிக்கிக் கொண்டிருக்கும் பெண்களிடம் கருத்து கேட்டால் என்னாகுமோ என்று பயமாகத்தான் இருக்கிறது. ஒரு பெண்ணாகிய ஔவையாருக்கே பயம் வரும் அளவுக்கு அந்தக் காலத்துப் பெண்கள் என்ன பார்த்திருப்பார்கள்?!
சரி. முடிப்பதற்கு முன் ஒரு சிறிய நகைச்சுவைத் துணுக்கு.
ஒரு புலவருக்கு ஒருவர் வேட்டி தானம் கொடுத்தாராம். அந்த வேட்டியை வாங்கிப் பார்த்திருக்கிறார் புலவர்.
தானம் கொடுத்த மாட்டை பல்லைப் பிடித்துப் பார்க்கக் கூடாதுதான். ஆனாலும் அது கிழிந்த வேட்டி. எக்கச்சக்கமாக தையல்கள் வேறு. அதைப் பார்த்ததும் அந்தப் புலவர் வருத்தத்தை மறைத்துக் கொண்டு சிலேடையாக ஒரு வரி சொன்னாராம்.
சோமனுக்கு இருபத்தேழு தையல்
வேட்டிக்கு சோமன் என்றொரு பெயர் உண்டு. சோமனுக்கு இருபத்தேழு தையல் என்றால் வேட்டியில் அத்தனை தையல்கள் இருக்கின்றன என்று பொருள்.
சந்திரனுக்கும் சோமன் என்றொரு பெயர் உண்டு. சோமனுக்கு இருபத்தேழு தையல் என்றால் சந்திரனுக்கு இருபத்தேழு மனைவிகள் என்று பொருள். அதுவும் புராணப்படி உண்மைதான்.
ரோகிணி முதலான இருபத்தேழு நட்சத்திரங்களையும் சந்திரன் மணந்து கொண்டான். ஆகையால் சோமனுக்கு இருபத்தேழு தையல்.
இப்போது புரிந்திருக்குமே புலவரின் சிலேடை.
அன்புடன்,
ஜிரா
172/365
Saba 11:23 am on May 22, 2013 Permalink |
பெண்களின் உயர்வுதான் உண்மையிலேயே நாட்டை உயர்த்தும் -இதே தத்துவத்தை இந்திரா காந்தியும் பல கிராம விஜயங்களில் பாவித்துள்ளார்.
ஆமா உண்டி சுருங்குதல் தையலுக்கு அழகு என்று சொன்னதும் அதே தையல் தானே 🙂
எல்லாம் moderate ஆக இருந்தால் எல்லோர்க்கும் நலம்.
Arun Rajendran 1:00 pm on May 22, 2013 Permalink |
தமிழ் “கலாச்சாரம்”-னு என்னென்னவோ சொல்றாங்க..ஆனா தமிழ்நாட்டுல தான் தமிழன் பண்பாட தேடி கண்டுபிடிக்க வேண்டி இருக்கு…முந்நாள் தமிழ் இந்நாள் கேரள நாட்டில் கூட இன்னும் நம் பண்பாடு போற்றிப் பாதுகாக்கப்படுது…அதுல மிகவும் போற்றுதற்குரியது பெண்வழிச் சமுகம்…பெண் தான் குடும்பத்தலைவியாக இருப்பார்..சொத்தில் பங்கும் பெண்களுக்குத்தான்..வயதான மூதாட்டி தான் குடும்ப முடிவுகளை எடுப்பார்..இத்தகைய கட்டமைப்பில் மிகவும் இனறியமையாததும் சிறப்பானதும் கூட்டுக்குடும்ப முறை…ஆண் வழிச்சமுகம் விரவி இருந்த காலத்திலும் இத்தகைய பெண்வழிச்சமுகங்களும் தழைத்திருந்தன..எவ்வளவு தான் இழந்துட்டோம்..:-(
amas32 10:46 pm on May 22, 2013 Permalink |
புலவர்களுக்குத் தான் எவ்வளவு சாதுர்யம் வேண்டியிருக்கிறது, தங்கள் இன்னல்களை மறைக்க!
ஒரு புலவர் அரசினடம் தங்கத் தட்டு எனக்கா உங்களுக்கா என்று தனக்குப் பரிசுக் கொடுத்தத் தட்டும் தனக்கா அல்லது தங்கத்தட்டுப்பாடு அரசனுக்கா என்ற பொருளில் கேட்டதாகவும் படித்திருக்கிறேன். அரசன் என்ன செய்வான், தங்கத் தட்டு உமக்கே என்று சொல்லிவிட்டான் :-))
பெண்களுக்குப் பொதுவில் எதிர்கால விளைவுகளை ஆராய்ந்து செயல்படும் திறன் அதிகம்.
Nice post Gira 🙂
amas32
Sudhakar 12:43 pm on May 24, 2013 Permalink |
Ki-Va-Ja type “siladai”