ஆத்தோரம் மணலெடுத்து

ஒரு விடுமுறை தின ஸ்பெஷல் கொண்டாட்டமாக குடும்பத்துடன்  கடற்கரையில் ஒரு மாலைப்பொழுது. இதமான காற்று, அந்த குச்சி ஐஸ், பாய் / நாற்காலி என்று ஒரு பிக்னிக் போல வந்திருக்கும் குடும்பங்கள், காதலர்கள், சிலைகள், சுண்டல்  மாங்காய். தூரத்தில் கலங்கரை விளக்கம், இவை எல்லாவற்றையும் விட அழகு குழந்தைகள் பெரியவர்கள் என்று எல்லோரும் மணலில் விளையாடுவதுதான் – வீடு கட்டி, படம் வரைந்து , பெயர் எழுதி என்று பல வித விளையாட்டு.

மணலில் வீடு கட்டுவதைப் பார்த்தவுடன்  ஒரு பழைய பாடல் நினைவுக்கு வந்தது. கண்ணதாசன் எழுதிய ஆத்தோரம் மணலெடுத்து (படம் வாழ்க்கை வாழ்வதற்கே இசை எம் எஸ் விஸ்வநாதன் பாடியவர்கள் லதா, ரமாமணி) என்ற பாடல்.  http://www.youtube.com/watch?v=Ik38lU80tMg ஒரு சிறுவனும் சிறுமியும் வீடு கட்டும் கனவோடு பாடும் வரிகள்.

ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடு கட்டி…

தோட்டமிட்டு செடி வளர்த்து ஜோராக குடியிருப்போம்…

வெய்யிலிலே குளிர்ந்திருக்கும்

கையகலம் கதவிருக்கும் காற்றுவர வழியிருக்கும்…

வழி மேலே விழியிருக்கும் வந்தவர்க்கெல்லாம் இடமிருக்கும்…

எளிமையான வாழ்வுக்கு வகை செய்யும் ஒரு functional வீடு. சுற்றி கொஞ்சம் தோட்டம். வெயிலின் வெளிச்சம் வரும் – வெப்பம் வராமல். காற்று வரும். Guest space is in the hearts என்பது போல் வந்தவர்க்கெல்லாம் இடமிருக்கும். குழந்தைப்பருவத்தின் சிக்கலற்ற மனம் இப்படித்தான் யோசிக்கும். அருமை

ஆனால் வளர்ந்தபின் வரும் கற்பனை எப்படியிருக்கிறது? கண்ணன் வருவான் என்ற படத்தில் வாலி எழுதிய நிலவுக்கு போவோம் இடமொன்று பார்ப்போம் என்ற பாடல் ( இசை சங்கர்-கணேஷ் பாடியவர்கள் TMS , பி சுசீலா) http://www.youtube.com/watch?v=vIFM4-6yWTU

நிலவுக்கு போவோம் இடமொன்று பார்ப்போம்

மாளிகை அமைப்போம் மஞ்சத்தில் இருப்போம்

நடக்க முடியாத கற்பனை. மனிதன் நிலவில் காலடி வைத்தவுடன் கவிஞருக்கு தோன்றிய வரிகள். காதலர்கள் நிலவில் வாழ்ந்து பூமி பார்க்க இறங்கி வருவார்களாம்.

மெல்ல பேசுங்கள் என்ற படத்தில் செவ்வந்தி பூக்களில் செய்த வீடு என்ற புலமைப்பித்தனின் பாடலும் காதல் மயக்கத்தில் வரும் கவிதைதான்  (இசை இளையராஜா பாடியவர்கள் தீபன் சக்கரவர்த்தி, உமா ரமணன் )

https://www.youtube.com/watch?v=w_iKhaN3rLk (

‘செவ்வந்திப்பூக்களில் செய்த வீடு

வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு

வானவில்லில் அமைப்போம் தோரணம்

வண்டு வந்து இசைக்கும் நாயனம்

இதுவும் நடக்காத விஷயம்தான். அழகாக ஒரு கற்பனை. அவ்வளவுதான். குழந்தைகளாக இருக்கும்போது இருக்கும் தெளிவும் எளிமையும் practical சிந்தனையும் வளர்ந்தபின் இருப்பதில்லையோ? மணலில் வீடு கட்டி விளையாடுவது மீண்டும் குழந்தைகளாகும் முயற்சியா? அப்படியாவது இழந்த innocence திரும்ப கிடைக்கும் என்ற நம்பிக்கையா?

மோகனகிருஷ்ணன்

171/365