முத்தக் கணக்கு
- படம்: மிஸ்டர் ரோமியோ
- பாடல்: தண்ணீரைக் காதலிக்கும்
- எழுதியவர்: வைரமுத்து
- இசை: ஏ. ஆர். ரஹ்மான்
- பாடியவர்: சங்கீதா சஜித்
- Link: http://www.youtube.com/watch?v=pWiwA227l3U
அவனை இரவினில் சுமப்பேன்,
அஞ்சு மணிவரை ரசிப்பேன்,
கண்ணாளன் காதோடும் கண்ணோடும்
முந்நூறு முத்தாடுவேன்!
வைரமுத்து இன்னொரு பாடலில் ‘விடியும்வரை பெண் அழகு’ என்று எழுதியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. அதைச் சரி செய்வதற்காகவோ என்னவோ, இந்தப் பாடலில் கொஞ்சம் வித்தியாசமாக, ஒரு பெண் காலை(ஐந்து மணி)வரை ஓர் ஆணை ரசிப்பதாக எழுதிவிட்டார்போல!
அது நிற்க. அந்தப் பெண் அந்தக் காதலனுக்குத் தந்த முத்தங்கள் எத்தனை?
இதென்ன கேள்வி? பாட்டில் தெளிவாக 300 என்று பதில் வந்திருக்கிறதே!
300 என்று எண்ணில் எழுதிவிட்டால் பிரச்னையில்லை, எழுத்தில் பிரச்னை, முன்னூறு, முந்நூறு, எது சரி?
இரண்டுமே சரிதான். ஆனால் வெவ்வேறு அர்த்தம்.
முதலில், 300 விஷயத்தைப் பார்ப்போம், இது மூன்று + நூறு என்று பிரியும். இதற்கான தொல்காப்பிய விதி: ’நூறு முன் வரினும் கூறிய இயல்பே, மூன்றன் ஒற்றே நகாரம் ஆகும்.’
அதாவது மூன்று + நூறு என்று இணையும்போது, அதில் இருக்கும் ஒற்று ’ன்’ நகாரமாக, ‘ந்’ என்று மாறிவிடும்.
இதனால், மூன்று + நூறு = முந்நூறு. அதனை ‘முன்னூறு’ என்று எழுதுவது தவறு.
இன்னொருவிதத்தில் ‘முன்னூறு’ என்பதும் சரிதான், அதை முன் + நூறு என்று பிரிக்கவேண்டும். அப்போது அது முன்னூறு என்று புணரும்.
சுருக்கமாகச் சொன்னால்,
- ’இந்த வேலையைச் செய்வதற்கு முன்னூறு ரூபாய் கிடைக்கும்’ என்றால், வேலையைச் செய்வதற்கு முன் நூறு ரூபாய் கிடைக்கும், அதாவது, you will get an advance payment of Rs 100
- ‘இந்த வேலையைச் செய்வதற்கு முந்நூறு ரூபாய் கிடைக்கும்’ என்றால், you will get a payment of Rs 300
இப்போது, முத்தக் கணக்கை மறுபடி பாருங்கள், அவள் அவனுக்குத் தந்த முத்தங்கள் நூறா, முந்நூறா?
***
என். சொக்கன் …
17 05 2013
167/365
amas32 7:08 pm on May 19, 2013 Permalink |
I learnt another good lesson in தமிழ் இலக்கணம் 🙂 நீங்கள் கேட்டிருக்கும் கேள்விக்கு விடை சொல்வது ரொம்பக் கடினம் :-))
amas32