கூவியது குயிலா?

  • படம்: முதல் மரியாதை
  • பாடல்: ஏறாத மலைமேலே
  • எழுதியவர்: வைரமுத்து
  • இசை: இளையராஜா
  • பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி
  • Link: http://www.youtube.com/watch?v=_U76ZTYpyao

பாட்டுச் சத்தம் கேட்கலையா?

பாட்டுச் சத்தம் கேட்டதையா!

கூப்புடுற சத்தமெல்லாம், குயிலுச் சத்தமின்னிருந்தேன்,

உங்க சத்தமின்னிருந்தா ஓடோடி நான் வந்திருப்பேன்!

இந்த அட்டகாசமான பாடலைக் குறைந்தது நூறுமுறையாவது கேட்டிருப்பேன். ஆனால் ஒவ்வொருமுறையும், கிராமத்து ஆண், பெண் இடையே குறும்பான ஓர் உரையாடல் என்பதோடு என் புரிதல் நின்றுவிடும்.

’தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்’ என்ற நூலைச் சமீபத்தில் வாசித்துக்கொண்டிருந்தேன். காதல், குழந்தை, உழைப்பு, சமூகப் பிரச்னைகள், விளையாட்டு என்று வெவ்வேறு தலைப்புகளில் பல கிராமத்து மனிதர்களிடமிருந்து எஸ். எஸ். போத்தையா, எஸ். எம். கார்க்கி ஆகியோர் சேகரித்த பாடல்களைப் பேராசிரியர் நா. வானமாமலை தொகுத்து வெளியிட்டுள்ளார். அறுபதுகளில் வெளியான நூல் இது.

அதில் ‘குயில் சத்தமோ?’ என்று தலைப்பில் ஒரு பாடல். அதற்குச் சுவையான ஒரு முன் கதை.

உச்சிநத்தம் என்ற கிராமம். அங்கே ஒரு பெண், மொச்சைக் காட்டில் மும்முரமாக வேலை பார்த்துக்கொண்டிருக்கிறாள்.

இந்தப் பெண்ணுக்கு ஒரு காதலன். அவன் அவளைச் சந்திப்பதற்காக வருகிறான். மற்றவர்களுக்குத் தெரியாதபடி சீட்டி ஒலி எழுப்புகிறான்.

ஆனால், இப்படி நெடுநேரம் விசிலடித்தும், அவள் வரவில்லை.

அதன்பிறகு, அவன் கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அவளை நெருங்குகிறான், ‘நான் ஜாடையாக் கூப்பிட்டும் நீ வரலையே, ஏன்?’ என்று ஆதங்கத்துடன் கேட்கிறான்.

உடனே அவள் துடித்துப்போய்ப் பதில் சொல்கிறாள், ‘அடடா, உங்க சத்தமா அது? நான் ஏதோ மரத்துமேல குயில் கூவுற சத்தம்ன்னுல்ல நினைச்சுட்டேன்!’

‘நிஜமாவா சொல்றே?’

‘ஆமாங்க, உங்க குரல்ன்னு தெரிஞ்சிருந்தா ஓடி வந்திருக்கமாட்டேனா?’ என்று கொஞ்சும் அவள், அதை ஒரு பாட்டாகவே பாடிவிடுகிறாள். அந்தப் பாடல்:

உச்சி நத்தம் பாறையிலே

மொச்சை நெத்து உருவையிலே

கூப்பிட்ட சத்தமெல்லாம்

குயில் சத்தமின்னிருந்தேன்,

சாமி சத்தமின்னிருந்தால்

சந்நிதிக்கே வந்திருப்பேன்!

***

என். சொக்கன் …

14 05 2013

164/365