குடியிருந்த கோயில்

எழுபது எண்பதுகளில் என் பள்ளி, கல்லூரி நாள்களில் அன்னையர்தினம் என்று ஒன்று தனியாக தெரிந்ததில்லை ஆசிரியர் தினமும் குழந்தைகள் தினமும் மட்டுமே எங்களுக்கு தெரியும். இதை இந்தியா முழுவதும் கொண்டாடும் வழக்கம் எப்போது துவங்கியிருக்கும்?

தமிழ் இலக்கியத்தில் இது பற்றி ஏதாவது உண்டா ? தெரியவில்லை.  இது மேற்கிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதா ? படிப்புக்காகவும் வேலை தேடியும் கடல் கடந்த இந்தியர்கள் துவங்கியிருக்கலாம். அல்லது ஆர்ச்சீஸ் ஹால்மார்க் வாழ்த்து அட்டைகள் வந்தவுடன் துவங்கியிருக்கலாம்.

அன்னையர் தினம் என்று  கொண்டாடும் வழக்கம் இல்லைதான் . ஆனால் தாய்க்கும் தாய்மைக்கும் இந்தியா கலாசாரத்தில் ஒரு ஸ்பெஷல் இடம் உண்டு, இங்கு மரியாதைக்குரிய எல்லாமே தாய்தான். அம்மாதான் (அரசியல் பேசவில்லை!)

இங்கு கதைகளிலும் திரைப்படங்களிலும் தாய் – தியாக உருவான ஒரு உன்னத கதாபாத்திரம். தாயின் பெருமை சொல்ல நிறைய பாடல்கள் உண்டு. தாய் பற்றி எழுதாத கவிஞரே இல்லை என்று நினைக்கிறேன் அம்மா  பற்றி கண்ணதாசன் எழுதிய ஒரு பாடல் டீச்சரம்மா படத்தில்

http://www.youtube.com/watch?v=MP3XOTn1ju8

அம்மா என்பது தமிழ் வார்த்தை

அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை

அம்மா இல்லாத குழந்தைகட்கும்

ஆண்டவன் வழங்கும் அருள் வார்த்தை

கவலையில் வருவதும் அம்மா அம்மா

கருணையில் வருவதும் அம்மா அம்மா

தவறு செய்தாலும் மன்னிப்புக்காக

தருமத்தை அழைப்பதும் அம்மா அம்மா

பூமியின் பெயரும் அம்மா அம்மா

புண்ணிய நதியும் அம்மா அம்மா

தாயகம் என்றும் தாய்மொழி என்றும்

தாரணி அழைப்பதும் அம்மா அம்மா

வழக்கம் போல் எளிமையான வார்த்தைகளில் ஒரு statement of fact. (ஒரு நெருடல் – அம்மா என்பது தமிழ் வார்த்தை என்று சொல்கிறார். ஆனால் கூகிளில் தேடினால் –  Amma means mother in many languages. It is originally derived from the East Syriac word Emma which means mother என்கிறது . இது சரியா?)

ராம் திரைப்படத்தில் சிநேகன் எழுதிய ஓர் அழகான பாடல். தாயின் பாதமே சொர்கம் என்று சொல்கிறார் தாய்க்கு  ஒரு தொட்டில் கட்டி மகன் பாடும் தாலாட்டு போல் வரிகள் http://www.youtube.com/watch?v=4KwKnk3_-Jw

ஊர் கண் எந்தன் மேலே பட்டால் உன் உயிர் நோகத் துடித்தாயே

உலகத்தின் பந்தங்களெல்லாம் நீ சொல்லி தந்தாயே

பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே வழி நடத்தி சென்றாயே

தாய் சொல்கின்ற வார்த்தைகள் எல்லாம் நோய் தீர்க்கும் மருந்தல்லவா

சுழல்கின்ற பூமியின் மீது சுழலாத பூமி நீ

என்று சொல்லி அன்னை தான் எல்லாம் என்று முடிக்கிறார். அந்த கடைசி வரியின் தித்திப்பு … அருமை.

இந்தக்காலக் கவிஞர்கள் பலர் காதலியின் வளையோசை கவிதைகளில் மூழ்கி அவள் கால் கொலுசில் தொலைந்து என்று கற்பனையில் இருக்கும்போது பாரதிதாசன் வேறு விதமாக சிந்திக்கிறார் . எம் பி ஸ்ரீனிவாசன் இசையில் சேர்ந்திசையாக கேட்ட நினைவு. நிஜங்கள் என்ற படத்தில் வாணி ஜெயராம் குரலில் திரையிலும் வந்தது

. http://groups.yahoo.com/group/mytamilsongs/attachments/folder/2089257867/item/list

 அம்மா உந்தன் கைவளையாய் ஆகமாட்டேனா?

அலுங்கி குலுங்கி நடக்கையிலே பாடமாட்டேனா?

அம்மா உந்தன் காதணியாக ஆகமாட்டேனா?

அசைந்து அசைந்து கதைகளினைச் சொல்ல மாட்டேனா?

அம்மா உந்தன் நெற்றிப்பொட்டாய் ஆகமாட்டேனா?

அழகொளியாய் நெற்றி வானில் மின்னமாட்டேனா?

எவ்வளவு இனிமையான வரிகள்

இமைபோல  இரவும் பகலும் காக்கும் அன்னையின் அன்பு பார்த்த பின்பு அதைவிட வானம் பூமி யாவும் சிறியது  என்கிறார் வாலி. உண்மைதானே?

மோகனகிருஷ்ணன்

162/365