விருந்தினர் பதிவு : நலமறிய ஆவல்
- படம்: தில்லானா மோகனாம்பாள்
- பாடல்: நலந்தானா நலந்தானா..
- இசை: K.V.மகாதேவன்
- பாடியவர்: இசையரசி P. சுசீலா
- நாதஸ்வரம்: மதுரை சகோதரர்கள் சேதுராமன், பொன்னுசுவாமி
- பாடலாசிரியர்: கவியரசர் கண்ணதாசன்
உணர்ச்சிப் பிழம்பாக ஒரு சம்பவம், பாடலுக்கேற்ற ஒரு சிறந்த தருணம், இதைவிட ஒரு திரைப்படத்தில் இருந்திருக்க முடியுமா என்று தெரியவில்லை. அதுவும் நடிகர் திலகமும் நாட்டியப் பேரொளியும் சேர்ந்து நடித்துக் கொடுத்திருக்கும் ஒரு master piece! நாதஸ்வர கலைஞர் சிக்கல் ஷண்முக சுந்தரனும் நாட்டிய நங்கை மோகனாம்பாளும் உயிருக்கு உயிராகக் காதலிக்கின்றினர். எப்பவும் போல காதலுக்கு எதிர்ப்பு. இந்த முறை தாயின் வடிவில். வேறு ஒரு போட்டியில் ஷன்முகசுந்தரத்துக்குக் கத்திக் குத்துப் பட்டு, பின் உடல் தேறி வாசிக்கும் முதல் கச்சேரி அது. அந்த நிகழ்ச்சியில் நாட்டியமாட மோகனாம்பாளுக்குத் தாய் விதித்த ஒரு கட்டளை ஷன்முகசுந்தரத்துடன் பேசக் கூடாது என்பது தான். இசை வெள்ளமாகப் பாய்கிறது சிக்கலின் நாதஸ்வரத்தில் இருந்து, ஆனால் அதே சமயம் அடிப்பட்ட கையில் இருந்து இரத்தம் வடிகிறது. துடிதுடிக்கும் மோகனாம்பாள் தாயிடம் கொடுத்த வாக்கினால் காதலனிடம் பேச முடியவில்லை, அதனால் பாட்டினால் நலம் விசாரிக்கிறார்.
நலம் தானா? நலம்தானா?
உடலும் உள்ளமும் நலந்தானா?
நலம்பெற வேண்டும்
நீயென்று நாளும் என் நெஞ்சில் நினைவுண்டு
இலைமறை காய் போல் பொருள் கொண்டு
எவரும் அறியாமல் சொல் இன்று.
கண் பட்டதால் உந்தன் மேனியிலே
புண்பட்டதோ அதை நானறியேன்
என் கண் கண் பட்டதால் உந்தன் மேனியிலே
புண்பட்டதோ அதை நானறியேன்.
புண்பட்ட சேதியை கேட்டவுடன்
இந்த பெண் பட்ட பாட்டை யாரறிவார்?
நடந்ததெல்லாம் மறந்திருப்போம்
நடப்பதையே நினைத்திருப்போம்
கட்டுண்டோம் பொறுத்திருப்போம்
காலம் மாறும் சந்திப்போம்.
இதில் முக்கியமாக காதலியின் அதீத அன்பை இந்த வரிகள் காண்பிக்கின்றன.
கண் பட்டதால் உந்தன் மேனியிலே
புண்பட்டதோ அதை நானறியேன்
என் கண் கண் பட்டதால் உந்தன் மேனியிலே
புண்பட்டதோ அதை நானறியேன்.
புண்பட்ட சேதியை கேட்டவுடன்
இந்த பெண் பட்ட பாட்டை யாரறிவார்?
முதலில் கவிஞர் பொதுவாக கண் பட்டதால் உந்தன் மேனியிலே புண்பட்டதோ என்று காதலி குறிப்பிடுவதாகக் காட்டி பின் அடுத்த வரியிலேயே என் கண் பட்டதால் என்று சொல்லுவதாக எழுதியிருப்பது காதலியின் காதலுக்குப் பெருமை சேர்க்கிறது. புண் பட்ட சேதியைக் கேட்டவுடன் அவள் துடிப்பதை “இந்தப் பெண்பட்ட பாட்டை யாரறிவார்” என்கிறார். சொல்லமுடியாத அளவு துயரம்! இசைக்கே முக்கியத்துவம் கொடுத்த அதிக பாடல் வரிகள் இல்லாத பாடல் இது. ஆனால் சொல்ல வந்ததை உணர்ச்சிப் பூர்வமாக சுருங்கச் சொல்லி விடுகிறார் கவியரசர்.
சுசீலாம்மா பாடும்போது என்ன ஒரு பாவம்! இந்தப் பாடலுக்கு உயிர் சேர்ப்பது அவர் குரல் என்றால் மிகையாகாது. அவர் பாடியபின் அந்த குரலுக்கேற்ற நடிப்பைத் தருவதில் பத்மினிக்குச் சிரமமே இருந்திருக்காது. நாதஸ்வரமும், நாட்டியமும், பாவங்களைக் கொட்டி நடித்த நடிகர்களும் இந்தப் பாடலைக் காலத்தால் அழிக்க முடியாத காவியமாக்கி விட்டனர்.
பாடலின் சுட்டி http://www.youtube.com/watch?feature=endscreen&v=O2_lvaCrSLU&NR=1
சுஷிமா சேகர்
பிறந்தது பாண்டிச்சேரியில், வளர்ந்தது சென்னையில். கலிபோர்னியாவில் பத்து வருடங்களும் சிங்கப்பூரில் மூன்று வருடங்களும் இருந்துவிட்டுத் தற்போது வசிப்பது சென்னையில். குழந்தைகள் பிறந்த பிறகு MBA படித்தேன். நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் உண்டு. இணையத்துக்கு (டவிட்டருக்கு) வந்து இரண்டு வருடங்கள்தான் ஆகிறது. அதன் மூலம் எனக்குக் கிடைத்த நண்பர்களை எண்ணி மகிழ்கிறேன். இணையத்துக்கு வந்த பிறகுதான் தமிழ் பயில்கிறேன். நேசிப்பது என் தொழில், பொழுதுபோக்கு 🙂
சுஷிமா சேகர் வலைப்பதிவு: http://amas32.wordpress.com/
kamala chandramani 11:29 am on May 11, 2013 Permalink |
Super பதிவு சகோதரி. கதாநாயகி பாடல் மூலம் தன் மனதைத் தெரிவிக்கும் அருமை! கண்ணதாசனின் இடத்திற்குத் தகுந்தார்போல் வார்த்தைகள் வந்து விழும் எளிமை.! ……இன்னும் எதிர்பார்க்கிறோம்.
rajnirams 11:34 am on May 11, 2013 Permalink |
அருமையான பதிவு.சில பாடல்களை கேட்கும்போது காட்சியும் மனக்கண் முன்னால் தெரியும்.பாடல் சூழ்நிலை,வரிகளை எடுத்துக்காட்டி அந்த அற்புத காட்சியை மனக்கண் முன் நிறுத்தி விட்டீர்கள்..நடிகர் திலகத்தின் கண்ணசைவுகளும் நாட்டிய பேரொளியின் முக பாவங்களும் இப்போதும் அறிய முடிகிறது.கவியரசரின் வரிகளும் காலத்தால் அழியாதது-அறிஞர் அண்ணா உடல் நலமில்லாமல் இருந்தபோது அவரை எண்ணி எழுதிய வரிகள் என்று சொல்வார்கள்.பி.சுசீலா அவர்களின் குரல் இனிமையை என்னவென்று சொல்வது நன்றி,வாழ்த்துக்கள்.
GiRa ஜிரா 12:00 pm on May 11, 2013 Permalink |
கண்ணதாசனையும் சுசீலாம்மாவையும் பற்றிச் சொல்லனும்னா சொல்லிக்கிட்டே போகலாம். எத்தனையெத்தனை பாட்டுகள். அப்பப்பா!
அதிலும் தில்லானா மோகனாம்பாள். கே.வி.மகாதேவனின் இசைக்களஞ்சியம். பாரம்பரிய இசைன்னு வந்துட்டா… மத்த எல்லாரையும் விட கே.வி.மகாதேவனும் டி.கே.இராமமூர்த்தியும் எப்பவும் ஒரு படி மேலதான்.
மேடையில் காதலன் வாசிக்கும் நாதசுரத்துக்கு ஏத்தாப்புல பாடனும். ஆடனும். ஆனா அவனோடு பேசக்கூடாது. அவனோ அடிபட்டு உக்காந்திருக்கான். இவ்வளவுதான் காட்சியமைப்பு.
ஆனா அந்தக் காட்சியமைப்புக்கு ஒரு காவியப் பாடலையே குடுத்துட்டாங்க. எத்தனை நகல்கள் தில்லானா மோகனாம்பாளுக்கு வந்துருச்சு.
சரி. ஒரு யுடியூப் வீடியோ. இது தில்லானா மோகனாம்பாள் படப்பிடிப்பில் எடுக்கப்பட்டது. பிரெஞ்சுக்காரர் எடுத்த டாக்குமெண்டரி. இதில் subtitlesஐ ஆங்கிலத்துக்கு மாற்றிக் கொள்ளவும் முடியும். பார்க்காவிட்டால் பாருங்கள்.
amas32 8:15 pm on May 11, 2013 Permalink |
நன்றி கமலாம்மா, ரஜினிராம்ஸ், ஜிரா 🙂 அருமையான பின்னூட்டங்களுக்கு நன்றி 🙂
amas32
saba 8:42 pm on May 11, 2013 Permalink |
அருமையான பதிவு! பழைய பாடலாயினும் இன்றும் ஜொலிக்கிறது. மேலும் பல பதிவுகளுக்கு முன் வாழ்துக்கள்.
umakrishh 7:53 pm on May 12, 2013 Permalink |
இந்தப் பாடல் வந்த நேரத்தில் அண்ணாவின் உடல்நலம் சரியில்லை .அவருக்கு உடல் நிலை சரியில்லை என்பதை கருத்து வேறுபாடைத் தாண்டி இவ்வாறு நலம் விசாரித்து கவியரசர் எழுதினதாக எப்பவோ படிச்சிருக்கேன் . மிகப் பொருத்தமான கிரீடம் அணிந்திருப்பார் பத்மினி. பத்மினியின் துடிப்பு ஒவ்வொன்றையும் அது பிரதிபலிக்கும் கவனித்துப் பாருங்கள்.பொதுவாக ஜொலிக்கும் கற்கள் கொண்ட கிரீடம் அந்த நேரத்தில் வேதனைப் படுவது போன்றே தோன்றும் நமக்கு.இதைப் படித்து விட்டு சென்றபின்பும் பாடல் மனதை விட்டு அகல வில்லை .உடனே கேட்க வேண்டும் என்று தோன்றி கேட்டும் விட்டேன் 🙂
நானுமே ரசித்த வரிகள் என் கண் பட்டதால் என்று சொல்லும் போது அடைந்த வேதனையை நம்மையும் உணர வைத்திருப்பார் பத்மினி..காலத்தால் அழியாத பாடலும் அருமையான ஜோடியும். நேசிப்பது என் தொழில் பொழுது போக்கு என்பதை வெகுவாக ரசித்தேன் . அதை ஆத்மார்த்தமாக உணர்ந்திருப்பதால் மிகையில்லாத வார்த்தைகள் :)அருமை தொடர்ந்து எழுதுங்கள் !!
நாலு வரி நோட்டில் வந்தப் பதிவு. | amas32 10:22 am on May 21, 2013 Permalink |
[…] நன்றி: https://4varinote.wordpress.com/2013/05/11/guest28/ […]