ஆசானும் ஆசிரியரும்

  • படம் : அடிமைப் பெண்
  • பாடல் : அம்மா என்றால் அன்பு
  • எழுதியவர் : வாலி
  • இசை : கே. வி. மகாதேவன்
  • பாடியவர் : ஜெ. ஜெயலலிதா
  • Link: http://www.youtube.com/watch?v=f0tsvDUlzzg

அம்மா என்றால் அன்பு,

அப்பா என்றால் அறிவு,

ஆசான் என்றால் கல்வி,

அவரே உலகில் தெய்வம்!

மாதா, பிதா, குரு தெய்வம் என்ற வரிசையை மெட்டுக்குப் பொருத்தமாக இப்படி உட்காரவைத்திருக்கிறார் வாலி. கதைப்படி இந்தப் பாடல் குழந்தைபோன்ற உள்ளம் கொண்ட ஒரு கதாபாத்திரத்தை நோக்கிப் பாடப்படுவது என்பதால், எளிய வார்த்தைகளைக் கொண்டு கிட்டத்தட்ட ஒரு பாப்பாப் பாட்டுபோலவே அமைத்துள்ளார்.

இதில் ஆசிரியரைக் குறிப்பிட ‘ஆசான்’ என்ற வார்த்தையைக் கவிஞர் பயன்படுத்தியிருக்கிறார். இந்தச் சொற்கள் இரண்டுக்கும் என்ன அர்த்தம்?

ஆசிரியர் = ஆசு + இரியர்.

தமிழில் ‘ஆசு’ என்றால் குற்றம், ‘இரிதல்’ என்றால் கெடுதல், ஓடுதல், விலக்குதல். ஆக, ஆசிரியர் என்றால், (மாணவர்களிடம் உள்ள) குற்றங்களை நீக்குபவர். அவர்களை நல்வழிப்படுத்துகிறவர்.

கொஞ்சம் பொறுங்கள், இந்த விளக்கத்தில் ஒரு சின்னப் பிரச்னை.

ஆசிரியர் = ஆசு + இரியர் என்றால், ஆசான் = ஆசு + ஆன், குற்றம் புரிந்தவன் என்று அல்லவா அர்த்தம் வருகிறது?

தமிழில் ஒரே சொல்லுக்குப் பல அர்த்தங்கள் உண்டு. எங்கே எப்படி வருகிறது என்பதை வைத்துச் சரியானதைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளவேண்டும். Context Based Meaning.

இங்கே ஆசு = பற்றுக்கோடு. உதாரணமாக, கம்ப ராமாயணம் சுந்தர காண்டத்தில் அனுமனுடன் பேசும் சீதை, தான் விடுதலையாகும் நாளைப்பற்றிச் சொல்லும்போது ‘அரக்கர் தம் வருக்கம் ஆசு அற மீட்ட நாள்’ என்பாள். ஆசு அற = அரக்கர்களைப் பற்றிக்கொள்ள எதுவுமே இல்லாதபடி அழித்து என்னை மீட்கப்போகிறான் என் ராமன்!

அந்தவிதத்தில் ஆசு + ஆன் = மாணவர்களுக்குப் பற்றுக்கோடாகத் திகழ்கிறவர், ஏதாவது சந்தேகம்ன்னா புத்தகத்தை எடுத்துகிட்டு அவர்கிட்டதானே ஓடறோம்?

ஆனால் ஒன்று, சந்தேகம் நியாயமாக இருக்கவேண்டும், ‘நீங்க வெறும் தாஸா, லார்ட் லபக் தாஸா’ என்றெல்லாம் கேட்கத் தொடங்கினால் பிரச்னைதான்!

***

என். சொக்கன் …

11 05 2013

161/365