மயக்கமும் வழக்கமும்

  • படம்: எங்கள் தங்க ராஜா
  • பாடல்: இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை
  • எழுதியவர்: கண்ணதாசன்
  • இசை: கே. வி. மஹாதேவன்
  • பாடியவர்கள்: டி. எம். சௌந்தர்ராஜன், பி. சுசீலா
  • Link: http://www.youtube.com/watch?v=BU-D2Vi2d2M

ஆடை இதுவென நிலவினை எடுக்கும், ஆனந்த மயக்கம்!

’அம்மா குளிர்!’ என ஒன்றினை ஒன்று அணைப்பது பழக்கம்,

காலை நேரத்தில் காயங்கள் பார்த்து, களிப்பதென்பதே கவிதையின் விளக்கம்!

கவிஞர் சொன்னது கொஞ்சம், இனிமேல் காணப்போவது மஞ்சம்!

ஒரு கவிஞர் தன் பாடலிலேயே தன்னை ஒரு பாத்திரமாக்குவது நுட்பம், அதில் தன்னைத் தானே கேலி செய்துகொண்டு, அதன்மூலம் தன்னுடைய கதாபாத்திரங்களை ஒரு படி மேலேற்றி நிறுத்துவது, இன்னும் அதிநுட்பம்.

இதற்குச் சிறந்த உதாரணம், இன்றைய 4 வரிகள்.

இந்தப் பாடலைப் பாடும் ஜோடிக்குத் திருமணம் நிச்சயமாகியுள்ளது, அதை நினைத்து அவர்கள் ஆனந்தமாக ஆடிப் பாடுவதாகக் காட்சி அமைப்பு.

ஆனால் கவிஞரோ, வேண்டுமென்றே குறும்பாகச் சில அந்தரங்கக் காட்சிகளைப் பட்டியல் போடுகிறார். அவற்றை ஒவ்வொன்றாக ருசிப்போம்.

முதலில், அவனும் அவளும் கூடிக் களிக்கிறார்கள், அந்தச் சந்தோஷத்துக்கு நாம் இடைஞ்சலாக இருக்கவேண்டாமே என்று ஆடைகள் விடைபெற்றுக்கொள்கின்றன.

கூடல் முடிந்ததும் தூக்கம் வருகிறது. ஒருவரை ஒருவர் அணைத்தபடி உறங்கிவிடுகிறார்கள்.

சிறிது நேரம் கழித்து, அவளுக்கு விழிப்பு வருகிறது. எழுந்து உட்கார்கிறாள். அப்போதுதான், தன் உடலில் ஆடைகளே இல்லை என்பதை உணர்கிறாள். வெட்கப்படுகிறாள். சட்டென்று சுற்றிலும் தேடிக் கீழே இருக்கும் வெள்ளை ஆடையை அவசரமாகக் கை நீட்டி எடுக்கிறாள்.

ம்ஹூம், ஆடை கையோடு வரவில்லை. என்ன ஆயிற்று?

அட! அது ஆடையே இல்லை. அவர்கள் இருக்கும் ஜன்னலின் வழியே வந்த நிலா வெளிச்சம் தரையில் விழுந்து கிடக்கிறது. காதல் மயக்கத்தில் அதைத் தன்னுடைய உடை என்று நினைத்துவிட்டாள் அவள்.

என்ன? கண்ணதாசனின் அழகான கற்பனையை நினைத்துக் கிறங்குகிறீர்களா? பாராட்டவேண்டும் என்று தோன்றுகிறதா?

ஒருவேளை நீங்கள் பாராட்டினாலும், அவர் அந்தப் பாராட்டை ஏற்றுக்கொள்ளமாட்டார். அதன்மீது ‘Redirected To : ஜெயங்கொண்டார்’ என்று எழுதி அனுப்பிவிடுவார்.

காரணம், ஜெயங்கொண்டார் எழுதிய ‘கலிங்கத்துப் பரணி’யில் வரும் கற்பனை இது. கண்ணதாசன் அதைப் பொருத்தமாக இந்தப் பாடலில் பயன்படுத்தியிருக்கிறார்:

கலவிக் களியின் மயக்கத்தால்

கலை போய், அகலக் கலைமதியின்

நிலவைத் துகில் என்று எடுத்து உடுப்பீர்!

முதல் வரி ஆச்சா, அடுத்த வரிகளிலும் இதேபோல் ரசமான கற்பனைகள்தாம்.

காதல் மயக்கத்தில், அவர்கள் எத்தனைமுறை அணைத்தாலும் ஆசை தணிவதில்லை. இன்னும் இன்னும் அணைக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள். அதற்கு ஒரு காரணம் வேண்டுமே.

இருக்கவே இருக்கிறது, குளிர். லேசாகக் காற்று வீசினாலும், ‘அச்சச்சோ குளிர்!’ என்று பதறி, ஜோடியை அணைத்துக்கொள்கிறார்கள், அவன் உடலில் இவளும், இவள் உடலில் அவனும் குளிர் காய்கிறார்கள்.

மறுநாள் காலை, அவர்கள் தூங்கி எழுகிறார்கள். கன்னத்தில் நகக்குறிகளும் பல் பதித்த காயமும் இருக்கிறது. அந்தக் காதல் அடையாளங்களைப் பார்த்து ரகசியமாகச் சிரித்துக்கொள்கிறார்கள்.

இந்தக் காட்சிகளையெல்லாம் விளக்கிவிட்டு, நிறைவு வரியில் கண்ணதாசன் ஒரு பஞ்ச் வைக்கிறார், ‘ஜெயங்கொண்டாரும், நானும், இன்னும் பல கவிஞர்களும் இப்படிப் பலவிதமான அந்தரங்கக் காட்சிகளைக் கற்பனை செய்து சொல்லியிருக்கிறார்கள், ஆனால் அதெல்லாம் கொஞ்சம்தான், இனிமேல் எங்களுடைய மஞ்சம் காணப்போகும் ஆசைக் காட்சிகள்தான் நிறைய!’

கண்ணதாசனின் கற்பனைத் திறன், உத்தித் திறனுக்குச் சாட்சி பார்த்துவிட்டோம், இதே பாடலில் அவரது சொல்தேர்வுத் திறனுக்கும் ஓர் ஆதாரம் பார்த்துவிடலாமே.

இரண்டாவது வரியில், குளிர் என்று சொல்லிக்கொண்டு ஒருவரை ஒருவர் அணைத்துக்கொள்வது ‘பழக்கம்’ என்கிறார், அந்தச் சொல்லைக் கவனியுங்கள்.

இங்கே ‘பழக்கம்’ என்பதற்குப் பதில் ‘வழக்கம்’ என்றுகூடச் சொல்லியிருக்கலாம். மெட்டுக்கு இடைஞ்சல் இராது. ஆனால் கண்ணதாசன் அப்படிச் செய்யவில்லை. ஏன்?

வழக்கம், பழக்கம் என்ற சொற்களை நாம் சர்வசாதாரணமாக மாற்றிப் பயன்படுத்துகிறோம். ஆனால் அவற்றினிடையே ஒரு நுட்பமான வேறுபாடு உள்ளது.

வழிவழியாக வருவது வழக்கம், பழகிக்கொண்டது பழக்கம்.

உதாரணமாக:

  • சாம்பாரைக் காரமாகச் செய்வது தமிழ்நாட்டில் வழக்கம், அங்கிருந்து ஒருவர் இங்கே கர்நாடகாவுக்கு வந்து, உள்ளூர்ச் சாம்பாரை ருசிபார்த்துவிட்டு, அதில் கொஞ்சம் வெல்லத்தைப் போட்டால், அது பழக்கம் (இதையே சென்னையில் வசிக்கும் ஒரு கன்னடர் நேர்மாறாகச் செய்தால், அவருக்கு இனிப்புச் சாம்பார் வழக்கம், இனிப்பு இல்லாத சாம்பார் பழக்கம்)
  • அரிசிச் சோறு வழக்கம், நூடுல்ஸ், பர்கர், பிட்ஸா பழக்கம் (நமக்கு)
  • அன்பு வழக்கம், காதல் பழக்கம் … இப்படி இன்னும் நிறைய உதாரணங்கள் சொல்லலாம்

வழக்கம் சரி, பழக்கம் சரி, ’பழக்க வழக்கம்’ என்கிறோமே, அதென்ன?

பழக்கமாகத் தொடங்கியது, பின்னர் வழக்கமாகிவிடுகிறது. அதைப் ‘பழக்க வழக்கம்’ என்கிறோம், ‘வழக்க பழக்கம்’ என்று சொல்வதில்லை, காரணம், பழக்கம்தான் பின்னர் வழக்கமாக மாறும், வழக்கம் எதுவும் பழக்கமாக மாறமுடியாது!

இந்தப் பின்னணியில் அந்த வரியை மீண்டும் படித்துப்பாருங்கள். நேற்றுவரை அவனுக்குக் குளிர் எடுத்தால் போர்வையைதான் தேடுவான், இன்றைக்கு, அவளை அணைக்கத் தோன்றுகிறது, அது வழக்கம் அல்ல, புதுப் பழக்கம்!

***

என். சொக்கன் …

08 05 2013

158/365