காளமேகமும் காளிதாசனும் கண்ணதாசனும்

ஒரு கதை சொல்லப் போகிறேன். நடந்த கதையோ. கற்பனைக் கதையோ. ஆனால் கருத்துள்ள கதை.

புலவர்களைப் போற்றும் புரவலர்களும் இருந்த காலம் உண்டு. திருமலைராயன் அவையிலும் அறுபத்துநான்கு புலவர்கள் இருந்தனர். தண்டிகைப் புலவர்கள் என்று அவர்களுக்குப் பெயர். அவர்களின் புலமைக் கிணற்றில்தான் திருமலைராயன் தமிழ்த் தாகத்தை தீர்த்துக் கொண்டிருந்தான்.

அந்தக் கிணறுகளுக்கும் ஆணவம் வந்துவிட்டது. சுற்றிலும் தாளமேள ஆட்கள். பல்லக்குத் தூக்கிகள். கட்டியக்காரர்கள். போகையிலும் வருகையிலும் வாழ்த்தொலிகள்.

அந்த நிலையில் அந்த ஊருக்கு வந்தார் காளமேகப்புலவர். தண்டிகைப் புலவர்கள் நகர்வலம் வந்த வேளை அது. அவர்களைப் புகழ்ந்து காளமேகத்தையும் கூவச் சொன்னார்கள். “வருங்கால ஜனாதிபதி அதிமதுரக்கவிராயர் வாழ்க” என்று கூவியிருக்கலாம் காளமேகம். ஆனால் அப்படிச் செய்யவில்லை. அவர்களின் செய்கை தவறு என்று பாடினார்.

அந்தச் செய்தி அரசனுக்கு வேறுவிதமாகப் போனது. காளமேகப்புலவரின் மேல் ஒரு வெறுப்பு உண்டானது. அதனால் அரசவைக்கு வந்த காளமேகத்தை ஒழுங்காக வரவேற்கவில்லை. இருக்கை கொடுக்கவில்லை.

அப்போது காளமேகம் கலைமகளை மனதில் நினைத்து வணங்கினார். திருமலைராயனின் இருக்கை வளர்ந்து காளமேகத்துக்கும் இடம் கொடுத்தது.

வெள்ளைக் கலையுடுத்து வெள்ளைப் பணிபூண்டு
வெள்ளைக் கமலத்தே வீற்றிருப்பாள் – வெள்ளை
அரியாசனத்தில் அரசரோடென்னைச்
சரியாசனம் வைத்த தாய்

கலைமகளின் அருளால் அரியாசனத்தில் அரசரோடு அரசனாகச் சரியாசனம் பெற்றார் காளமேகம்.. அது அவருடைய பெருமையை உலகுக்கு எடுத்துச் சொன்னது.

இந்தப் பாடலைக் கவியரசர் கண்ணதாசன் ரசித்துப் படித்திருக்க வேண்டும். அதனால்தான் அதைச் சரியான இடத்தில் பயன்படுத்தியிருக்கிறார்.

மகாகவி காளிதாஸ் என்றொரு படம். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் காளிதாசராக நடித்து வெளிவந்த படம். அந்தப் படத்தில் ஒரு காட்சி. மடையனாக இருந்த இடையன் ஒருவனுக்குக் காளியின் அருளால் கல்லாத கல்வியும் சித்திக்கிறது.

ஞானம் சித்தித்த காளிதாசனின் எண்ணத்தில் பெருமை உண்டாகிறது. அது காளியின் அருளின் அருமை என்று உணர்கிறார். அந்த அருளினால்தான் புவியரசருக்குச் சமமாகக் கவியரசராய் ஆக முடிந்தது என்று புரிந்து கொள்கிறார். உடனே பாடல் வருகிறது.

யார் தருவார் இந்த அரியாசனம்
புவி அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம்
அம்மா.. யார் தருவார் இந்த அரியாசனம்

புவியரசருக்கு இணை கற்றறிந்த கவியரசர் என்று கண்ணதாசன் சொல்வது மிகப் பொருத்தம்.

பாடல் – யார் தருவார் இந்த அரியாசனம்
பாடியவர் – டி.எம்.சௌந்தரராஜன்
வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
இசை – திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன்
படம் – மகாகவி காளிதாஸ்
பாடலின் சுட்டி – http://youtu.be/Hoi4gwSbFas

அன்புடன்,
ஜிரா

157/365