பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த…

நண்பர் @rsGiri ஒரு பதிவில் கம்பன் ஏமாந்தான் பாடல் பற்றி சொல்ல ட்விட்டரில் அந்த பாடல் என்ன வகை என்று ஒரு சிறு விவாதம். என்ன வகை? யோசித்தால் இது ரியாலிட்டி செக் பாடலோ என்று தோன்றுகிறது,

பொதுவாக கவிஞர்கள் பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்தவர்கள். கவிதைக்கு பொய் அழகு என்று சொல்லி மிகை நவிற்சியில் திளைப்பவர்கள்.  நிலவே முகமாக, மேகமே குழலாக, வில்லினை ஒத்த புருவம் , செம்பவளம் இதழாக, முத்தே பல்லாக , மான் விழி தேன் மொழி என்று கவிதையாய் வர்ணித்து பாடல் எழுதுவர்.

நிறைய பாடல்களில் எல்லா வரிகளும் பெண்ணின் அழகைப்பாடுவதாகவே அமைவதுண்டு. சில வரிகளைப் பார்க்கலாம். ரகசிய போலீஸ் 115 படத்தில் வாலி எழுதிய கண்ணே கனியே என்ற பாடலில் நாயகியின் அழகு பற்றி வரும் வரிகள்   http://www.youtube.com/watch?v=Lam8AsnE3OE

ஒரு நாள் இரவு நிலவை எடுத்து உன் உடல் அமைத்தானோ

பல நாள் முயன்று வானவில் கொண்டு நல் வண்ணம் தந்தானோ

செம்மாதுளையோ பனியோ மழையோ உன் சிரித்த முகம் என்ன

சிறு தென்னம் பாளை மின்னல் கீற்று வடித்த சுகம் என்ன

படைத்தவனே பல  நாள் முயன்று வண்ணம் கொண்டு வந்த கற்பனையின் மிகை ரசமானது. வைரமுத்து பூவே இளைய பூவே பாடலில் http://www.youtube.com/watch?v=podBImbK5D0 சொன்னதும் இதே போல் மிகைதான்

குழல் வளர்ந்து அலையானதே

இரவுகளின் இழையானதே

இரு புருவம் இரவானது

இருந்தும் என்ன வெயில் காயுது

இதில் இருபுருவம் இரவானது என்றால் பிறை நிலவு போல் என்றுதானே அர்த்தம்? ஆனால் சுட்டும் விழிச்சுடர் என்பதால் வெயில் காயுதா?

கண்ணதாசன் செய்யாத வர்ணனையா? சிவந்த மண் படத்தில் பார்வை யுவராணி என்ற பாடலில் http://www.youtube.com/watch?v=0jn0ZS5ePlU

பாலென்று சொன்னாலும் பழமென்று சொன்னாலும் ஏனென்று தேன் வாடுமே

நூலென்ற இடையின்னும் நூறாண்டு சென்றாலும் தேர்கொண்ட ஊர்கோலமே

என்ற வரிகளின் நயம் பாருங்கள். இந்த பாடலில் தொடர்ந்து ‘ மான் வண்ணம் என்றாலும் மலர் வண்ணம் என்றாலும் குறைவென்று தமிழ் சொல்லுமே’ என்னும் போது மிகைதான் எவ்வளவு அழகு

ராஜபார்வை படத்தில் அழகே அழகு பாடலும் வர்ணனை தான். ஆனால். மேகம் போல் கூந்தல் செவிகள் கேள்விக்குறி போல் என்று ஓவியம் வரைந்து பாடல் காட்சியில் இந்த மிகையான வர்ணனை பற்றி ஒரு நக்கல் இருக்கும். http://www.youtube.com/watch?v=jqCH3PK6GxQ

இப்போது கண்ணதாசனின் கம்பன் ஏமாந்தான் பாடல் வரிகளைப் பாருங்கள்

அம்பு விழி என்று ஏன் சொன்னான் அது பாய்வதினால் தானோ – அவள்

அருஞ்சுவைப் பாலென ஏன் சொன்னான் அது கொதிப்பதனால் தானோ

அழகை வர்ணித்த வார்த்தைகளின் இன்னொரு கோணம் சொல்லி ஒரு வஞ்சப்புகழ்ச்சி. கவிஞர் ஒரு பழைய பாடலிலும் இதே போல் எழுதியிருக்கிறார். ‘ பாடினார் கவிஞர் பாடினார் பாடினார் கவிஞர் பாடினார்’ என்று ஒரு பாடல். பாடல் வரிகள் இந்த சுட்டியில்

http://powsdouble.blogspot.in/2013/01/blog-post.html

(நான் வானொலியில் கேட்டபோது இந்த பாடல் ‘நிச்சய தாம்பூலம்’ படத்தில் என்றே அறிவிப்பார்கள். ஆனால் இப்போது இணையத்தில் தேடியபோது இது ‘தென்றல் வீசும்’ என்ற படத்தில் இடம் பெற்றதாக படித்தேன்)

மான் என்றால் புள்ளி இல்லை

மயில் என்றால் தோகை இல்லை
தேன் என்றார் மீன் என்றார்
தெரிந்து சொன்னாரா ?
கன்னியரை பஞ்சவர்ண கிளிகள் என்றாரே
ஆனால் கன்னியர்கள் கோவைப்பழம் தின்பதில்லையே

என்று கிண்டலான வார்த்தைகள்.

நமக்கும் தெரியும் இந்த வர்ணனை எல்லாம் கொஞ்சம் ஓவர்தான் என்று. ஆனாலும் கண்ணதாசன் காதலியின் அணைப்பை வர்ணிக்க ‘ஒரு கோடி தாமரை கொடியோடு வளைத்து என்னை சிறை செய்ததோ’ என்று எழுதி அதை SPB குரலில் கேட்டால் என்ன சுகமோ சுகம்! மிகை நல்லது.

மோகனகிருஷ்ணன்

156/365