இலக்கிய வாசம்

  • படம்: சிவா
  • பாடல்: அடி வான்மதி
  • எழுதியவர்: புலமைப்பித்தன்
  • இசை: இளையராஜா
  • பாடியவர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம், கே. எஸ். சித்ரா
  • Link: http://www.youtube.com/watch?v=_NdoyW1CG1A

கோடைக் காலங்களில், குளிர் காற்று நீயாகிறாய்,

வாடை நேரங்களில், ஒரு போர்வை நீயாக வந்தாய்!

கண்கள் நாலும் பேசும் நேரம்,

நானும் நீயும் ஊமை ஆனோம்!

புலவர் புலமைப்பித்தனின் பாடல்களில் எப்போதும் இலக்கிய வாசனை இருக்கும், ஆனால் அது துருத்திக்கொண்டு தெரியாமல் மிக இயல்பாகச் சேர்த்திருப்பார்.

உதாரணமாக, இந்தக் காதல் பாடலை எடுத்துக்கொள்ளுங்கள், மேலோட்டமாகப் பார்த்தால் மீட்டருக்கு எழுதப்பட்ட வரிகளைப்போலதான் தெரியும். ஆனால் கொஞ்சம் ஆழச் சென்று பார்த்தால், திகைப்பு தோன்றும்.

முதல் இரு வரிகளை எடுத்துக்கொள்வோம் : கோடையின்போது என் உடலின்மீது ஜில் காற்றாக வீசிக் குளிர்ச்சி தருகிறவள் நீ, சில மாதங்கள் கழித்துக் குளிர் தொடங்கியபிறகு, நீயே எனக்குப் போர்வையாகிவிடுகிறாய், அதாவது, முன்பு குளிரைத் தந்த நீயே, இப்போது வெம்மையும் தருகிறாய்.

இப்போது, ’மன்னுயிர் அறியா’ எனத் தொடங்கும் ஒரு குறுந்தொகைப் பாட்டிலிருந்து ஒரு சிறிய பகுதி:

வேனிலானே தண்ணியள், பனியே

… சிறு வெம்மையளே!

மிகப் பழைய பாடல் என்றாலும், அர்த்தம் தெளிவாகப் புரியும் : என் காதலி வெயில் பொழுதில் எனக்குக் குளிர்ச்சி தருகிறாள், அதே காதலி பனியின்போது வெம்மை தருகிறாள்.

இப்போது, புலமைப்பித்தன் பாடலின் அடுத்த இரண்டு வரிகளை எடுத்துக்கொள்வோம்: காதலர்களின் கண்கள் நான்கும் பேசிக்கொள்ளும்போது, அவர்கள் இருவரும் ஊமை ஆகிவிடுகிறார்கள், அதாவது, வாய் இருந்தும், பேச முடிந்தும், அதனால் பயன் ஏதும் இல்லை.

இதற்கு இணையான திருக்குறள் வரிகள் எல்லாருக்கும் தெரியும்:

கண்ணொடு கண் இணை நோக்கு ஒக்கின் வாய்ச்சொற்கள்

என்ன பலனும் இல

நாலே வரி, முற்பாதியில் குறுந்தொகை, அடுத்த பாதியில் திருக்குறள், ஆனால் பாட்டைக் கேட்கிற யாருக்கும் இது வலிய ‘நுழைக்கப்பட்டிருப்பதாக’த் தெரியாது. இது புலமைப்பித்தனின் சாதுர்யம்மட்டுமல்ல, என்றைக்கும் பொருந்தக்கூடிய உவமைகளை, சிந்தனைகளை எழுதிக் குவித்த நம் முன்னோர்களின் பெருமையும்தான்!

***

என். சொக்கன் …

05 05 2013

155/365