விருந்தினர் பதிவு : நுதல்

  • பாடல் : மாசறு பொன்னே வருக
  • படம் : தேவர் மகன்
  • எழுதியவர் : வாலி

கோல முகமும்,

குறுநகையும், குளிர் நிலவென

நீலவிழியும் பிறை நுதலும்

விளங்கிடும் எழில்!

நுதல் : இந்த வார்த்தை இப்பொழுது அதிக புழக்கத்தில் இல்லை.

பொதுவாக இந்த வார்த்தை நெற்றியைக் குறிக்கவே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பாட்டிலும் கூட. நிலவைப் போன்ற நெற்றி என்ற பொருளில்

Frontal Bone(derived from Forehead) – இதற்குத் தமிழில் நுதலெலும்பு என்றப் பெயரும் இருக்கிறது. ஆனால் புழக்கத்தில் “நெத்தியில்/மண்டையில் அடிப்பட்டிருச்சு” என தான் பேசிக்கொள்வோம். மருத்துவர்கள் கண்டிப்பாக ஆங்கிலத்தில் தான் குறிப்பிடுவர். ஆக,ஒரு நல்ல வார்த்தை காணாமல் போய்விட்டது.

சங்க இலக்கியங்களில் பல இடங்களில் ”நுதல்” உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.

நற்றிணை

சுரும்பு இமிர் சுடர் நுதல் நோக்கி,
பெருங் கடற் சேர்ப்பன் தொழுது நின்றதுவே

சுடர் விடும் நெற்றி என்ற பொருளில்

அகநானூறு

விரி மலர் மராஅம் பொருந்தி, கோல் தெரிந்து,
வரி நுதல் யானை அரு நிறத்து அழுத்தி,

வரிகளையுடைய நெற்றியைக் கொண்ட யானை.

இவ்வளவு நல்ல வார்த்தை தமிழ்சினிமாவில் அதிகமாக உபயோகப்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை. இருந்தால் சொல்லுங்கள். ”முதல்” “இதழ்” “நுதல்” என ரைமிங் அழகா வருதே :))

இதழ் முத்தம் ,கணவன்-மனைவி,காதலன்-காதலி இடையே தான் பகிரமுடியும்.

நுதல் முத்தம் , யாரும் யாரிடமும் பகிரலாம். :))

பின்குறிப்பு : இது சம்பந்தமாக இணையத்தில் தேடியப்போது , இந்த லிங்க் கிடைத்தது. இதை எழுதியவர் ”நுதல்” என்ற வார்த்தைக்கு “கண்விழி”தான் பொருத்தமாக இருக்கும் என சில உதாரணங்களுடன் விளக்குகிறார். கொஞ்சம் பெரிய பதிவு. கமெண்ட்ஸையும் படிக்கவும்.

http://thiruththam.blogspot.sg/2010/07/blog-post.html

காளீஸ்

பிறந்து வளர்ந்தது நெல்லை மாவட்டம் புளியங்குடி.திருவண்ணாமலையில் எஞ்சனியரிங். Contact Center industry(Voip / IVR)யில் வேலை.சென்னையில் 7 வருடங்கள். இப்பொழுது சிங்கப்பூரில்.

பக்கத்துவீட்டில் தினத்தந்தி,விகடன்,குமுதம் பஸ் பயணங்களில் ராஜேஷ்குமார் என ஆரம்பித்த வாசிப்பு, வலைத்தள அறிமுகத்திற்குப்பிறகு கொஞ்சம் பரந்து விரிந்திருக்கிறது. ட்விட்டரில் 140க்குள் எழுத ஆரம்பித்து இப்பொழுது இங்கே வலைப்பதிவுவரை வந்திருக்கிறது : http://eeswrites.blogspot.sg/