பாடிக் களிக்கும் பண்பு

தமிழர் பண்பாட்டு வளர்ச்சியில் பாடல்களின் பங்கு மிகப்பெரியது. பிறந்தால் தாலாட்டு. இறந்தால் ஒப்பாரி. வளர்ந்தால் பிள்ளைத்தமிழ். நீரிறைக்க ஏற்றப்பாட்டு. நாற்று நட நாற்றுப்பாட்டு. நெல் குத்தும் போது வள்ளைப்பாட்டு. புனம் காக்கும் போது ஆலோலம். இப்படி பாடிக் கொண்டேயிருந்தவனே தமிழன். இலக்கியத்தையும் பாடல் வடிவில் எழுதித்தான் அவனுக்குப் பழக்கம். அதைத்தான் “பாட்டாலே புத்தி சொன்னார். பாட்டாலே பக்தி சொன்னார்.. அந்தப் பாட்டுக்கள் பலவிதம்தான்” என்று இளையராஜா எழுதிப் பாடினார்.

அதனால்தானோ என்னவோ பாடல்களைத் தமிழர்கள் அந்த அளவுக்கு நேசிக்கிறார்கள். அப்படியிருக்கும் போது பாடல்களை இனிய அபத்தம் என்று சொன்னால் சிரிக்காமல் என்ன செய்வது?

சரி. இவ்வளவு பேசுகிறோம். திடீரென்று யாராவது நம்மை யாராவது பாடச் சொல்லி விட்டால் என்ன செய்வோம்? எத்தனை பேர் உடனே பாடுவார்கள்? எத்தனை பேர் யோசித்து யோசித்து பாட்டு “படிப்பார்கள்”? சிரமம்தான். ஏனென்றால் நாம் பாடல்களை விட்டு வெகுதூரம் போய்க் கொண்டிருக்கிறோம்.

இந்த தர்மசங்கடம் திரைப்படப் பாத்திரங்களுக்கும் வந்திருக்கிறது. “என்னைப் பாடச் சொன்னால் என்ன பாடத் தோன்றும்” என்று கவியரசர் கண்ணதாசன் புதிய பறவை திரைப்படத்துக்காக எழுதியதுதான் முதலில் நினைவுக்கு வருகின்றது. “என்ன பாடத் தோன்றும்” என்று கேட்பதைக் கூட இனிமையாகக் கேட்க முடியும் என்று அந்தப் பாடல் நிரூபித்தது.

சிலருக்கு ”என்ன பாடத் தோன்றும்” என்று கேட்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை. பாடித்தான் ஆக வேண்டிய சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டு விடுவார்கள். அப்படி ஒரு சூழ்நிலைதான் பெண்பார்க்கும் படலம்.

பாடுவேனடி தோழி பாடுவேனடி, பல்லவி என்று மன்னன் கேட்க பாடுவேனடி” என்று அவள் பாடுகிறாள். அவளுக்குப் பாடாமல் இருக்க வழியில்லையே. பாடித்தானே ஆக வேண்டும். அதனால்தான் “பாடுவேனடி” என்று சொல்லத்தான் நினைக்கிறேன் படத்துக்காக எழுதினார் கண்ணதாசன்.

இன்றைக்குப் பேருந்துகளில் வீடியோக்களும் ஆடியோக்களும் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கின்றன. கிடைத்த ஐந்து நிமிடப் பயணத்தில் கூட வீடியோவில்தான் பயணிகள் கண். ஆனால் அந்தக் காலத்தில்? வண்டி கட்டிப் போகும் போது பாடிக் கொண்டே போவார்கள். ஆனால் அவர்கள் ராகங்களையோ தாளங்களையோ கற்றவர்கள் அல்லர். கவிதைகளை வாசித்தவர்களும் அல்லர். அவர்கள் பாடினால்?

இளையராஜாவின் குரலில் வண்டிக்காரன் ஒருவன் பாடுவதற்காக “என்ன பாட்டு பாட? என்ன தாளம் போட? வண்டி ஓடும் சத்தம். பாட்டுக்கேத்த சந்தம்” என்று சக்களத்தி திரைப்படத்துக்காக எழுதினார் புலவர் புலமைப்பித்தன்.

ஒருத்தி இருக்கிறாள். அவளுக்குக் கணவன் தெரியும். பிள்ளைகள் தெரியும். குடும்பம் தெரியும். வீடு தெரியும். சமையல் தெரியும். இங்கிதம் எல்லாம் தெரிந்த அவளுக்குத் தெரியாதது சங்கீதம் தான். ஆனால் அவளுக்கும் பாட்டு வருகிறது. தன்னாலும் பாட முடிகிறதே என்று அவளுக்கு வியப்பு. “நானா? பாடுவது நானா?” என்று வியப்போடு கேட்கிறாள் நூல்வேலி கதாநாயகி.

அவள் பாடுவதில் என்ன வியப்பு இருக்க முடியும்? அவள் தாயல்லவா. குழந்தையைத் தாலாட்டாத தாயும் உண்டோ? இதை அவளுக்கே எடுத்துச் சொல்கிறார் கவியரசர் கண்ணதாசன்.

“தாயின் தாலாட்டிலே தினம் தோன்றும் சங்கீதமே
நீயும் தாயல்லவா இதில் ஏனோ சந்தேகமே”

அவள் எல்லாரையும் போன்றவள். பாடச் சொன்னால் தப்பும் தவறுமாகத்தான் பாடுவாள். அவளையும் பாடச் சொன்னால் எப்படிப் பாடுவாள்? “என்ன பாடச் சொல்லாத நான் கண்டபடி பாடிப்படுவேன்” என்று ஆண்பாவம் கதாநாயகிக்காக எழுதினார் கவிஞர் வாலி.

சிலருக்கு அவர்கள் பாட்டுத் திறமை மேல் அவ்வளவு நம்பிக்கை. அவர்கள் பாடினால் எல்லாம் நடக்கும் என்று உறுதியாகச் சொல்கின்றவர்கள். “என் பாட்டைக் கேட்டா போதும் காதல் கொடி தன்னால் ஏறும்” என்று அவர்களுக்காக கங்கையரமன் எழுதி இசையமைத்தார். அந்தப் பாடல் சின்னதம்பி பெரியதம்பி படத்தில் இடம் பெற்றது.

இந்தக் காதல் இருக்கிறதே. அது ஒரு மந்திரவாதி. ஆடாதவரை ஆட வைக்கும். பாடாதவரைப் பாட வைக்கும். தேடாவரையும் தேட வைக்கும். அப்படித்தான் பாடத ஒருவனும் பாடினான். அவனுக்காக ”உன்னைப் பார்த்துக் கொண்டிருந்தால் பாட்டு வரும்” என்று எழுதினார் வாலி.

ஆயிரம் இருக்கட்டுமே. நாம் செய்யும் செயல் யாருக்காவது நன்மையாக அமைவதுதானே சிறப்பு. அப்படியும் பாடியவர்கள் திரைப்படங்களில் இருக்கிறார்கள்.

நான் பாடும் பாடல் நலமாக வேண்டும்” என்று வாலி வாழ்த்தினார். “எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்” என்று கவியரசர் எழுதினார்.

பதிவில் இடம் பெற்ற பாடல்கள்

என்னைப் பாடச் சொன்னால் (புதியபறவை) – http://youtu.be/3pQyUoo-wwA
என்ன பாட்டு பாட (சக்களத்தி) – http://youtu.be/uQaOXKHhKi0
நானா பாடுவது நானா (நூல்வேலி) – http://youtu.be/aszzDKEJ8xw
என்ன பாடச் சொல்லாதே (ஆண்பாவம் ) – http://youtu.be/xa5Wf43MnZk
என் பாட்டைக் கேட்டா (சின்னதம்பி பெரியதம்பி) – http://youtu.be/N-I1MY1NP7E
பாடுவேனடி தோழி (சொல்லத்தான் நினைக்கிறேன்) – http://youtu.be/1FpG4l4wOPY
உன்னைப் பார்த்துக் கொண்டிருந்தால் (நான் ஆணையிட்டால்) – http://youtu.be/xcDbGdsl_ZY
நான் பாடும் பாடல் (நான் ஏன் பிறந்தேன்) – http://youtu.be/rv6wRLjG–Q
எல்லோரும் நலம் வாழ (எங்க மாமா) – http://youtu.be/KPM20P7HDLs

அன்புடன்,
ஜிரா

154/365