நல்ல நல்ல நிலம் பார்த்து

சென்னை வெயில் கடுமையாகி எல்லாரும் கோடை மழையைப் பற்றி பேசுகிறார்கள் எனக்கு என் சுவாசக்காற்றே படத்தில் வரும் சின்ன சின்ன மழைத்துளிகள் பாடல் நினைவுக்கு வந்தது. வைரமுத்து மழையை சிலாகித்து எழுதிய வரிகள் http://www.youtube.com/watch?v=TC61Of_ZYKw 

சிறு பூவினிலே விழுந்தால்

ஒரு தேன்துளியாய் வருவாய்

சிறு சிப்பியிலே விழுந்தால்

ஒரு முத்தெனவே மலர்வாய்

பயிர் வேரினிலே விழுந்தால்

நவதானியமாய் விளைவாய்

என் கண்விழிக்குள் விழுந்ததனால்

கவிதையாக மலர்ந்தாய்

மழைத்துளி சேர்ந்த இடம் பொருத்து அதன் உருமாறும் என்று அழகாக ஒரு Outcome Analysis. இதே போல் வேறு ஏதொ படித்தது போல் தோன்றி, கொஞ்சம் யோசித்தவுடன் நினைவுக்கு வந்தது பைபிளின் உவமைக் கதைகள் . நான் படித்த பள்ளி, கல்லூரி இரண்டும் கிறிஸ்துவ நிறுவனங்கள் என்பதால் பைபிளோடு அறிமுகம் உண்டு. கண்ணதாசன் எழுதிய இயேசு காவியம் படித்ததால் ஒரு மறு அறிமுகம் கிடைத்தது. இயேசு விதைப்பவனும் விதையும் என்று ஒரு உவமைசொல்கிறார் .

விதைக்கிறவன் ஒருவன் விதையை விதைக்கப் புறப்பட்டான் அவன் விதைக்கையில் சில விதை வழியருகே விழுந்து மிதியுண்டது, ஆகாயத்துப் பறவைகள் வந்து அதை உண்டு எச்சமாய் போட்டது. சில விதை கற்பாறையின்மேல் விழுந்தது அது முளைத்தபின் அதற்கு ஈரமில்லாததினால் உலர்ந்துபோயிற்று. சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது முள் கூட வளர்ந்து, அதை நெருக்கிப்போட்டது. சில விதை நல்ல நிலத்தில் விழுந்தது, அது முளைத்து, ஒன்று நூறாகப் பலன் கொடுத்தது என்றார். இவைகளைச் சொல்லி, கேட்பதற்குக் காதுள்ளவன் கேட்கக் கடவன் என்று சத்தமிட்டுக் கூறினார்.

இதற்கு விளக்கம் சொல்லும்போது விதை என்பது இறைவனின் செய்தி என்று குறிப்பிடுகிறார்.  இயேசு காவியத்தில் கண்ணதாசன் வார்த்தைகளில் இந்த விளக்கம்

விண்ணரசின் செய்தியினை உணரா தானே

   வீதியிலே விதைக்கின்ற விதைபோல் ஆவான்!

கண்ணிறைந்த அவர்மொழியை ஏற்றும் ஏலான்

   கல்லினிலே விதைக்கின்ற விதைபோல் ஆவான்!

எண்ணத்தில் இவைஇருந்தும் மாயை மிக்கோன்

   எப்போதும் முள்விழுந்த விதைபோல் ஆவான்!

நண்ணுமிதை முற்றிலுமே பற்றிச் செல்வோன்

   நல்லநிலம் தனில்விதைத்த விதையே ஆவான்!

அருமையான விளக்கம். சரி ஆனால் கொஞ்சம் நெருடல். என்ன சொல்கிறார்? அவரவர்க்கு வாய்த்த இடம் அவன் போட்ட பிச்சை என்றால் , விதை விழுந்த இடமே விளைவுகளை நிர்ணயிக்கும் என்றால் கொஞ்சம் கடுமையாக இருக்கிறதே? விதைக்கு இடம் பெயர வழியில்லைதான் ஆனால் மனிதர்களுக்கு உண்டே?  என்ன செய்யவேண்டும் அதையும் கண்ணதாசன் சொல்கிறார் இக்கரைக்கு அக்கரைப் பச்சை  என்ற பாடலில்

http://www.inbaminge.com/t/a/Akkarai%20Pachai/Ikkaraikku%20Akkarai.eng.html

கடல் மீது விழுந்தோர்கள் நீந்துங்கள்

கனி மீது விழுந்தோர்கள் உண்ணுங்கள்

வழிச்சாலை கண்டோர்கள் செல்லுங்கள்

போக வழியின்றி நிற்பவர்கள் நில்லுங்கள்

வாய்த்த இடம் எதுவாக இருந்தாலும் முயற்சி செய்தால் நல்ல விளைவுகள் வரும். தெளிவான அறிவுரை.

மோகன கிருஷ்ணன்

153/365