விருந்தினர் பதிவு : சுந்தரி
சுந்தரி கண்ணால் ஒரு சேதி…
இந்தப் பாடல் பதிவு செய்யப்பட்டது மும்பையில். பாடலை எழுதியவர் வாலி. பாடலைப் பதிவு செய்த தினத்தில் மும்பை இசைக் கலைஞர்கள் வாய் பிளந்து அதிசயித்தார்களாம் . நிச்சயம் மிகையிருக்காது செய்தியில். அவ்வளவு பிரம்மாண்டம் பாடலில் கொடுத்திருக்கிறார் ராஜா .
பொதுவாக ஒரு நல்ல சேதி எதிர்பார்க்கும் பொழுது எங்கேனும் மணியடிக்கும் சத்தம் கேட்டால் அதை மங்களகரமாக நினைப்பது வழக்கம். ரஜினிக்கு தன் கோபம் உள்ளூர நம்மையெல்லாம் இவளுக்குப் பிடிக்குமா என்ற பரிதவிப்பு , மனசுக்குப் பிடிச்சிருந்தாலும் திருதிருன்னு விழிச்சுகிட்டு பயமும் தயக்கமுமாக ஷோபனா பிடிச்சிருக்குன்னு சொன்னவுடன் அடிக்கும் மங்கள மணியோசையில் ஆரம்பிக்கும் பாட்டு ..டாப் கியரில் தூக்கும்னு சொல்வாங்களே அப்படி இருக்கும் ஆரம்ப இசையே 🙂
சுந்தரி கண்ணால் ஒரு சேதி என்றதும் ஒரு மிக மெல்லிய புல்லாங்குழல் வரும் .
சுந்தரி கண்ணால் ஒரு சேதி (புல்லாங்குழல் )
சொல்லடி இந்நாள் நல்ல தேதி ((புல்லாங்குழல் )
என்னையே தந்தேன் உனக்காக (புல்லாங்குழல் )
ஜென்மமே கண்டேன் உனக்காக (புல்லாங்குழல் )
சில வருடங்களுக்கு முன்பு ஒரு வலைத்தளத்தில் CALL& RESPONSE பத்திப் படித்தேன் .அதாவது இசையினாலே அழைப்பும் அதே இசையிலேயே அதற்கு மறுமொழியும்.அதற்கு உதாரணமாக சில பாடல்கள் சொல்லிருந்தாங்க கீரவாணி என SPB அழைத்ததும் அடுத்து வரும் சிதார் இசை பல்லவியை அழகு படுத்தி இருக்கும் அந்த சிதார் இசை ஒவ்வொரு அழைப்பிற்கும் மறுமொழியாக .
அதே போல பாடும் வானம் பாடி ஹாங்….என்றதும் அடுத்து டொய் டொய் டொய்ங் என்று வருமே வீணை அவ்வளவு அழகாய் SPB க்கு ஈடு கொடுத்திருக்கும்.
பாடல் ஆரம்பத்தில் மட்டுமல்ல சரணத்திலும் பயன்படுத்தப் பட்ட பாடல்களும் உண்டு .
ஒரு பொன் மாலைப் பொழுது பாட்டின் சரணத்தில் ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும் ராத்திரி வாசலில் கோலமிடும் வரிகளுக்கு அடுத்து வரும் புல்லாங்குழல் .
இது பற்றி அறிந்த பொழுது ஒரு புது அனுபவமாக இருந்தது. ஆர்வத்தில் நான் கேட்ட சில பாடல்களை ஆய்ந்தேன். எதுவுமே அறியாமல் blank ஆக ஒரு பாடல் கேட்பது ஒரு சுகம் என்றால் ஏதேனும் அதில் உள்ள நுணுக்கம் அறிந்து கேட்கும் பொழுது அது இன்னமும் அழகாகிவிடுவதும் நிஜம்.
என் உதாரணங்கள் மிகச் சரிதானா என்று தெரியாது.ஆனால் இவை அந்த CALL &RESPONSE க்குப் பொருந்துவது போல ஒரு பிரம்மை. இசை நுட்பம் அறிந்தவர்கள் பிழை என்றால் திருத்தவும்.
- கண்ணா உனைத் தேடுகிறேன் வா என்று ஜானகி சொன்னதும் அடுத்து வரும் வயலின் கொஞ்சிக் குழைந்து அந்த அழைப்பை ஏற்கின்றது.உன்னோடுதான் வாழ்க்கை(புல்லாங்குழல்) உள்ளே ஒருவேட்கை (புல்லாங்குழல்)செல்லம் கொஞ்சி ம்ம் என்பது மறுமொழி செய்கின்றது.
- மஞ்சப் பொடி தேய்க்கையிலே என்றதும் அடுத்து வருகிற புல்லாங்குழல் இசை விசிலடித்துச் செய்யும் ரெஸ்பான்ஸ் கிளாஸ் 🙂
- பொன் மானே (புல்லாங்குழல்)கோபம் ( (புல்லாங்குழல்) ஏனோ ( (புல்லாங்குழல்)
- பூந்தளிர் ஆட (ஹம்மிங் ரெஸ்பான்ஸ் )
- காதல் கவிதைகள் படித்திடும் நேரம் ஆடியோ வெர்சனில் பாடல் இறுதியில் வரும் இதயம்ம்ம் இடம் மாறும் (ம்) இளமை பரிமாறும் அமுதும் வழிந்தோடும் (ம்) இடையில் வரும் இந்த இரண்டு ம் களும் வெகு நேர்த்தியான கொஞ்சல்கள் 🙂
வாலிக்கு கேக்கணுமா?சுருங்கச் சொல்லி நிறைய விளங்க வைப்பது என்பது இந்தப் பாடலின் ஒவ்வொரு வரியிலும் காணலாம். ரைமிங்காக எங்கிருந்துதான் வந்து விழுகின்றதோ வார்த்தைகள் 🙂
சில பாடல் வரிகள் எனக்குப் புரியாத பட்சத்தில் பாடியவர்தான் பிழை செய்திருக்கிறார் என்று உறுதியாய் நம்புவேன் 🙂
எனைத்தான் அன்பே மறந்தாயோ என்ற கேள்விக்கு . மறப்பேன் என்றே நிலைத்தாயோ என்று முடிப்பார்..
நியாயமா நினைத்தாயோ என்று தானே வரணும் ஏன் SPB தப்பா பாடறார் ? ஒருவேளை நம்ம காது தான் சரியில்லையோ அவர் சொன்ன நினைத்தாயோ தான் நமக்கு காதுல அப்படி விழுதோன்னு ஒவ்வொரு முறையும் கூர்ந்து கவனிச்சிருக்கேன்..ம்ஹ்ம்ம் ..:) இறுதியாக SPB மறந்தார்போல தவறு செய்திருக்கிறார் என்று ஒரு முடிவுக்கு வர வேண்டி இருந்தது..கோபமா நான் “மறப்பேன்னு நீ நினைச்சிட்டியோ” ன்னு தானே கேப்பாங்க என்ற எண்ணம். இப்பொழுதுநான் “மறப்பேன் என்பதை அப்படியே நம்பி அதே நிலைப்பாட்டில் இருந்துட்ட அதான் இப்படில்லாம் கேள்வி கேக்குற ” அப்படின்னு நானாக புரிஞ்சுகிட்டேன் (வேற வழி 🙂 )
அதே போல தேன் நிலவு நான் வாழ என்பது பொருந்தாமல் காண என்றிருந்தால் நன்றாக இருந்திருக்குமோன்னுதோன்றும்:)
இரண்டாம் சரணம் சில வரிகள் காதல் தேசம் படத்தில் என்னைக் காணவில்லையே நேற்றோடு பாட்டிலும் வரும் .மிக வழக்கமான வரிகளே எனினும் அவ்விடத்தில் ஆகப் பொருத்தம்.
உமா கிருஷ்ணமூர்த்தி
தென் மதுரைச் சீமையைச் சேர்ந்தவர். ட்விட்டரில் பெரியாள். தன்னுடைய வலைப்பதிவுக்கு (http://umakrishhonline.blogspot.in/) ”நிச்சயம் புரட்சிப்பெண் அல்ல, மனித கூட்டங்களின் நடுவே எனக்கென்று ஒரு அடையாளத்தை மட்டுமே விரும்புகின்றேன்” என்று Tagline வைத்திருக்கிறார்.
”வேற எதாவது சொல்லுங்க” என்றால் இப்படிப் பதில் வருகிறது: “மண் சட்டியில் சோறு ஆக்கி விளையாடுவது பிடிக்கும். பல்லாங்குழி வீட்டில் வைத்து இருக்கிறேன். மழை நின்றபிறகு மரத்தில் உள்ள நீரை உதிர்த்து விளையாடுவது பிடிக்கும். ஆற்று மணலில் வீடு கட்டி விளையாடுவது பிடிக்கும்”
anonymous 9:22 pm on May 2, 2013 Permalink |
மண்சட்டி மங்கை, பல்லாங்குழிப் பாவை = பதிவு மிக நன்று:)
//எனைத்தான் அன்பே மறந்தாயோ?
மறப்பேன் என்றே நிலைத்தாயோ//
பாவம் SPB:)
இளஞ் சோலை பூத்ததா? -ன்னு பாட்டு… Classical base
ஆனா நம்ம SPB, இளஞ் ***ஜோலை*** பூத்ததா? -ன்னு ஆரம்-பிப்பாரு:))
இதெல்லாம் மன்னிச்சி விட்டுருணும்:)
யேசுதாசின் “திருக்கோவிலே ஓடி வா” போலத் தான்;
இவர்களிடம் நிறைகள் அதிகம்; குறைகள் கம்மி.. Even legends do mistakes:)
Udit Narayan. Sadhana Sargam எல்லாம் நினைச்சிப் பாத்தீங்க-ன்னா, இவுங்களையெல்லாம் மன்னிச்சி, ஆசீர்வாதமே பண்ணீருவீக:)
கொஞ்சம் மைநக்கலே, கொஞ்சும் மைநக்கலே:)) -ன்னு, “தீவாவளிப் பண்டிகை” -ன்னும் பாடுவாய்ங்க; Bcoz itz their “Diwali” know?
—-
ஒரு மொழியில் ஊறி வளர்ந்தவர்கள், இன்னொரு மொழிக்குப் பாடச் செல்லும் போது, அந்த மொழிப் பலுக்கல்களை, “மிகுந்த பணிவோடு” கேட்டுக்கணும்;
வர்மா -ன்னு தமிழ் வழக்கம்; வற்மா -ன்னு அழுத்தமா மலையாள வழக்கம்; தென்பாண்டித் தமிழே பாட்டைக் கேளுங்க… இது ரவி வற்மாவின் ஓவியம் -ன்னு ஒலிக்கும்;
யேசுதாஸ் செய்யும் ஒலிப்புப் பிழைகள், இந்த வகையைச் சேர்ந்தது தான்; அவர் உள்ளுக்குள் கலந்து விட்ட மலையாளம் அப்படி;
இசைக்கு “ஆத்ம அர்ப்பணிப்பு” செய்பவர்கள்..
மொழிக்கும், “ஆத்ம அர்ப்பணிப்பு” செய்யணும்
இசைக்குத் தனியே மொழி இல்லை!
ஆனால் மனசிலே நிலைத்து விட்ட இசைக்கு = மொழி உண்டு!
அம்மாவே தனியாக் குழந்தை பெத்துக்க முடியாது; அப்பாவே தனியாக் குழந்தை பெத்துக்க முடியாது;
கூடல் தான் இன்பம்! = இசையும், மொழியும் “கூடணும்”
anonymous 9:43 pm on May 2, 2013 Permalink |
இசையில் “உச்சியில்” இருந்தாலும்,
மொழியில் extreme “பணிவு” உடையவர்கள்…
= இவர்கள் மட்டுமே உச்சரிப்புப் பிழைகள் (ஒலிப்புப் பிழைகள்) செய்வதில்லை
எனக்குத் தெரிஞ்சி ரெண்டு பேரு
(அதாச்சும் தமிழ் பாடும் வேற்று மொழிக்காரர்கள்)
1) சுசீலாம்மா
2) ஜெயச்சந்திரன்
TMS, சீர்காழி எல்லாம் தமிழ்நாட்டுக்காரவுக; இளமையில் தமிழ்; அதுனால அவுங்களை நான் கணக்குல சேத்துக்கலை;
தமிழ்ப் பாடகர்களே, (esp carnatic based), கண்களுக்குச் சொந்தஹம் இல்லை -ன்னு பாடும் போது, வேத்து மொழிக்காரவுங்களை என்னென்ன சொல்லுவது?:)
—–
நம் தமிழ் ஆளுங்க, வேற்று மொழியில் பாடும் போது எப்படியோ? I dunno
ஆனா எனக்குத் தெரிஞ்சி, 2 great ppl
1) இளையராஜா
2) எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மா
——
anonymous 10:00 pm on May 2, 2013 Permalink |
ராஜா பாடும் “சிவ சக்த்யா யுக்தெள” ; ஜனனி ஜனனி பாட்டின் ஆரம்பத்தை நல்லாக் கேளுங்க…
சம்ஸ்கிருதம் ஓதுறவங்களே, தப்பா ஓதிக், கல்யாணம் செய்விக்கும் இந்தக் காலங்களில்… இளையராஜா?
——–
சிவ சக்த்யா “யுக்த”… பிரபவிதும் -ன்னு பாட மாட்டாரு;
“யுக்தெள” -ன்னு பாடுவாரு;
ரெண்டுத்துக்கும் பொருள் நுட்பம் வேற;
ஈசனும்-அன்னையும் சங்கமிக்கும் அற்புதமான தருணம்!
*ஊருக்கெல்லாம் கருணை வள்ளலான சிவபெருமான், அன்னையை மட்டும் ரொம்பச் சோதித்து விட்டாரு…
*அவ, தவமாய்த் தவங் கெடந்து, “உண்ணா முலை” அம்மனா, அவரோடு முதல் முதலாச் சங்கமிக்கிறா…
சிவ சக்த்யா…
*யுக்த = உத்தி/ வழிமுறை; ஏதோ “சங்கம யுக்தி” -ன்னு பொருள் வந்துரும்;
*யுக்தெள = yuk+thou= யோகம்+உன்னோடு- ன்னு அழகிய பொருள்
சிவ சக்த்யா “யுக்தெள”
யதி பவதி சக்த பிரபவிதும்…
“உன்னோடு கலந்ததால் தான், ஈசனுக்கே உயிர்ப்புச் சக்தி வந்தது” -ன்னு அழகிய பொருள்!
அப்படியொரு ஆத்ம அர்ப்பணிப்பு = இளையராஜா
——–
எம்.எஸ்.அம்மாவும் அப்படியே!
சிலப்பதிகாரம், திருமால் பாட்டை = கரியவனைக் காணாத கண் என்ன கண்ணே! -ன்னு அவுங்க பாடற தமிழிசை ஒரு பக்கம் இருக்கட்டும்; அவுங்களே தமிழச்சி தானே;
ஆனா… “ப்ரீத-யர்த்தே” -ன்னு சுப்ரபாதம்;
அதில் ஒரேயொரு சொல்லு ஒலிப்புப் பிழை; “ப்ரீர்த்த-யர்த்தே” -ன்னு வந்துருச்சி;
அந்தக் காலத்தில், மறுபடியும் முதல்ல இருந்து தான், Re-Recording பண்ண முடியும்!
சுட்டிக் காட்டிய போது….
தலை குனிஞ்சி மறுபடியும் தம்பூராவும் கையுமா உட்காந்துட்டாங்களாம்; HMV Records!
amas32 4:52 am on May 3, 2013 Permalink |
ரொம்ப அருமையான பதிவு! எனக்கு மிகவும் பிடித்தமான பாடல். கண்ணால் சேதி சொல்வது தான் மிகவும் அற்புதமான communication. காதலர்களிடையே அந்த சங்கேத மொழிக்கு ஈடு இணை கிடையாது. புதிய technique, call and response பற்றித் தெரிந்து கொண்டேன், நன்றி 🙂
amas32
GiRa ஜிரா 8:56 am on May 3, 2013 Permalink |
பொதுவாகவே இசைங்குறது இசைவாய் வருவதுதான். முதல் வரிக்கு இசைவாய் அடுத்த வரி. இப்படி ஒன்றொரு ஒன்று இசைந்து நமக்கும் இசைவாய் வருவதுதான் இசை.
மூங்கில் இலை மேலே தூங்கும் பனி நீரேன்னு முதல் வரி வந்தா… அதுக்கு விடை சொல்வது போல தூங்கும் பனி நீரை வாங்கும் கதிரோனேன்னு சொல்லனும். அப்படிச் சொன்னாதான் பாடல் சுவைக்கும்.
ஒரு திருக்குறள் எடுத்துக்காட்டு சொல்றேன்.
தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி தன் … முதல் வரி.. அதுக்குள்ள ஒரு கேள்வி இருக்கு. அதுக்கு விடை? அது அடுத்த வரியில் இருக்கு.
மெய்வருத்தக் கூலி தரும்.
இது மாதிரி நிறைய செய்யுள்களை எடுத்துக்காட்டலாம்.
இளையராஜா தன்ராஜ் மாஸ்டர் கிட்ட படிச்சிட்டிருந்தப்போ என்ன என்ன வார்த்தைகளோங்குற எம்.எஸ்.வி பாட்டை பியானோவில் வாசிச்சாராம். அந்த மெட்டுக்குள்ள கேள்வி-பதில் இருந்ததாச் சொல்லி தன்ராஜ் மாஸ்டர் சிறப்பாப் பாராட்டினாராம். அப்படியெல்லாம் கேட்டு வளந்த ராஜா இசையில் இந்தக் கேள்வி-பதில் இல்லாமப் போனாத்தான் அதிசயம். எனக்குத் தெரிஞ்சு எம்.எஸ்.வியையும் ராஜாவையும் தவிர வேற யாரும் இந்தக் கேள்வி-பதிலை அவ்வளவு சிறப்பாகப் பயன்படுத்தலைன்னுதான் கருதுகிறேன்.
இன்னொரு எடுத்துக்காட்டு சொல்லி முடிச்சிக்கிறேன்.
கங்கை யமுனை – கேள்வி
இங்குதான் சங்கமம் – விடை
ராகம் தாளம் – கேள்வி
மோகனம் மங்கலம் – விடை
நல்ல அழகான பதிவாகக் கொடுத்திருக்கீங்க. இது போல அடிக்கடி வரவும் 🙂
anonymous 10:05 am on May 3, 2013 Permalink |
//சுந்தரி கண்ணால் ஒரு சேதி (புல்லாங்குழல் )
சொல்லடி இந்நாள் நல்ல தேதி ((புல்லாங்குழல் )//
சொல்ல மறந்துட்டேனே…இதே படத்திலேயே, இதே மாதிரி இன்னொரு பாட்டும் இருக்கே!
Guess what?:)
அடி, ராக்கம்மா கையைத் தட்டு (வயலின்)
புது ராகத்தில் மெட்டு கட்டு (வயலின்)
அந்த வயலி்ன் Screech, அந்த வரியின் அதே length தான் வரும்; வந்து ஒடனே நின்னுரும்;
Call & Response!
——–
இராகவன் சொன்னது போல், கங்கை யமுனை === இங்கு தான் சங்கமம் is also a fine example
MSV-யின் பல பாடல்களில், இந்த Call & Response, வரிகளில் அமையும்
அன்று வந்ததும் இதே நிலா – டடடா
இன்று வந்ததும் அதே நிலா – டடடா
ராஜா பாடல்களிலோ, இந்த Call & Response, இசைக் கருவிகளில் அமையும் (Mostly Violin or flute)
——–
தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி – ரொம்ப பிடிச்ச பாட்டு;
விடியாஆஆஆது திருமகள் இரவுகள்
ஒரு பேஏஏஏதை உறங்கிட மடி கொடு-ன்னு அந்த இழுப்பு & Curves;
ஆனா, இந்தப் பாட்டிலும் Call & Response உண்டு; கவனிச்சிப் பாருங்க;
மலர்மாலை தலையணையாய் (violin – உகு உம்)
சுகமே (violin – உகு உம்)
பொதுவாய் (violin – உகு உம்)
ஒருவாய் அமுதம்.. மெதுவாய்ப் பருகிய படி…
anonymous 10:32 am on May 3, 2013 Permalink |
Baa Baa Black Sheep – Have you any Wool?
Yes sir, Yes Sir – Three bags full
இதுவும் Call & Response தான்:)
சின்ன வயசுலயே இப்படிப் பழகிப் பழகி, இசையுடன் இசைந்து விடுகிறோம்:)
நாட்டுப்புறப் பாடல்களில் தான் இது அதிகம்;
பக்தி இலக்கியத்தில், one sided பேச்சாவே இருக்கும்; Call & Response ஆக இருக்காது;
ஆனா, ஆண்டாள்/ மாணிக்கவாசகர் மட்டும் விதிவிலக்கு; conversation, call & response-ஆக இவுங்க தான் எழுதுவாங்க;
சிலப்பதிகாரக் குரவையிலும் Call & Response உண்டு
—–
மானத்திலே மீன் இருக்க
மதுரையிலே நீ இருக்க
சேலத்திலே நான் இருக்க
சேருவது எக் காலம்??
இது போல நாட்டுப் பாடல்கள், Call & Response-ஆக எழும்!
இளையராஜா & Folk “ஒனப்புத்தட்டு” = http://madhavipanthal.blogspot.com/2013/04/folk.html
Uma Chelvan 10:34 pm on May 3, 2013 Permalink |
இதை போல் நிறைய எழுதுங்க உமா ! GRa அண்ட் KRS இன் நல்ல பதில்கல் (கமெண்ட்ஸ்) மேலும் சிறப்பு !!!
umakrishh 11:25 am on May 4, 2013 Permalink |
ரசித்து கமெண்ட் இட்ட அனைவருக்கும் மிக்க நன்றி :)) முருகா உங்களை இழுக்க எப்படி எல்லாம் தூண்டில் போட வேண்டி இருக்கு..அனானியாக வந்தாலும் எழுத்து நடை முருக நடைன்னு காட்டிக் கொடுத்திடுதே :))
Mohanakrishnan 5:43 pm on May 5, 2013 Permalink |
நெஞ்சதிலே நீ நேற்று வந்தாய் விசிலும் நலந்தானா நாதஸ்வரமும் நினைவுக்கு வருகிறது.
Mohanakrishnan 5:51 pm on May 5, 2013 Permalink |
ராஜாவின் பாடல்கள் பலவற்றில் இந்த signature இருக்கும்.
செந்தாழம் பூவில்
பாத மலர் நோகுமின்னு,
நானும் நின்றேன் சோலை ஓரம்
என்றவுடன் தொடரும் இசை துணுக்கு என்று 4/5 பாடல்களில் உண்டு என்று நினைக்கிறேன். இவையெல்லாம் Call & Response ஆ? அல்லது ஒரு கான்வெர்சேஷன் போல் இருந்தால் தான் C&R என்று சொல்லலாமா?
Muthu-Thirverumbur 10:14 am on July 18, 2013 Permalink |
“எனைத்தான் அன்பே மறந்தாயோ என்ற கேள்விக்கு . மறப்பேன் என்றே நிலைத்தாயோ என்று முடிப்பார்..”
“நிலைத்தாயோ” – You stand still in my memory…! Vali was correct.
But — over all good analysis!