கரடுமுரடு

  • படம்: மகுடி
  • பாடல்: கரட்டோரம் மூங்கில் காடு
  • எழுதியவர்: வாலி
  • இசை: இளையராஜா
  • பாடியவர்: இளையராஜா
  • Link: http://www.youtube.com/watch?v=-54mBn8FrtE

கரட்டோரம் மூங்கில் காடு, காட்டச் சுத்தி வண்டு பறக்குது,

ரீங்காரம் போட்டுக்கிட்டு, மூங்கிலையும் வண்டு தொளைக்குது,

வண்டு தொளச்ச ஓட்டை வழியே காத்து அடிச்சா,

ஒரு சத்தமும் கேட்குது, என்ன சத்தம்? அது என்னை இழுக்குது ஆக மொத்தம்!

’ரோட்டோரம்’ தெரியும், அதென்ன ‘கரட்டோரம்’?

அதே ஃபார்முலாதான். ரோடு + ஓரம் = ரோட்டோரம். கரடு + ஓரம் = கரட்டோரம்.

கரடு? இதென்ன புது வார்த்தை?

புதிதெல்லாம் இல்லை, ‘கரடுமுரடு’ என்று சொல்கிறோமே, அதில் வரும் ‘கரடு’தான் இது. பாறை, பெரிய கல், குன்று, சிறிய மலை என்பதுபோல் பொருள் சொல்லலாம்.

‘பொய்மான் கரடு’ என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். சேலத்திலிருந்து நாமக்கல் செல்லும் வழியில் உள்ள இந்தக் கரட்டை ஒரு குறிப்பிட்ட கோணத்திலிருந்து பார்க்கிறவர்களுக்குக் கொம்புகளுடன் ஒரு மான் உருவம் தெரியும். அதனால்தான் அப்படிப் பெயர் சூட்டப்பட்டது.

வித்தியாசமான இந்தக் கரட்டை வைத்துக் கல்கி அவர்கள் ஒரு சுவாரஸ்யமான கதைகூட எழுதியிருக்கிறார். கொஞ்சம் தேடினால் இணையத்தில் இலவசமாகவே கிடைக்கும்.

பழந்தமிழ் இலக்கியத்திலும் நிறைய கரடுகள் உண்டு. திருவருட்பாவில் வள்ளலார், ’பாறைகூட உருகிவிடும், என் மனம் உருகாதுபோலிருக்கிறதே’ என்று குறிப்பிடும்போது, ‘ஈண்டு உருகாக் கரடும் இதற்கு உருகல் அரிது அலவே’ என்கிறார்.

‘கரடு’ சரி, அதென்ன ’முரடு’?

அதுவும் நமக்குப் பரிச்சயமான வார்த்தைதான் ‘முரட்டுக் காளை’ என்று சொல்கிறோமே, அதன் வேர்ச்சொல்தான் இந்த ‘முரடு’, Roughness என்று பொருள்.

ஆக, ‘கரடு முரடு’ என்பதன் அர்த்தம், ‘முரடான கரடு’, அதாவது, Rough Rock!

***

என். சொக்கன் …

02 05 2013

152/365