இயற்கை என்னும் இளைய கன்னி

கவிதையின் கருப்பொருள் எதுவாக இருந்தாலும் அது நிகழும் இடம் அது சார்ந்த இடம் என்று ஏதோவொரு இயற்கை வர்ணனை இருக்கும். மன்னனை பாடும் பாடல்களிலும்  தலைவன் தலைவி பாடல்களிலும் கவிஞர்களின் கற்பனையில் வி்யப்பளிக்கும் உவமைகளும் இடம்பெறுவதுண்டு.

நளவெண்பாவில் மல்லிகையே வெண் சங்கா என்ற பாடலில்

மென் மாலைத் தோள் அசைய மெல்ல நடந்தே

புன் மாலை அந்திப் பொழுது

என்ற வரிகள்  படித்தேன் . ‘இந்த அந்திப் பொழுது ஓர் அழகிய பெண்ணைப்போலத் தோன்றுகிறது, முல்லை மலர்களால் ஆன மெல்லிய மாலை ஒன்றை அணிந்தபடி தோள் அசைய மெல்ல நடந்துசெல்கிறது என்கிறார் புகழேந்தி. எவ்வளவு அழகான கற்பனை.(தினம் ஒரு பா http://365paa.wordpress.com/2011/12/30/177/ )

அட என்ன இது … வழக்கமாக பெண்ணை வர்ணிக்கும்போது  இயற்கையை துணைக்கு அழைப்பது வழக்கம். இங்கே இயற்கையை வர்ணிக்கும்போது பெண் போல் இருப்பதாக சொல்கிறாரே?   திரைப்பாடல்களில் இது போல்  உண்டா? அந்திப்பொழுது பற்றி கண்ணதாசன் கற்பனையில்  சுமதி என் சுந்தரி படத்தில் வரும்

பொட்டு வைத்த முகமோ

கட்டிவைத்த குழலோ

பொன் மணிச்சரமோ

அந்தி மஞ்சள் நிறமோ

என்ற பாடலில் மாலை நேரத்து அழகை பெண்ணைப்  போல் என்று சொல்லி வர்ணிக்கிறார். கண்ணதாசன் அருவியை வர்ணிக்கும் ஒரு பாடல் ஒரே வானம் ஒரே பூமி படத்தில்

மலைராணி முந்தானை சரிய  சரிய

மண்மாதா வண்ணமடி விரிய விரிய

என்று மலையில் இருந்து வழியும் அருவியைப் பார்த்தவுடன் கவிதை வருகிறதாம். தொடரும் வர்ணனையைப் பாருங்கள்.

காதல் விட்ட மூச்சு ஒன்று பெருகிப் பெருகிக் காற்றாகி

காதலியின் கண்ணீர் தான் உருகி உருகி நீராகி

மேகமென்னும் தோழி வந்து கனியக் கனிய மொழி பேசி

தாயை விட்டு ஓடிச்செல்லும் பெண்ணைப் போல நழுவி

மேடை விட்டு ஆடித்துள்ளும் மென்மை தானோ அருவி

என்று எல்லா வரிகளிலும் பெண் போல என்று ஒரு அடையாளம் காட்டுகிறார். முள்ளும் மலரும் படத்தில் வரும் செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் பாடலும் இதே இயற்கையை பெண் போல வர்ணிக்கும் பாடல்

செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்

என் மீது மோதுதம்மா

பூ வாசம் மேடை போடுதம்மா

பெண்போல ஜாடை பேசுதம்மா

தென்றல் இவரிடம் பெண் போல  ஜாடை பேசுகிறதாம். அந்த பாடலில் மலைப்பாதையில் செல்லும்போது விரியும் காட்சிகளுக்கு ஒரு நேர்முக வர்ணனை அளிக்கிறார் . .

வளைந்து நெளிந்து போகும்பாதை மங்கை மோக கூந்தலோ?

மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் பருவ நாண ஊடலோ?

அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாகப் போகிறாள்

ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூடப் பார்க்கிறாள்

என்று மறக்க முடியாத அந்த அற்புதக்காட்சியை  பாடுகிறார்.

தமிழ்க்கவிதைகளில் இயற்கைக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. அதை பெண்ணின் அழகோடு சேர்த்து நயமாக சொன்ன பாடல்கள் வேறு ஏதாவது உண்டா?

மோகனகிருஷ்ணன்

150/365