சீமை

  • படம்: பதினாறு வயதினிலே
  • பாடல்: ஆட்டுக்குட்டி முட்டையிட்டு
  • எழுதியவர்: கண்ணதாசன்
  • இசை: இளையராஜா
  • பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி
  • Link: http://www.youtube.com/watch?v=EXVPl2aLQbc

காக்கையில்லா சீமையிலே,

காட்டெருமை மேய்க்கையிலே,

பாட்டெடுத்துப் பாடிப்புட்டு,

ஓட்டமிட்ட சின்னப் பொண்ணு!

’சீமை’ என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம்?

பொதுவாக வெளிநாட்டிலிருந்து வந்தவர்களை ‘சீமைத்துரை’ என்பது வழக்கம். ஆனால் வெளிநாடு என்பதுதான் ‘சீமை’க்கு உண்மையான பொருளா? ‘தென்பாண்டிச் சீமை’, ‘தென்மதுரைச் சீமை’, ‘சிவகங்கைச் சீமை’ என்று உள்நாட்டிலும் சீமைகள் உள்ளனவே.

‘சீமைக் கத்தரிக்காய்’ என்று ஒரு காய் உள்ளது, ‘சீமைப் பசு’ என்று ஒரு விலங்கு உள்ளது. அவையெல்லாம் வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாகிறதா?

அப்படியானால், சீமை என்பதன் அர்த்தம் ‘வெளியூர்’ என்பதாக இருக்குமோ?

இலங்கை மலையகப் பாடல்களில் “நம்ம சீமை” என்ற பயன்பாட்டைப் பார்க்கிறோம். இதன் அர்த்தம் என்ன? வெளிநாட்டை எப்படி “நம்ம” என்ற அடைமொழியோடு குறிப்பிடமுடியும்?

இந்தக் கேள்விகளைத் தொகுத்துப் பார்த்தால் ஒரு விஷயம் தெளிவாகப் புரியும், ‘சீமை’ என்பது வெளிநாடு அல்ல, வெளியூர்கூட இல்லை, அது ஒரு பகுதி, அவ்வளவுதான், ஊர், நகரம், மாவட்டம், மாநிலம், நாடு என்பதுபோல, நிலப்பகுதியைக் குறிக்கும் சொல்.

மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர் ‘பழந்தமிழ் ஆட்சி’ என்று ஒரு நூல் எழுதியுள்ளார். இதில் அவர் நான்குவிதமான ‘சீமை’களைக் குறிப்பிடுகிறார்:

  • நகரச் சீமை (City)
  • இனச் சீமை (ஓர் இனத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக வாழும் பகுதி)
  • தேயச் சீமை (Country)
  • கூட்டுச் சீமை (“United” States Of Americaபோல, பல நாடுகள் / சீமைகள் கூடி ஒரே சீமையாக வாழ்வது, Federal State)

அது சரி, கண்ணதாசன் சொல்லும் ‘காக்கையில்லா சீமை’ நிஜமாகவே இந்த உலகத்தில் உள்ளதா? அல்லது ஆட்டுக்குட்டி முட்டையிட்டுக் கோழிக் குஞ்சு வந்ததுபோல் அதுவும் கற்பனையா?

***

என். சொக்கன் …

29 04 2013

149/365