துயிலாத பெண் ஒன்று

காதலர்கள் நிறைய பேசுவார்கள். ஒருவரை மற்றவர் புகழ்ந்து, வர்ணித்து என்று ஆயிரம் இருக்கும். கூடவே சண்டையும் இருக்கும். கொஞ்சம் நிஜம் கொஞ்சம் பொய் என்று சண்டையிலும் பல வகைகள் உண்டு. இருவரில் யாருடைய அன்பு உயர்வானது என்று விவாதிக்கலாம். காதலில் யாருக்கு அவஸ்தை அதிகம் என்றும் விவாதிக்கலாம் ஒரு திரைப்படத்தில் நடிகர் கருணாஸ் காதலனும் காதலியும் பேசிக்கொள்ளும் ‘ம்ம் அப்புறம் ‘ என்ற sweet nothings ஐ கிண்டல் செய்வார்.  அழகன் படத்தில் நாயகனும் நாயகியும் விடிய விடிய பேசுவது ஒரு பாடல் காட்சியாக வரும்.

புதுமைப்பெண் படத்தில் வைரமுத்து எழுதிய  காதல் மயக்கம் என்ற பாடல் வரிகள்  http://www.youtube.com/watch?v=7Qd2Hy2kpFs

 ஆண் : நான் தூங்கும் வேளை கனவுகள் தொல்லை

பெண் : நான் தூங்கவில்லை கனவுகள் இல்லை

இந்த பாடலில் வரும் மற்ற வரிகள் வழக்கமான தேகம் சிலிர்க்க மேகம் மிதக்க, உன் பாதமே வேதம்  போன்ற Cliche வரிகள். ஆனல் இந்த தூக்கம் கனவு பற்றிய வரிகள் முதல் முறை கேட்கும்போதே பிடித்த வரிகள்.  ஆண் பெண் இருவரும் தூக்கம் பற்றியும் கனவு பற்றியும்  அவரவர் நிலை சொல்வது போல்.ஆண் சொல்வதென்ன? அவன் தூங்கும்போது நிறைய கனவுகள் வருகிறதாம். அதனால் தொல்லையாம். இதற்கு பெண் சொல்லும் பதில்தான் சுவாரஸ்யம்.

 நான் தூங்கவில்லை கனவுகள் இல்லை

மெய்யா…பொய்யா.. மெய்தான் ஐய்யா

நான் தூங்கவில்லை கனவுகள் இல்லை 

என்று சொல்கிறாள். ‘அடப்பாவி உன்னால் தூங்க முடிகிறது அதில் கனவு வருகிறது, வேறென்ன வேண்டும்? என்னைப்பார் எப்போதும் உன் நினைவில் இருக்கும் என்னால் தூங்கவே முடியவில்லை. அதனால் எனக்கு கனவே இல்லை என்று அவள் அனுபவிக்கும் வேதனை  சொல்கிறாள் இந்த வரிகளில் கொஞ்சம் இலக்கிய வாசம் .தேடினால் கம்பனிடம் போய் நிற்கிறது.

 துயில் எனக் கண்கள் இமைத்தலும் முகிழ்த்தலும்  துறந்தாள்;

வெயிலிடைத்தந்த விளக்கு என ஒளி இலா  மெய்யாள்;

சீதை அசோகவனத்தில்  உறங்கவேயில்லை. தூக்கம் என்று இமைகளை மூடுவதையும் திறப்பதையும் மறந்துவிட்டாள் என்ற கற்பனை. ஏன் இதை மறந்தாள்? வள்ளுவன் சொல்லும் விளக்கம் பாருங்கள்

இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே

ஏதிலர் என்னும் இவ்வூர் 

என் கண்கள் இமைத்தால் உள்ளிருக்கும் என்னவர் மறைவதை அறிந்து நான் கண்களை இமைப்பதில்லை என்று சாலமன் பாப்பையா உரையில் சொல்கிறார்.கம்பன் வேறு ஒரு இடத்திலும் இந்த தூங்காத நிலைப்பற்றி சொல்லும் வரிகள்

 துயில்இலை ஆதலின் கனவு தோன்றல

அயல்விழி ஒரு கனவு அமைய நோக்கினேன்

திரிசடை சீதையிடம் கூறுவது  – நீதான் தூங்குவதே இல்லையே அதனால்தான் உனக்கு கனவுகளே இல்லை. நான் கண்ட கனவை சொல்கிறேன் கேள் என்கிறாள். வைரமுத்துவின் புதுமைப்பெண் நாயகியும் தான் இதே நிலையில் இருப்பதை காதலனிடம் சொல்கிறாள்.

 உறவோடு விளையாட எண்ணும்

கண்கள் உறங்காது உறங்காது கண்ணே

 என்று கண்ணதாசன் சொல்வதும் துயிலாத ஒரு பெண்தான். 

மோகனகிருஷ்ணன்

147/365