அணைகள்

  • படம்: ஆறிலிருந்து அறுபதுவரை
  • பாடல்: கண்மணியே, காதல் என்பது
  • எழுதியவர்: பஞ்சு அருணாசலம்
  • இசை: இளையராஜா
  • பாடியவர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி
  • Link: http://www.youtube.com/watch?v=7Bjq3XnRxWQ

பாலும் கசந்தது, பஞ்சணை நொந்தது,

காரணம் நீ அறிவாய், தேவையை நான் அறிவேன்!

நாளொரு தேகமும், மோகமும், தாபமும் வாலிபம் தந்த சுகம்,

இளம் வயதினில் வந்த சுகம்!

அணைகள் வீட்டுக்குள்ளும் உண்டு, வெளியிலும் உண்டு.

இந்தப் பாடலில் வருவது, வீட்டுக்குள் உள்ள அணை, பஞ்சு + அணை = பஞ்சணை, பஞ்சினால் செய்யப்பட்ட படுக்கை, அதன்மீது தலை + அணை = தலையணை, தலைக்கென்று வைத்துக்கொள்ளும் (சிறு) படுக்கை.

வீட்டுக்கு வெளியே உள்ள அணை, ஆற்றில் வருகிற தண்ணீரைத் தேக்கிவைக்கிறது, பின் அதனை விவசாயத்துக்கோ மின்சாரம் எடுப்பதற்கோ பயன்படுத்த உதவுகிறது, இதனை ‘நீர்த்தேக்கம்’ என்றும் குறிப்பிடுவார்கள்.

இவை பெயர்ச்சொல் (Noun) அணைகள், இதுவே வினைச்சொல்(Verb)லாக வரும்போது ‘அணை’த்துக்கொள், தழுவிக்கொள் என்று கட்டளை வாசகமாகிவிடுகிறது.

இப்படி விதவிதமான பொருள்கள் அமைவதால்தானோ என்னவோ, கம்பனுக்கும் இந்த வார்த்தைமீது தனிக் காதல். ஓர் அற்புதமான பாட்டில் நான்கு அணைகளை ஒன்றன்கீழ் ஒன்றாக நிறுத்திவைத்திருக்கிறான்:

மிகவும் உணர்ச்சிமயமான காட்சி அது. வாலி வதைக்குப்பிறகு கிஷ்கிந்தைக்கு அரசனாகிவிட்ட சுக்ரீவனைச் சந்திக்கச் செல்கிறான் லட்சுமணன். அவனை வரவேற்கிறான் சுக்ரீவன், ‘ரொம்ப தூரம் நடந்து வந்திருப்பீங்க, கொஞ்சம் உட்கார்ந்து காபி, கீபி சாப்பிடுங்களேன்!’

லட்சுமணன் சுக்ரீவனைக் கோபமாகப் பார்க்கிறான், ’அங்கே காட்டில் என் அண்ணன் சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறான், நான் இங்கே நாட்டில் சவுகர்யமாக உட்கார்ந்து காப்பி சாப்பிடுவேனா? என்னையும் உன்னைப்போல சொகுசுக்கு அடிமை என்று நினைத்துவிட்டாயா?’ என்று மனத்துக்குள் நினைத்துக்கொள்கிறான். அங்கே வரும் பாட்டு:

’கல் அணை மனத்தினை உடைக் கைகேசியால்,

எல் அணை மணி முடி துறந்த எம்பிரான்,

புல் அணை வைக, யான் பொன் செய் பூத் தொடர்

மெல் அணை வைகவும் வேண்டுமோ?’ என்றான்.

முதல் வரியில் வரும் ‘கல் அணை’, கரிகாலன் கட்டியது அல்ல, கல் அணைய, கல் அனைய, கல்லைப் போன்ற மனத்தினைக் கொண்ட கைகேயி, அவள் வாங்கிய வரத்தால் …

இரண்டாவது வரியில் வரும் ‘எல் அணை மணி முடி’க்கு அர்த்தம், ‘ஒளி பொருந்திய கிரீடம்’, அதனைத் துறந்துவிட்டான் என் அண்ணன், ராமன்!

மூன்றாவது வரியில் வரும் ‘புல் அணை’ என்பது, நாம் மேலே பார்த்த ‘பஞ்சணை’க்கு எதிர்ப்பதம், அதாவது, புல்லால் ஆன படுக்கை, பஞ்சணைபோல் அது மெத்மெத் என்று இருக்காது, உறுத்தும், அதில்தான் ராமன் படுத்திருக்கிறான்.

அண்ணன் நிலைமை அப்படியிருக்க, பொன்னால் செய்து பூக்களைத் தூவிய இந்த ‘மெல் அணை’, அதாவது, மெல்லிய படுக்கையில், அல்லது அலங்காரமான இருக்கை(Guest Chair)யில் நான் உட்கார்வேனா?

அட! வரிசையாக நான்கு அணைகள் வைத்துக்கூட, லட்சுமணனின் அன்பு வெள்ளத்தைக் கட்டுப்படுத்தமுடியவில்லையே!

***

என். சொக்கன் …

26 04 2013

146/365