நவ(ல)க் கிரகம்

ஒரு நண்பரோடு பேசிக் கொண்டிருந்த போது, அவருக்கு ஜாதகத்தில் ஏதோ தோஷம் இருப்பதாகவும் அதனால் குறிப்பிட்ட கோயிலுக்குச் சென்று ஏதோ பரிகாரங்களைச் செய்ய வேண்டுமென்றும் கூறினார்.

நான் பொதுவாகவே ஜாதகங்களை பொருட்படுத்துவதில்லை. ஆண்டவன் அருள் இருந்தால் எல்லாம் நலமே என்பது என் கருத்து. அது சரி, என் கருத்தைப் பேசுவதற்கா இந்தப் பதிவு? இல்லவே இல்லை.

அறுபடை வீடுகள், முருகன் கோயில்கள், திருமால் ஆலயங்கள் என்று எல்லாம் வரிசைப் படுத்திய திரைப்படங்கள் நவகிரகங்களைப் பற்றி ஏதேனும் பாடல் எழுதியிருக்கிறதா என்று யோசித்ததன் விளைவே இந்தப் பதிவு.

நவக்கிரக நாயகி என்றொரு படம் கே.சங்கர் அவர்கள் இயக்கத்தில் வெளிவந்தது. நவகிரகங்களினால் உண்டாகும் பலன்களை வைத்து கதைகளை உருவாக்கி அந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தது. வெற்றிப்படமாக அமைந்த அந்தப் படத்தில் மெல்லிசை மன்னர் இசையில் கே.பி.அறிவானந்தம் எழுதிய பாடலொன்று நவகிரகங்களையும் அவைகளுக்குரிய அதிதேவதைகளின் கோயில்களையும் பட்டியல் இட்டது.

கிட்டத்தட்ட ஆறு நிமிடங்கள் ஓடும் இந்தப் பாடலை டி.எம்.சௌந்தரராஜன், பி.எஸ்.சசிரேகா, கோவை கமலா மற்றும் ஸ்ரீபதி ஆகியோர் பாடியிருந்தார்கள். வாருங்கள் பாடல் சொல்லும் தகவல்களைப் பார்க்கலாம். பாடலுக்கான ஒளிச்சுட்டி – http://youtu.be/GAE8cQ2dnoU

பாடல் வரிகளில் புலவர் கே.பி.அறிவானந்தம் கொடுத்த தகவல்களை நவகிரகங்களையும் சோதிடம் பற்றியும் அறிந்தவர்கள் விளக்கலாம். பாடல் வரிகள் எளிமையாகப் புரிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளன. இந்தப் பாடலின் மற்றொரு சிறப்பு ஒவ்வொரு கிரகத்துக்கும் ஒவ்வொரு விதமாக இசையமைத்திருக்கிறார் மெல்லிசை மன்னர். பாடல் வரிகள் மாற மாற ராகமும் தாளமும் மாறுவதைக் கேட்கலாம்.

உதயத்தில் ஒளி தந்து
உலகத்தை வாழ்விக்கும்
ஒப்பற்ற செஞ்சுடரைப் போற்றுவோம்
சிவமாகி திருமாலின் வடிவான நவகிரக தேவனை நாம் வாழ்த்துவோம்
ஆடுதுறை தனையின்று நாடுவோம்
அந்த சூரியனார் கோயிலிலே காணுவோம்
சந்ததமும் புகழ் தரும் வாழ்விலே
என்றும் செந்தாமரை மலர் கொண்டே வணங்குவோம்

சந்திர தேவனை சிந்தையில் நினைத்தால்
இந்த உலகினில் எந்தக் குறையுமில்லை
திருப்பதி மலை சென்று திருமாலின் பாதத்தில்
வெள்ளை மலர் தூவினால் துயரமில்லை
அதில் சந்திரனின் அருள் கிடைக்கும் ஐயமில்லை

ருத்ரமூர்த்தியின் வியர்வையில் வந்த
யுத்தபூமியின் தலைவனாம்
உக்ரமூர்த்தியாம் செவ்வாய் குகனுடன் பழனியில் இருப்பான் திடம் தரவே
செண்பக மலரால் வணங்குவோம் அவனருள் பெறவே
செவ்வாய் தோஷம் நீங்கிடும் மங்கையர் நலம் பெறவே

ஆயகலைகள் யாவும் அருள்பவன் புதனன்றோ
அவனருள் பெற்றார்க்கு வித்தையில் குறைவுண்டோ
தூய சொக்கநாதருடன் மதுரையில் அமர்ந்திட்டான்
துலங்கும் வெண்காந்தள் மலர் தந்தாள் அருள் புரிவான்

தேவரெல்லாம் துதிக்கும் பிரஹஸ்பதி
உன் திருவிழி பட்டாலே மாறும் தலைவிதி
ஸ்ருதியும் ஸ்ம்ருதியும் நீ தரும் வரமன்றோ
சொல்லிய ஞானமெல்லாம் நீ தரும் அறமன்றோ
திருச்செந்தூரிலே உன்னை தரிசித்தாலே போதும்
முல்லை மலர் கொண்டு பூஜித்தால் அருள் மேவும்

சுக்ரதிசையது முறையாய் வந்தால் செல்வம் குவிந்திடுமே
தக்க களத்திரம் பொன் பொருள் நவநிதி சேர்ந்து கிடைத்திடுமே
சீரங்கத்தில் திருவருள் செய்யும் தேவனை அனுதினமே
சீதள வெண்டாமரை மலரால் பணிந்தால் நலம் வருமே

வினைகளின் விளைவிங்கு விதியென்று பெயர் கொண்டு
சனிபகவான் வடிவாக வருமல்லவோ
சிறிய காகம் ஏறி பெரிய வாழை தந்த அனுபவம் புவிவாழ்வின் கதையல்லவோ
வருவோற்கு அருள் செய்யும் நள்ளாறிலே திருநள்ளாறிலே
குறை தீர்த்து அருளுவான் தீர்க்காயுளே
கருங்குவளை மலரோடு எள் தீபம் ஏற்றி
கழல் பணியலாம் என்றும் ஈஸ்வரனையே சனீஸ்வரனையே

ராகு கேது இரு தேவர் சென்றமரும் வீடு அவருடைய ?!?தியே
யோக காரகனும் மோட்ச காரகனும் நாகராஜன் வடிவாகுமே
நாகதோஷமது சூழும் போது அதை நீக்கி வைக்கும் திருகாளஹஸ்தி
கருமந்தாரை செவ்வல்லியோடு பணிந்தால் அருள்வாள் சிவசக்தி
பணிந்தால் அருள்வாள் சிவசக்தி பணிந்தால் அருள்வாள் சிவசக்தி

ஒன்பது கோள்களும் பலவித நல்வினைகளையும் தீவினைகளையும் நம் வினைப்பயன்களுக்கேற்ப கொடுக்குமானால் அதிலிருந்து தப்பிப்பது எப்படி? எந்தக் கோள் நம்மைக் கோவிக்கிறது எந்தக் கோள் நம்மை அரவணைக்கிறது என்பதெல்லாம் எப்படித் தெரிந்து கொள்வது? எதைச் செய்தால் எந்தப் பலன் கிட்டும்? எதைச் செய்யாவிட்டால் எந்தப் பாவம் தீண்டும்? இப்படிக் குழப்பும் கேள்விகளுக்கெல்லாம் என்ன விடை?

திருஞானசம்பந்தர் அதற்கும் நல்ல விடை சொல்லியிருக்கிறார். இதற்காக கோளறுபதிகம் என்றே ஒரு பதிகம் பாடியிருக்கிறார்.

வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனிபாம் பிரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவைநல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே

இதற்கு என்ன பொருள்?
மூங்கில் போன்ற தோளினை உடைய உமையவளை உடையனை
நீலகண்டத்து ஈசனை வீணைக் கலைஞனை
திங்களையும் கங்கையும் முடியில் சூடியவனை
நெஞ்சத்தில் அன்போடு வைத்த காரணத்தால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி ராகு கேது
ஆகிய கோள்கள் நல்ல பயன்களையே தரும்

இதே கருத்தை அருணகிரிநாதரும் கந்தர் அலங்காரத்தில் எடுத்துச் சொல்கிறார். முருகன் திருவடியைப் பணிந்தாரை “நாள் என் செயும்? வினைதான் என் செயும்? கோள் என் செயும்? கொடும் கூற்று என் செயும்?” என்று கேட்கிறார்.

உள்ளத்தில் அன்பும் அருளும் நிறைந்தால் எல்லாம் இன்பமயம் என்பது அருளாளர்கள் கருத்து.

அன்புடன்,
ஜிரா

145/365