காந்தர்வ மணம்

விட்டலாச்சார்யா படங்கள் பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும். ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் மனம் ஈடுபட்டு அவர்களே தீர்மானித்து செய்துகொள்வது காந்தர்வ மணம். இதில் பெரியவர்கள் சம்மதமோ துணையோ இருக்காது. நிலம் காற்று வானம் என்று இயற்கை மட்டும் சாட்சியாக நிற்கும் நிகழ்வு.

காந்தர்வ மணம் என்று கேட்டவுடன் துஷ்யந்தன் (ஷார்ட் நேம் துஷ்டன்) சகுந்தலையை மணந்து பின் மறந்த காளிதாசன் காவியம் ராஜா ரவி வர்மா ஓவியங்களோடு காட்சியாக விரிகிறது. அலைபாயுதே மாதவனும் ஷாலினியும் நினைவுக்கு வருகிறார்கள். இன்றைய ‘கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா இல்ல ஓடிப்போயி கல்யாணம்தான் கட்டிக்கலாமா’ எல்லாம் இந்த வகைதானோ என்று ஒரு சந்தேகம்.

திருமணம் பற்றி நிறைய திரைப்பாடல்கள் உண்டு. காந்தர்வ மணம் சொல்லும் பாடல்கள் தேடியதில் கிடைத்த இரண்டு பாடல்கள்.

குடியிருந்த கோயில் படத்தில் வரும் வாலி எழுதிய நீயேதான் எனக்கு மணவாட்டி பாடலில் ஆண் பாடும் வரிகள் http://www.youtube.com/watch?v=dSs1Q_MAN40

கண்கள் இருக்க தோரணம் ஏனோ

கைகள் இருக்க மாலைகள் ஏனோ

உள்ளம் இருக்க மணவறை ஏனோ

ஒரு மனதானால் திருமணம் ஏனோ

தோரணம் இல்லை மாலைகள் இல்லை மணவறை இல்லை. ஆனால் ஒரு மனதாகியதால் திருமணம் என்ற சடங்கே தேவையில்லை என்ற தொனி. அவளுக்கும் சம்மதம்தான். பல பிறவியில் சேர்ந்து வாழ்ந்தவர்கள்தானே, இறைவன் எழுதி வைத்ததுதானே என்று சரணடைகிறாள். இதற்கு சாட்சி ? அடுத்த சரணத்தில் கவிஞர் சொல்லும் அல்லி, சந்திரன், தாமரை, சூரியன் என்று பட்டியல். ஒரு இரவில் தொடங்கி விடியல் வரை… நிச்சயமாக இது காந்தர்வ விவாகம்தான்.

பாட்டும் பரதமும் என்ற படத்தில் கண்ணதாசன் எழுதிய மாந்தோரண வீதியில் என்ற பாடல் http://www.youtube.com/watch?v=UqnNOMbt-nM

மாந்தோரண வீதியில் மேளங்கள் ராகம்

மாப்பிள்ளை பெண்ணுக்கு ஏனிந்த மோகம்

மாப்பிள்ளை பெண் இருவரையும் அடையாளம் காட்டி தோரணம் கட்டி ஒரு காட்சியை விவரிக்கிறார். முதல் சரணத்தில் ஒரு பொடி வைத்தது போல் இருக்கிறது

பூவைக்கும் எனக்கும் நிச்சயதார்த்தம்

பூவினில் தேனீ சாந்தி முகூர்த்தம்

அட நிச்சயம் செய்தபின் நடக்கும் கல்யாணம் சொல்லவேயில்லையே? கதையில் வரும் காட்சிக்கு ஏற்ற கற்பனை.

ஆதித்யன் மேனியை மேகங்கள் மூட

ஆனந்த பூந்தென்றல் மோகனம் பாட

வசந்தத்தில் பாற்குடம் ஊர்வலம் போக

வந்து விட்டேன் கண்ணா மணமகளாக

என்று சரணத்தில் சூரியன், மேகங்கள் பூந்தென்றல் சாட்சியாக மணமகளாகிறாள். நிச்சயம் இதுவும் காந்தர்வ விவாகம்தான். சந்தேகம் இருந்தால் தொடர்ந்து கேளுங்கள்

ஆவியில் ஆவியை ஆண்டவன் சேர்க்க,

ஆனந்தம் நான் கொள்ள யாரிடம் கேட்க

நாங்கள் இருவரும் மனதால் இணைந்தபின் யார் அனுமதி தேவை என்ற கேள்வி. இன்றும் நம் எதிர்கொள்ளும் கேள்வி.

இதுபோல வேறு பாடல்கள் உண்டா? நீங்களும் சொல்லுங்கள்


மோகனகிருஷ்ணன்

144/365