மொட்டுக்கள் எத்தனை?

  • படம் : அலைகள் ஓய்வதில்லை
  • பாடல் : ஆயிரம் தாமரை மொட்டுக்களே
  • எழுதியவர் : வைரமுத்து
  • இசை : இளையராஜா
  • பாடியவர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி
  • Link : http://www.youtube.com/watch?v=BjDNaKe5Yoc

ஆயிரம் தாமரை மொட்டுக்களே, வந்து
ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களேன்!

அதென்ன ஆயிரம் தாமரை மொட்டுக்கள்? இரண்டாயிரமாக இருக்கக்கூடாதா? பத்தாயிரம் என்று சொல்லக்கூடாதா? லட்சம், கோடி என்று எண்கள் இல்லையா? இங்கே ஏன் குறிப்பாக ஆயிரத்தைச் சொல்கிறார் கவிஞர்?

’ஆயிரம்’ என்பது மெட்டுக்குக் கச்சிதமாகப் பொருந்துகிறது. ஆனால் அதைக்காட்டிலும் முக்கியமான ஒரு காரணம் உண்டு.

பொதுவாக நம்முடைய தினசரிப் பயன்பாட்டில் வரும் ‘ஆயிரம்’ என்பது, 999க்குப்பிறகு வரும் ஓர் எண். அதைத் தாண்டி அதற்கு எந்த முக்கியத்துவமும் இல்லை.

ஆனால், அதே ஆயிரம் தமிழ்க் கவிதைகளில் வரும்போது, ‘பல’ என்கிற அர்த்தத்தைப் பெறுகிறது. அதாவது, இருபதும் ஆயிரம்தான், இருநூறும் ஆயிரம்தான், இரண்டாயிரம் கோடியும் ஆயிரம்தான்.

சாட்சி வேண்டுமா? அப்பர் சொன்னால் ஒப்புக்கொள்வீர்களா? இதே ‘ஆயிரம் தாமரை’ என்ற வரிகளோடு தொடங்கும் அவரது பாடல் ஒன்று இங்கே:

ஆயிரம் தாமரை போலும்
ஆயிரம் சேவடியானும்!
ஆயிரம் பொன்வரை போலும்
ஆயிரம் தோள் உடையானும்!
ஆயிரம் ஞாயிறு போலும்
ஆயிரம் நீள்முடியானும்!
ஆயிரம் பேர் உகந்தானும்
ஆரூர் அமர்ந்த அம்மானே!

திருவாரூரில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே,

உனக்கு ஏகப்பட்ட திருவடிகள் உண்டு, அவை அனைத்தும் ஆயிரக்கணக்கான தாமரைகளைப்போலச் சிவந்துள்ளன.

அதேபோல், உனக்கு ஏராளமான தோள்கள் உண்டு, அவை ஆயிரக்கணக்கான பொன் மலைகளைப்போல் வலுவோடு மின்னுகின்றன.

உனக்கு ஏராளமான திருமுடிகள் உண்டு, அவை அனைத்தும் ஆயிரக்கணக்கான சூரியன்களைப்போல் பிரகாசிக்கின்றன.

திருவடிகள், தோள்கள், திருமுடிகளைப்போலவே, உனக்குப் பல பெயர்களும் உண்டு, அவற்றை நாங்கள் பாடித் துதிக்கிறோம்.

’சிவனுக்கு ஒரு தலை, இரண்டு தோள்கள், இரண்டு கால்கள்தானே உண்டு, அப்புறம் எப்படி ஆயிரம் வந்தது?’ என்று கால்குலேட்டரும் கையுமாகக் கேள்வி கேட்காதீர்கள், இங்கே ஆயிரம் என்பது 999க்குப்பின் வரும் எண் அல்ல.

சந்தேகமிருந்தால் ‘ஆயிரம் பொய்யைச் சொல்லி ஒரு கல்யாணம் செய்’ என்று சொல்கிறவர்களிடம் கேளுங்கள், ‘உங்க கல்யாணத்துக்கு எத்தனை பொய் சொன்னீங்க?’

நிச்சயம் ஆயிரமாக இருக்காது. நூற்று இருபத்தைந்துக்குள்தான் இருக்கும்!

***

என். சொக்கன் …
23 04 2013

143/365