மனக்கோயில்
மீனவ நண்பன் படம் வெளியாகும் நேரத்தில் எம்.ஜி.ஆர் தமிழ்நாட்டின் முதல்வராகவே ஆகியிருந்தார். இத் திரைப்படத்தில் எல்லாப் பாடல்களுமே இனிமையானவை. அதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது “தங்கத்தில் முகமெடுத்து” என்று தொடங்கும் காதற்பாடல்.
தங்கத்தில் முகமெடுத்து
சந்தனத்தில் உடலெடுத்து
மங்கையென்று வந்திருக்கும் மலரோ
நீ மாலை நேரப் பொன்மஞ்சள் நிலவோ
பாடல் – கவிஞர் முத்துலிங்கம்
பாடியவர்கள் – வாணி ஜெயராம், கே.ஜே.ஏசுதாஸ்
இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
படம் – மீனவ நண்பன்
பாடலின் சுட்டி – http://youtu.be/LUF4NzXhMbk
இந்தப் பாடலில் காதலி பாடுவதாக வரும் ஒரு வரி என்னுடைய கவனத்தை ஈர்த்தது.
எந்தன் மனக்கோயிலில் தெய்வம் உனைக் காண்கிறேன்
உந்தன் நிழல் போலவே வரும் வரம் கேட்கிறேன்
அதாவது காதலியின் உள்ளமே கோயிலாம். அந்தக் கோயிலிலே குடியிருக்கும் கடவுள் காதலனாம். அந்தக் காதலின் நிழலாய்த் தொடர்ந்து வருவதற்கு அந்தக் காதலன் என்னும் கடவுள் அருள் செய்ய வேண்டும்.
அடிமைத்தனமான காதல் போலத் தெரிகின்றதா? என்ன செய்வது? ஒவ்வொரு காதலும் ஒவ்வொரு வகை.
கவிஞர் முத்துலிங்கம் இப்படி எழுவதற்கு இரண்டு நூற்றாண்டுகளுக்கும் முன்னார் ஒருவர் எழுதினார். அவரும் காதலினால்தான் எழுதினார். ஆனால் அது மனிதர் உணர்ந்துகொள்ள மனிதக் காதல் அல்ல. ஆம். கடவுள் மேல் கொண்ட அன்பு.
ஆம். அவர் தான் தாயுமானவ சுவாமிகள். ”எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே” என்று பாடிய அன்புள்ளமே தாயுமானவ சுவாமிகள்.
இவர் இறைவன் மீது கண்ணிகள் அமைத்துப் பாடினார். அதாவது இரண்டிரண்டு அடிகளாக அமையும் பாடல்கள். ஈசனாரைப் பராபரமே என்று அழைத்துப் பாடிய கண்ணிகளுக்குப் பராபரக் கண்ணிகள் என்றே பெயர் அமைந்தது.
இவர் காலத்தில் மதங்களுக்கிடையே நிறைய பிணக்குகள் இருந்தன. குறிப்பாக வைணவ-சைவப் பிணக்குகள். அவைகளை மிகவும் வெறுத்திருக்கிறார். அதனால்தான் இறைவன் பெயரைக் கூடப் பொதுவாகக் குறிப்பிடாமல் பராபரமே என்று குறிப்பிட்டு பாடியுள்ளார். இவர் பாடல்களில் சித்தர் பாடல்களின் தாக்கம் தெரியும்.
அப்படிப் பட்ட தாயுமானவ சுவாமிகளிடம் பொன்னும் பொருளும் இல்லை. மண்ணும் கல்லும் சுண்ணாம்பும் இல்லை. அதற்காக இறைவனுக்குக் கோயில் கட்டாமல் இருக்க முடியுமா?
கட்டினார் ஒரு கோயில். அதில் நடத்திக் காட்டினார் ஒரு பூசை.
நெஞ்சகமே கோயில் நினைவே சுகந்தம் அன்பே
மஞ்சன நீர் பூசைகொள்ள வாராய் பராபரமே
நெஞ்சமே கோயில். அந்த நெஞ்சில் எழும் இறைவனைப் பற்றிய நினைவுகளே சுகந்தம். ஆண்டவன் மீதுள்ள அன்பே மஞ்சன நீர். இவைகளை வைத்துச் செய்யப்படும் வழிபாட்டை ஏற்க வருவாய் இறைவா!
அங்கு காதலியும் நெஞ்சமாகிய கோயிலில் ஒரு கடவுளைக் கண்டாள். ஒரு துறவியும் நெஞ்சத்தில் கடவுளைக் கண்டார். காதலிக்குக் அன்பனே கடவுள். துறவிக்கு கடவுளே அன்பன்.
அன்புடன்,
ஜிரா
278/365
uma chelvan 8:35 pm on September 5, 2013 Permalink |
விழி வாசல் தனை கடந்து வழி முழுதும் தெரிந்தவர் போல் குழைவாக மன கோயில் குடி புகுந்தாரே!!………….. . எங்கோ பிறந்த வராம் எங்கோ வளந்த வராம், எப்படியோ என் மனதை கவர்ந்தவராம் . very very beautiful song in the movie Bommai. Please listen and enjoy the honey suckle voice of P.Susheela in Ragam “Sahana”
Rajan 6:40 am on September 6, 2013 Permalink |
எந்தன் மனக்கோயில் சிலையாக அமர்ந்தாளம்மா
மலரோடு மலராக மலர்ந்தாளம்மா
கனவென்னும் தேர் ஏறி பறந்தாளம்மா
காற்றோடு காற்றாக கலந்தாளம்மா
பாலும்பழமும் கண்ணதாசன்