பதினாறும் பெருகப் பெறுக!
- படம்: நினைத்ததை முடிப்பவன்
- பாடல்: பூ மழை தூவி வசந்தங்கள் வாழ்த்த
- எழுதியவர்: புலமைப்பித்தன்
- இசை: எம். எஸ். விஸ்வநாதன்
- பாடியவர்: டி. எம். சௌந்தர்ராஜன்
- Link: http://www.youtube.com/watch?v=T_6j9hdwKu8
ஒரு பதினாறும் தான் பெற்று நீ வாழ,
அதைப் பார்க்கின்ற என் உள்ளம் தாயாக!
மிகப் பிரபலமான திருமண வாழ்த்து இது, ‘பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க!’
அதென்ன பதினாறு? நிச்சயம் பதினாறு குழந்தைகளைப் பெறுவதாக இருக்கமுடியாது, பதினாறு வகைச் செல்வங்களை அடைதல் என்பதுதான் சரியான விளக்கம் என்று எல்லாருக்கும் தெரியும்.
ஆனால், அந்தப் பதினாறு செல்வங்கள் எவை என்பது தெரியுமா? அப்படியே தெரிந்தாலும், அவற்றை நினைவில் வைத்துக்கொள்வது எப்படி?
பிரச்னையில்லை, அபிராமி பட்டர் எழுதிய ‘திருக்கடவூர் அபிராமியம்மை பதிகம்’ என்ற நூலில் அந்தப் பதினாறு செல்வங்களும் ஒரே பாடலில் தரப்பட்டுள்ளன. அதைப் படித்துத் தெரிந்துகொண்டால், அடுத்தமுறை இப்படி வாழ்த்தும்போது அர்த்தம் புரிந்து சொல்லலாம்:
கலையாத கல்வியும், குறையாத வயதும், ஓர் கபடு வாராத நட்பும்,
கன்றாத வளமையும், குன்றாத இளமையும், கழுபிணி இலாத உடலும்,
சலியாத மனமும், அன்பு அகலாத மனைவியும், தவறாத சந்தானமும்,
தாழாத கீர்த்தியும், மாறாத வார்த்தையும், தடைகள் வாராத கொடையும்,
தொலையாத நிதியமும், கோணாத கோலும், ஒரு துன்பம் இல்லாத வாழ்வும்
துய்ய நின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய்,
அலை ஆழி அறிதுயிலும் மாயனது தங்கையே, ஆதி கடவூரின் வாழ்வே,
அமுத ஈசர் ஒரு பாகம் அகலாத சுக பாணி அருள்வாய் அபிராமியே!
அபிராமி அன்னையே, அலைகடலில் உறங்கும் மாயன் திருமாலின் தங்கையே, பழமை நிறைந்த திருக்கடவூரின் வாழ்வே, அமுத ஈசன் உன்னை விட்டு விலகாமல் எப்போதும் ஒருபக்கம் பொருந்தியிருக்கிறவளே,
- கலையாத கல்வி
- நீண்ட ஆயுள்
- வஞ்சகம் இல்லாத நட்பு, நண்பர்கள்
- நிறைந்த செல்வம்
- என்றும் இளமை
- நோயற்ற உடல்
- சலிப்பற்ற மனம்
- அன்பு நீங்காத மனைவி / கணவன்
- குழந்தைப் பேறு
- குறையாத புகழ்
- சொன்ன சொல்லைக் காப்பாற்றும் தன்மை
- பிறருக்குக் கொடுக்கும் எண்ணம், அப்படிக் கொடுப்பதற்குத் தடைகள் இல்லாத சூழ்நிலை
- நிலைத்த செல்வம்
- நேர்மையாக ஆட்சி செய்யும் அரசன் (தான் நேர்மையாக வாழ விரும்பும் உள்ளம் என்றும் எடுத்துக்கொள்ளலாம்)
- துன்பம் இல்லாத வாழ்க்கை
- உன்மேல் எப்போதும் அன்பு
இந்தப் பதினாறு செல்வங்களையும் எனக்குத் தருவாய், அதோடு, உன்னுடைய பக்தர்களுடன் என்றென்றும் கலந்து பழகி மகிழும் வரத்தையும் அருள்வாய்!
***
என். சொக்கன் …
20 04 2013
140/365
Adaimazai Group 12:43 pm on April 20, 2013 Permalink |
மிகத் தெளிவான விளக்கம்…
தங்களின் அனைத்து தொகுப்புகளும் மிக அருமை.
பாடல்களை பற்றி எழுதும் போது அதன் ராகத்தையும் குறிப்பிட்டால் மிகவும் நன்றாக இருக்கும்…
சொக்கன், மோகன கிருஷ்ணன், ஜிரா மற்றும் எல்லா ஆசிரியர்களுக்கும் எங்கள் அடைமழை சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்….
என். சொக்கன் 1:17 pm on April 20, 2013 Permalink |
நன்றி 🙂
எனக்கு ராகங்கள் தெரியாது, அதுபற்றித் தெரிந்தவர்கள் விவரம் சொன்னால் உரிய இடத்தில் சேர்த்துவிடுகிறேன்.
Ananth 2:44 pm on April 20, 2013 Permalink |
பாடலில் ‘கழுபணி’ என்று உள்ளதே. அது ‘கழுபிணி’ இல்லை??
என். சொக்கன் 2:51 pm on April 20, 2013 Permalink |
அது தட்டச்சுப்பிழை, மன்னிக்கவும், சரி செய்துவிட்டேன், சுட்டிக்காட்டியதற்கு நன்றி
Ananth 2:56 pm on April 20, 2013 Permalink |
எனக்கு அந்த பாடல் தெரியும் ஆனால் அவை தான் 16 செல்வங்கள் என்று தெரியாது. பதிவுக்கு நன்றி 🙂
rajinirams 11:39 am on April 21, 2013 Permalink |
அருமையான விளக்கம்.நன்றி.
amas32 8:04 pm on April 21, 2013 Permalink |
/அதைப் பார்க்கின்ற என் உள்ளம் தாயாக! / என்ன அருமையான ஒரு வரி. தாய்மையின் சிறப்பை அந்த ஒரு வரியில் சொல்லிவிடுகிறார் பாடலாசிரியர். அனைத்து வரங்களையும் பெற்று தன் சேய் மகிழவேண்டும் என்பதே எல்லா தாய்மார்களின் ஒரே பிரார்த்தனை. பதினாறு செல்வங்களையும் பெற்று பெறு வாழ்வு வாழ வேண்டும் என்ற நல்ல உள்ளம் ஒரு தாய்க்கு ஈடானது என்று ஒரே வரியில் உணர்த்திவிடுகிறார்.
amas32
GiRa ஜிரா 1:48 pm on April 22, 2013 Permalink |
அருமை. அருமை. பத்திப் பதிவுக்குள்ளும் காலடி எடுத்து வைத்த உங்களை வரவேற்கிறேன்.
கலையாத கல்வியும் ஒருவிதத்தில் சினிமா பாடல்தான். ஆம். திருமலை தென்குமரி படத்தில் சீர்காழி கோவிந்தராஜன் பாடி நடித்திருப்பார்.