சந்தோஷக் குப்பை

  • படம்: யூத்
  • பாடல்: சந்தோஷம், சந்தோஷம்
  • எழுதியவர்: வைரமுத்து
  • இசை: மணி ஷர்மா
  • பாடியவர்: எஸ். பி. பாலசுப்ரமணியம்
  • Link: http://www.youtube.com/watch?v=PljReF6wMps

உள்ளம் என்பது, கவலைகள் நிரப்பும்

குப்பைத்தொட்டி இல்லை!

உள்ளம் என்பது பூந்தொட்டி ஆனால்

நாளை துன்பம் இல்லை!

நண்பர் மோகன கிருஷ்ணனுடன் நேற்று ஒரு சின்ன விவாதம். எழுத்தாளர் ஒருவருடைய படைப்புகளைக் ‘குப்பை’ என்று நான் விமர்சிக்க, அவர் செல்லமாகக் கோபித்துக்கொண்டார், ‘எனக்கும் அவருடைய எழுத்துகள் பிடிக்காது, ஆனால் அதற்காக அவற்றைக் குப்பை என்று சொல்வது நியாயமில்லை!’

நானும் ஏட்டிக்குப் போட்டியாக அவருக்குப் பதில் சொன்னேன், ‘எனக்குப் பிடிக்காததைக் குப்பை என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்வது?’

அதன்பிறகுதான் யோசித்தேன், தமிழில் ‘குப்பை’ என்பது உண்மையில் கேவலமான பொருளைக் கொண்ட வார்த்தை இல்லையே, அதன் அர்த்தம் ‘குவியல்’தானே?

உதாரணமாக, ‘அழகின் சிரிப்பு’ நூலில் பாரதிதாசனின் வர்ணனை ஒன்று இப்படிச் செல்கிறது:

அருவிகள், வைரத் தொங்கல்!

….அடர்கொடி, பச்சைப் பட்டே!

குருவிகள், தங்கக் கட்டி!

….குளிர்மலர், மணியின் குப்பை!

எருதின்மேல் பாயும் வேங்கை

….நிலவுமேல் எழுந்த மின்னல்,

சருகெலாம் ஒளிசேர் தங்கத்

….தகடுகள் பாரடா நீ!

இங்கே ‘மணியின் குப்பை’ என்றால், விலைமதிக்கமுடியாத மணிகள் நிறைந்த குவியல் என்று அர்த்தம், மலர்க் குவியலை மணிக் குவியலுக்கு ஒப்பிடுகிறார் பாரதிதாசன்.

கம்ப ராமாயணத்தில் தொடங்கி இப்படி நிறைய உதாரணங்கள் காட்டமுடியும், ’குப்பை’ என்ற சொல்லுக்குப் பொருள், குவியல், செல்வக் குப்பை, ரத்தினக் குப்பை, காய்கறிக் குப்பை, நெல் குப்பை, மலர்க் குப்பை…

ஆனால் இன்று நாம் ‘குப்பை’ என்றாலே வீசி எறியப்படவேண்டிய, பயனற்ற ஒன்று என்ற அர்த்தத்தில்தான் பயன்படுத்துகிறோம், ‘உப்பில்லாப் பண்டம் குப்பையிலே’ என்று பழமொழிகூட இருக்கிறது.

அது சரி, ‘இவர் முப்பது வருஷமா இந்தக் கம்பெனியில குப்பை கொட்டியிருக்கார்’ என்பதுபோன்ற வாசகங்களின் அர்த்தம் என்னவாக இருக்கும்? குப்பைக்கு இழிவான பொருள் இருந்தால், இந்த இடத்தில் பொருந்தாதே, முப்பது வருஷமாக இவர் செய்ததெல்லாம் வீண் என்ற அர்த்தம் வந்துவிடுமே!

வயலில் வேலை செய்கிறவர்கள் பயிரை (அதாவது, விளைச்சலின் பலனை) அறுவடை செய்து ஓரமாகக் குவிப்பார்கள், அதாவது, கொட்டிக் குப்பையாக்குவார்கள். அதுபோல, இந்த அலுவலகத்தில் அவர் முப்பது வருடங்களாகப் பல நல்ல பணிகளைச் செய்து குவித்திருக்கிறார், குப்பை கொட்டியிருக்கிறார்!

முக்கியமான குறிப்பு, இது அகராதிப் பொருள் அல்ல, என்னுடைய சுவாரஸ்யமான ஊகம்மட்டுமே, உங்களுடைய கருத்துகளை எதிர்பார்க்கிறேன்!

***

என். சொக்கன் …

17 04 2013

137/365