பசி தீரப் பாடினோர்

  • படம்: உனக்காக  நான்

  • பாடல்: இறைவன் உலகத்தை படைத்தானாம்

  • எழுதியவர்: கண்ணதாசன்

  • இசை: எம் எஸ் விஸ்வநாதன்

  • பாடியவர்: கே ஜே ஜேசுதாஸ்

  • Link: http://www.inbaminge.com/t/u/Unakkaga%20Naan/Iraivan%20Ulagathai.eng.html

இறைவன் உலகத்தை படைத்தானாம்

ஏழ்மையை அவன்தான் படைத்தானாம்

ஏழையை படைத்தவன் அவனென்றால்

இறைவன் என்பவன் எதற்காக

இறைவன் இங்கே வரவில்லை

எனவே நான் அங்கு போகின்றேன்

வறுமை முழுவதும் தீர்ந்த பின்னே

மறுபடி ஒரு நாள் நான் வருவேன்

இந்த வரிகளைக் கேட்டவுடன் நமக்கு பாரதியின் இனியொரு விதி செய்வோம் பாடல் நினைவுக்கு வரும். வறுமை பார்த்து பொங்கி ‘தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்’ என்று கோபமாக பாடிய வரிகள்.  பாரதி இதை ஏன் எப்போது பாடினான்?

நீலகண்ட பிரம்மச்சாரி ஏழரை ஆண்டுகள் சிறைவாசம் விடுதலை பெற்றவுடன் சென்னைக்கு வந்தார். தங்க இடம் இல்லை. உணவு கொடுக்க யாருமில்லை. பிச்சை எடுக்க ஆரம்பித்தார். அவருடைய மனதில் “இது என்ன கேவலமான பிழைப்பு?” என்ற எண்ணம் தோன்றி பிச்சைக்குச் செல்வதையும் நிறுத்தி விட்டார். ஏதாவது சாப்பிடக் கிடைக்குமா என்று நினைத்து பாரதியைத் தேடிவந்தார். இவரின் கோலம் கண்டு அதிர்ச்சியில் உறைந்த பாரதி முதலில் சாப்பிட வைக்கிறார்.

அப்போது பாரதியின் உள்ளத்தில் இருந்து வந்த உணர்ச்சி மிக்க பாடல் இது. எனக்காக பாரதி ஒரு பாடலை பாடிவிட்டானே” என்று மனம் நெகிழ்ந்தார் நீலகண்டன். பாரதியின் மரணத்தில் கலந்துகொண்ட வெகு சிலரில் நீலகண்டனும் ஒருவர்.

கண்ணதாசன் பாடல் ஒரு தொழிற்சங்கவாதி பாடுவதாக அமைந்தது. பாரதி சொன்ன இரு வேறுலகம் பற்றி இவரும் சொல்கிறார். ஆனால் கோபம் மிகுந்து அடங்கி ஒரு விரக்தி நிலையில் இந்த பாடல் வருவதால் ஜகத்தினை அழிப்பது சாத்தியமில்லை என்று உணர்ந்து ‘ என்னை விடுங்கள் நான் போகிறேன் இந்த கொடுமை இல்லாத நிலை இருந்தால் மீண்டும் வருகிறேன் என்று சொல்கிறார்.

பாரதியின் கோபம் மனிதர்களின் மேல்தான் மனிதர் நோக மனிதர் பார்க்கும்  வாழ்க்கை மேல் கோபம். ஆனால் கண்ணதாசனின் விரக்தி கலந்த கோபம் இறைவன் மேல் ‘ஏழையை படைத்தவன் அவனென்றால் இறைவன் என்பவன் எதற்காக’ என்கிறார்.

ஏதேன் தோட்டத்தில் ஏவாள் இல்லாமல் கூட ஆதாம் வாழ்ந்திருக்க முடியும் ஆனால் ஆப்பிள் இல்லாமல் ஒரு நாள்கூட உயிரோடிருந்திருக்க முடியாது.என்று இணையத்தில் படித்தது நினைவுக்கு வருகிறது. ஆயிரம் வார்த்தைகளை விடவும் ஒரு பிடி சோறு அதிக நெருக்கம் உண்டாக்கிவிடக்கூடியது.

இதில் கோபம் தாண்டி ஒரு பார்வை வள்ளலார் சொல்வது – வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்கிறார் இராமலிங்க அடிகளார். தண்ணீர் இன்றி வாடியிருக்கும் பயிர்களைப் பார்க்கும்போதெல்லாம் என்னுடைய மனம் வாடுகிறது. பசியினால் இளைத்தவர்கள், ஒவ்வொரு வீடாகக் கெஞ்சிக்கேட்டும் பசி தீராமல் களைத்துப்போன ஏழைகளைப் பார்த்து என் உள்ளம் பதைபதைக்கிறது. நீங்காத நோயினால் அவதிப்படுகிறவர்களை நேருக்கு நேர் பார்க்கும்போது என் நெஞ்சம் துடிக்கிறது.இவர்களெல்லாம்கூடப் பரவாயில்லை. பசியால் வயிறு காய்ந்தாலும் இணையில்லாத மானம்தான் பெரியது என்று நினைக்கிறவர்கள், அதனால் யாரிடமும் பிச்சை கேட்காமல் சுயமரியாதையோடு பட்டினி கிடக்கிறவர்கள், அவர்களைப் பார்க்கும்போது, நானும் இளைத்துப்போகிறேன் என்கிறார்.

(http://365paa.wordpress.com/2011/09/30/087/)

மக்களின் மிகுந்த துயரங்களுள் ஒன்றான பசியை போக்கிட வள்ளலார் வழி வகுத்தார். இன்றளவும் வள்ளலார் பெயரால் லட்சக்கணக்கான மக்களுக்கு பசியாற்றப்படுகிறது.   வள்ளுவன் அற்றார் அழிபசி தீர்த்தல் என்று சொன்னதும் இதுவே பசியைப் பொறுத்துக் கொள்ளும் நோன்பைக் கடைபிடிப்பதைவிட பசித்திருக்கும் ஒருவருக்கு உணவு அளிப்பதே சிறந்தது இல்லையா?

மோகனகிருஷ்ணன்

135/365