விருந்தினர் பதிவு : வருடிக் கொடுக்கும் வார்த்தைகள்

அவமானப் படுத்தினால், வலிக்கும். பலமான உள்காயத்தால், முகம் சுருங்கும், உடல் குறுகும். கோபம் கொந்தளிக்கும். கண்கள் சிவக்கும், அழுகையும் எட்டிப்பார்க்கும். எல்லாம் சரி. உதாசீனம் செய்யப்பட்டால்?

Indifference is the worst form of insult என்று சொல்வார்கள். ஒருவருடைய இருப்பையே கண்டுகொள்ளாமல் விடுவது, அவமானப்படுத்துவதின் உச்சம் ஆகும். அது நிகழும்போது, பாதிக்கப்பட்டவர் அடைவது வெறும் அவமானமல்ல. அவமானத்தில் கோபம் வரக்கூடும். ஆனால் உதாசீனம் – அதுவும் தான் மதிக்கும் ஒருவரால் உதாசீனம் செய்யப்பட்டால், தன்மீதே கோபம் வரும்; “இன்னும் நான் ஏன் உயிருடன் இருக்கவேண்டும்” என்றுகூட நினைக்க வைக்கும்.

அந்த எண்ணம் பிறந்தால், இயல்பு நிலைக்குத் திரும்புவது ரொம்பவே சிரமம் தான். அருகில் இருந்து ஆறுதல் சொல்ல யார் இருப்பார்கள்? யார் சொன்னால் ஆறுதல் கிடைக்கும்? என்ன வார்த்தைகளை, எப்படிச் சொன்னால் ஆறுதல் கிடைக்கும்? நீங்கள் வெகு சுலபமாக,

வலிமை சேர்ப்பது தாய்முலைப் பாலடா!
மானஞ் சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள்

என்று பாரதியாரே சொல்லிவிட்டாரே என்பீர்கள். உதாரணமும் எளிதாகச் சொல்லிவிடுவீர்கள். வீர சிவாஜிக்கு, அந்த வீரம் வரக்காரணமே குழந்தைப் பிராயத்தில் இருந்தே, அவருடைய அம்மா ஜீஜாபாய் அவரை வளர்த்த விதம்தான் என்று சொல்வீர்கள்.  ஆனால், வளர்ந்து, அதிலும் சிறப்புகளைச் சுமந்து நிற்பத்தோடு பெரிய பொறுப்பிலும் இருப்பவர்களுக்கு, உதாசீனத்தை எதிர்கொள்ள அம்மா சொல்லும் கதைகள் எப்படிப் போதும்?

அதிலும், அம்மாவும் அப்பாவும் யார் என்றே தெரியாத நிலையில், அதையே காரணம் காட்டி பாண்டவர்களும் மற்றவர்களும் இகழ்ந்தபோது கர்ணனுக்கு நேரிட்டது – அவமானம் மட்டும்தான். நல்லவேளையாக, துரியோதனன் தலையிட்டு, அவனை ஒரு அரசனாகவும் அமர்த்தியபின், கர்ணன் பெற்றது மனச் சமாதானம் தான். கூடவே வளர்ந்தது, பாண்டவர் மீது, பெரும் சீற்றமும் தீராப்பகையும்; துரியோதனனிடம் செஞ்சோற்றுக் கடனும்.

பின்னால், கொடைசிறப்பால் புகழின் உச்சிக்கே எடுத்துச்செல்லப் பட்டவன் கர்ணன். அம்மா யார் என்பது தெரியாதது, ஒரு பெரிய மன உறுத்தல்தான். இருந்தாலும், துரியோதனின் நட்பால் கிடைத்த அரச பதவியும், அது கொடுத்த பொறுப்புகளும், ‘கொடையில் சிறந்தவன் கர்ணன், ‘அர்ஜுனனையும் வீழ்த்தக்கூடிய வில்லாளி போன்ற மற்ற பெருமைகளும் கர்ணனை சகஜமாக வைத்திருக்க உதவியது.

கர்ணன் திரைப்படத்தில், சகஜமாக மட்டுமல்ல, கம்பீரமாகவும் உலாவந்த கர்ணனை இந்த உதாசீனம் பாடாய் படுத்தியது. திரைக்கதைப்படி, கர்ணனுடைய காதலி, துரியோதனின் ஆட்சிக்கு கீழிருக்கும் ஒரு சிற்றரசனின் மகள். துரியோதனன் சிற்றரசனைக் குடும்பத்துடன் அழைத்துவந்து, அவருடைய மகளை, அங்க தேசத்தின் அரசனான கர்ணனுக்கு கல்யாணம் செய்து வைத்துவிடுவான்.

அப்போது முளைக்கிறது, அந்த ட்விஸ்ட். கர்ணனின் வளர்ப்புத் தந்தை, சிற்றரசனை நேரில் கண்டு மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்ளுகிறான். அப்போது தான், தன்னுடைய மாப்பிளை ஒரு தேரோட்டியின் மகன் என்று தெரிந்துகொண்டு சிற்றரசன் கொதிக்கிறான். கர்ணனுக்குத் தெரியாமல், மகளை தன்னுடைய வீட்டிற்கே கடத்திப் போய்விடுகிறான். இது தெரியாமல், சகஜமாக பேசிக்கொண்டே மாமனார் வீட்டுக்குள் நுழையும் கர்ணனை, ‘நீ கீழானவன், நீ குதிரைச்சாதி’ என்று சொல்லி உதாசீனப் படுத்துகிறான். கொதிப்புடன் திரும்புகிறான் கர்ணன்.

கர்ணனுடைய ஆங்காரத்திற்கு இன்னொரு முக்கியமான காரணம் இருந்தது.  மனைவியிடம் பேச விரும்பிய கர்ணனிடம், ஒரு மூடிய திரைக்குப் பின்னால் இருந்து, அவளுடைய அப்பாவை ஆதரித்து வந்த அவனுடைய மனைவியின் குரல்தான் அவனை மிகவும் குன்றிக்குறுக வைத்தது.

சினத்தின் உச்சியில் சிறுமைப்பட்டு தன் வீடு திரும்புகிறான் கர்ணன். அப்போது, அவனை வரவேற்கும் மனைவியிடம் சுள்ளென்று சாடுகிறான். (அவள் எப்படி முன்னாலேயே அங்கே வந்துவிட்டாள்? அதுவும் ஒரு சுவாரஸ்யமான விஷயம்தான்)  அவள், படிப் படியாக அவன் சினத்தைத் தணிக்கிறாள். முதலில், திரைக்குப்பின் இருந்து வந்த குரலின் காரணத்தை விளக்குகிறாள். கர்ணன் கொஞ்சம் சகஜநிலைக்கு வருகிறான். தன்னுடைய குரலில் பேசும் திறமையுள்ள தோழியின் குரலை உபயோகித்து, நிலைமை ரசாபாசம் ஆகிவிடாமல் தடுத்த மனைவியைப் பாராட்டவும் செய்கிறான், கர்ணன்.

ஆனால், ஆசுவாசம் கொண்டவனை ஆவேசப் படுத்துகிறது, அவள் தன்னுடைய தேரோட்டும் திறமையை பீற்றிக்கொண்ட விதம்! “தேரோட்டுவதில் நான் ஏற்கனவே திறமைசாலி. இப்போது ஒரு தேரோட்டியின் மகனுக்கும் மனைவி ஆகிவிட்டேன்…” வெடிக்கிறான், கர்ணன்.  மறுபடியும் குமுறுகிறான்.

அப்போது கண்ணதாசனின் வரிகள் கர்ணனைக் குளிர்விக்கின்றன. கொஞ்சம் கொஞ்சமாக அமைதி பெற்று, கர்ணன் தன் மீசையை ஒரு மந்தகாசத்தோடும், பெருமிதத்தோடும் தடவிக் கொள்கிறான்.

மானம் சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள். எல்லா வார்த்தைகளுமேவா? ம்ஹூம். வருடிக்கொடுத்து உசுப்பேற்றி, பதட்டத்தைத் தணித்து, கர்வம் சேர்க்கும் வார்த்தைகளுக்கு அந்த சக்தி உண்டு. இதோ இந்த வரிகளையும் பாருங்கள். J

பாலினில் இருந்து நெய் பிறக்கும் – கண்ணா

பரம் பொருள் கண்டே உயிர் பிறக்கும்

வீரத்தில் இருந்தே குலம் பிறக்கும் அதில்

மேல் என்றும் கீழ் என்றும் எங்கிருக்கும்?

கொடுப்பவர் எல்லாம் மேலாவார் – கையில்

கொள்பவர் எல்லாம் கீழாவார்

தருபவன் இல்லையோ கண்ணா நீ

தருமத்தின் தாயே கலங்காதே

 

கண்ணுக்கு குலமேது.. கண்ணா

கருணைக்கு இனமேது

என்ன எழுதினாலும், முழுத்தாக்கமும், காட்சியில் தான் கிடைக்கும். B.R.. பந்துலுவின் இயக்கத்தில்,  கண்ணதானும், விஸ்வநாதன்-ராமமூர்த்தியும், சிவாஜியுடன் இணைந்து நிகழ்த்தும் சாகசம் இதோ:

  1. Last 5-6 minutes from this:    http://www.youtube.com/watch?v=6pBWrbxGb-g
  2. And, First 7-8minutes of this:     http://www.youtube.com/watch?v=lSrFQtH0OCM

 பி. வி. ராமஸ்வாமி

ரீடெய்ல் துறையில் பல வருடங்கள் பணியாற்றிய அனுபவஸ்தர் பி. வி. ராமஸ்வாமி, ’ஜார்ஜ் ஆர்வெல்’லின் புகழ் பெற்ற நாவலான ‘விலங்குப் பண்ணை’யை அருமையான நடையில் தமிழாக்கம் செய்திருக்கிறார், தமிழ் இணையத்தில் நல்ல படைப்புகள் எங்கு தென்பட்டாலும் தேடிச் சென்று பாராட்டுகிற நல்மனத்துக்காரர்.

https://twitter.com/to_pvr