அன்பாலே அழகாகும் வீடு

எண்பதுகளின் துவக்கத்தில் மெர்க்குரிப் பூக்கள் நாவலில் வீடென்று எதனைச் சொல்வீர் என்ற மாலனின் கவிதை வந்தபோது ரசித்து நண்பர்களுடன் House Vs Home என்று விவாதித்தது உண்டு. இன்றும் முதல் வரியைச் சொன்னதும் சட்டென்று உடனே நினைவுக்கு வரும் கவிதை.

வீடென்று எதனைச் சொல்வீர்?

அது இல்லை எனது வீடு.

ஜன்னல் போல் வாசல் உண்டு.

எட்டடிக்கு சதுரம் உள்ளே

பொங்கிட மூலை ஒன்று புணர்வது மற்றொன்றில்

நண்பர்கள் வந்தால் நடுவிலே குந்திக் கொள்வர்

தலை மேலே கொடிகள் ஆடும் கால்புறம் பாண்டம் முட்டும்

கவி எழுதி விட்டுச் செல்ல கால்சட்டை மடித்து வைக்க

வாய் பிளந்து வயிற்றை எக்கிச் சுவரோரம் சாய்ந்த பீரோ……

இப்போது யோசித்தால் இந்த கவிதை பாதியில் நின்றது போலிருக்கிறது. வெறும் சோகம் சொல்லும் Status Update. தொடர்ந்து காணி நிலமும் பத்துப் பனிரெண்டு தென்னைமரமும் கேட்ட பாரதியார் போல ஒரு கனவையோ இலட்சியத்தையோ சொல்லி முடித்திருக்கலாம்.

திரைப்பாடல்களில் வீடு பற்றி சில அழகான பாடல்கள். பாண்டவர் பூமி படத்தில் வரும் விரும்புதே மனசு விரும்புதே என்ற சினேகன் எழுதிய பாடல் பாரதியின் காணி நிலம் கனவைப்போலவே அமைந்த வரிகள்.

http://www.inbaminge.com/t/p/Paandavar%20Bhoomi/Virumbudhae%20Manasu%20Virumbudhae.eng.html

கவிஞன் வழியில் நானும் கேட்டேன்

கவிதை வாழும் சிறு வீடு

விரும்புதே மனசு விரும்புதே

ஒரு பக்கம் நதியின் ஓசை

ஒரு பக்கம் குயிலின் பாஷை

ஒரு பக்கம் தென்னையின் கீற்று

ஜன்னலை உரசும்

என்று தொடங்கி தென்றல் வாசல் தெளிக்கும், கொட்டும் பூக்கள் கோலம் போடும் , நிலா வந்து கதைகள் பேசும், பறவைகள் தங்க மரகத மாடம், தங்க மணித்தூண்கள் என்று – சனிக்கிழமை Property Plus விளம்பரம் போல வர்ணனைகள்.

பூவெல்லாம் உன் வாசம் படத்தில் வைரமுத்துவின் பாடல் ஒன்றில் சில சுவாரஸ்யங்கள்.

http://www.inbaminge.com/t/p/Poovellam%20Un%20Vaasam/Chella%20Namm%20Veetuku.eng.html வானவில்லை கரைச்சு வண்ணம் அடிக்கலாம், தோட்டத்தில் நட்சத்திரம் பூக்கும் செடி என்று அதீத கற்பனைகளோடு தொடங்கும் பல்லவியில் ஒரு ட்விஸ்ட் வைத்து

அட கோயில் கொஞ்சம் போரடித்தால்

தெய்வம் வந்து வாழும் வீடு

காற்று வர ஜன்னலும் செல்வம் வர கதவும் என்று வசீகரமான வாஸ்து சொல்கிறார். மறு ஜென்மம் இருந்தால் இதே வீட்டில் அட்லீஸ்ட் நாய்க்குட்டியாக பிறக்க வரம் வேண்டுகிறார். காரணம்?

எங்கள் இதயம் அடுக்கி வைத்து இந்த இல்லங்கள் எழுந்ததம்மா

நீ சுவரில் காது வைத்தால் மனத் துடிப்பு கேட்குமம்மா

பசங்க படத்தில் யுகபாரதியின் பாடல் சொல்வதுதான் மிகவும் சரியானதென்று தோன்றுகிறது

http://www.inbaminge.com/t/p/Pasanga/Anbaale%20Azhagagum%20Veedu.eng.html

அன்பாலே அழகாகும் வீடு

ஆனந்தம் அதற்குள்ளே தேடு

சொந்தங்கள் கை சேரும்போது

வேறொன்றும் அதற்கில்லை ஈடு

வாடகை வீடே என்று

வாடினால் ஏது இன்பம்

பூமியே நமக்கானது

என்று எளிமையான பாசிடிவ் பார்வை. அன்பும் சொந்தங்களும் இருந்தாலே வீடு இனிமையாகும் – தென்னைமரம், தென்றல், நிலா வெளிச்சம், நட்சத்திரம் பூக்கும் செடி, கிளப் ஹவுஸ், நீச்சல் குளம், ஜிம் எல்லாம் இரண்டாம் பட்சம் தான்.

மோகன கிருஷ்ணன்

126/365